தொடர்கள்
தொடர்கள்
தொலையாதே என் கனவே- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

2023000519025240.jpg

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் காதல்புத்திரன். வயது60.

கனத்த உடல் திரேகம்.

வயதுக்கு பொருந்தாத அடர்த்தி கோரை முடி தலைகேசம்.
வெறுமையையும் ஏக்கங்களையும் தனிமைகளையும் சொல்லி அழும்
கண்களை மறைக்கும் குளிர்கண்ணாடி. லாக்டோ காலமைன் நிறத்தில்
முந்திரிப்பழ மூக்கு. கம்பி மீசை. உலகின் எல்லா அசைவ
அயிட்டங்களையும் ருசிக்கத் துடிக்கும் வாய். பிரச்சார நெடியடிக்கும் குரல்.
காதல்புத்திரனுக்கு இரண்டு வயதில் கண்பார்வை போயிற்று. தான் ஒரு
மாற்றுத்திறனாளி என்கிற தாழ்வுமனப்பான்மை அவருக்கு அறவே
கிடையாது. தினமும் வாழ்க்கையை விதவிதமான உற்சாக பானங்களால்
கொண்டாடுவார். திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி.
“வாத்தியாரே! வாத்தியாரே!” கூவிக்கொண்டு ஓடி வந்தான்
கும்பகோணத்தான். காதல் புத்திரனின் கவிதைகளில் மயங்கி அவருக்கு
அல்லக்கை ஆனவன். நடிகர் மார்த்தாண்டம் சாயலில் இருப்பான்.
“வா அண்டாங்காக்கா!”
‘பார்க்க ராஜபார்வை கமல்மாதிரி இருக்கீங்க வாத்தியாரே!”
“பாராட்டுவது இருக்கட்டும்… கிரீன் லேபிள் விஸ்கி புல்பாட்டில் இரண்டு
வாங்கிட்டு வரச் சொன்னேனே… வாங்கிட்டு வந்துட்டியா?”
“வாங்கிட்டு வந்திட்டேன். நான் சொல்லவந்த விஷயத்தை சொல்ல
விடுங்க… அடுத்த மாதம் சென்னைல புத்தக கண்காட்சி தொடங்குதாம்!”
“சரி…”
“தமிழ்நாட்ல ஒரு லட்சம் எழுத்தாளர்களும் பத்து லட்சம் கவிஞர்களும்
இருக்காங்க… எல்லாரும் காஞ்சு கிடக்க ஒருபத்து எழுத்தாளர்களும் ஒரு
பத்து கவிஞர்களும் மஞ்சள் குளிக்றாங்க. அவங்களின் மஞ்சகுளிப்புக்கு
காரணம் அந்த குறிப்பிட்ட படைப்பாளிகளின் வாய்ஜாலமும் கைஜாலமும்
தான்… சந்திரமோகன் எழுத்தாளரை எடுத்துக்கங்க. ஒரு எழுத்தாளர் நல்ல
எழுத்தாளரா கெட்ட எழுத்தாளரான்னு அவர்கிட்ட போய் சர்டிபிகேட்

வாங்கனுமாம். செத்துப்போன எழுத்தாளர்களின் எலும்புகளை தோண்டி
எடுத்து பிடிச்சா புனிதநீர் தெளிப்பார் பிடிக்கலேன்னா அமிலத்தை அள்ளி
கொட்டுவார். நோபல் பரிசுகளை கூட தன் தகுதிக்கு குறைவானது என்பதால்
மற்ற எழுத்தாளர்களுக்கு விட்டுத் தருவதாக அள்ளி விடுவார். அவரை
நம்புறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு!”
“சந்திரமோகனை பத்தி மோசமா காமென்ட் அடிக்கிறன்னு அவர்கிட்ட
சொல்லித்தரவா?”
“நான் என்ன அவர்கிட்டயா அல்லக்கையா இருக்கேன்? உங்ககிட்டதான…
தாராளமா சொல்லுங்க… எனக்கொண்ணும் பயமில்லை!”
“மேல போ மேல போ…”
“அபுனைவு இலக்கியம் எழுதுற பொன்ஜிதாவை எடுத்துக்கங்க. அவர்
தமிழுக்கு மட்டன் பிரியாணி ஊட்டுபவர். ட்ரஸ்க்கும் ஷுக்கும் கூட
ஸ்பான்ஸர் பிடிக்ற ஒரே எழுத்தாளன். பிராமணர்களின் மடியிலேயே
உக்காந்து கொண்டு பிராமணர்களை வசைபாடுவார். உலக எழுத்தாளர்கள்
நூறு பேர் பெயரை மனப்பாடம் செய்து கொண்டு பிழைப்பை ஓட்டுபவர்.
பொன்ஜிதா ஒரு இலக்கியதாதா…”
“அடப்பாவி.. போனவாரம் அவரோடு சேர்ந்து தண்ணி அடிக்கும் போது
இந்திரன் சந்திரன்னு பாராட்னியே..”
“இல்லேன்னா வார்த்தையாலேயே அடிப்பார்.. ஹிஹி அதுக்குதான்…”
“நீ பிழைச்சிக்குவடா…”
“கா.மாயவனை எடுத்துக்கங்க. ‘வன்மம்மிக்க வண்ணாரப்பேட்டை’
என்கிற தலைப்பில் கூட ஆயிரம் பக்கம் எழுதிடுவார். எழுத்து பட்டறை ஒரு
அம்பது பேரைவச்சு நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்து விடுவார். இவரை
பாராட்டி மாசம் பத்து மீம்களாவது வந்துடும். மீம்களை இவர் தயார்
பண்றாரா ஆள்வச்சு தயார் பண்றாரா அல்லது நிஜமாகவே மாயவன்
வெறியன்கள் தயார் பண்ணி விடுரான்களா என்பது மில்லியன் டாலர்
கொஸ்டின். ஆனா இவர் ஒரு லட்சரூபா நோட்டு. தங்கத்தை தங்கமா காட்டி
விக்ரார்…”
“கா.மாயவன் ஒரு பசுமாதிரி சாதுடா..”
“தியா ராஜதுரை ஒரு கதை சொல்லி. சொந்தமாக பதிப்பகம்
நடத்துகிறார். சந்திரமோகனின் கதைகளை பிரபலபடுத்தியவர் இவரே.
ஜனரஞ்சகமாக கதை சொல்லுவதில் கில்லாடி. இவரை பார்த்து இப்போது
நூறுகதை சொல்லிகள் வந்துவிட்டார்கள். இவரும் சொந்தமாக எழுதுவார்.
லாபி பண்ணி லாபி பண்ணி ராட்சசமாக வளர்ந்து நிற்கிறார். சினிமாவிலும்
துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்!”

“பிரேமா சோபு கூட க்ளப்ஹவுஸில் கதை சொல்கிறாரே!”
“அடுத்த கில்லாடி கில்ட்டனை பார்ப்போம். இனியன் ‘மாயஉலகம்’
என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்தியாவில் எங்கு திரைப்படவிழா
நடந்தாலும் முதல் ஆளாக அங்கு போய் நிற்பார். கேரளபெண்
எழுத்தாளருடன் கோவா பெண் எழுத்தாளருடன் மேற்குவங்க பெண்
எழுத்தாளருடன் போஸ் கொடுப்பார். ‘துகில்’ எனும் சிறுபத்திரிகை
நடத்துகிறார்..”
“இனியனை போட்டுத்தள்ளிட்ட அடுத்து?”
“சில எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி தொடர்பை வைத்துக் கொண்டு
போடுற ஆட்டமிருக்கே காண கண்கோடி வேண்டும்…”
“பிடிக்கலேன்னா கண்ணை மூடிக்க!”
“தலித் லேபிளை வச்சுக்கிட்டு சில எழுத்தாளர்கள் பிற்படுத்தபட்ட
வகுப்பினர் லேபிளை வச்சுக்கிட்டு சில எழுத்தாளர்கள் செமகுத்தாட்டம்
போடுகிறார்கள்!”
“சமந்தா மாதிரி ஆடறாங்களா?”
“இந்த தேவதைகள் திருவிளையாடல்களை பாத்திட்டு சில குட்டி
துர்தேவதைகள் இவர்களின் லாபிகளை இலக்கிய தாதாதனங்களை
நகலெடுக்கின்றனர். நான் இந்திரன் நான் சந்திரன்னு தெருவுல குறுக்கமறுக்க
ஓடினா வெகுஜனத்தின் கவனத்தை ஈர்த்து விடலாம் என்கிற இவர்களின்
பார்முலா அட்டகாசமாக வேலை செய்கிறது..’‘
“எல்லாவற்றையும் பத்தி சொன்ன. என்னுடைய நெகடிவ்
விஷயங்களை சொல்ல மாட்டாயா?”
“வாத்தியாரை பத்தி சிஷ்யன் உளறுவானா?”
“பரவாயில்லைடா சொல்லு… காதுகுளிர கேக்கிறேன்!”
“ஒரு கட்சியின் அனுதாபியாக இருந்து உறுப்பினராக மாறி
பரமசிவனின் கழுத்து பாம்பாகி விட்டீர்கள்… உங்களுக்கு ஆயிரம் பெண்
தோழிகள் இருப்பதாக பீற்றிக் கொள்வீர்கள். ஆனால் நிஜத்தில் ஒரு
வங்கிழவி கூட உங்களுக்கு பெஸ்ட்டியாக இல்லை. வசனங்களை ஒடித்து
போட்டும் டைரியில் கிறுக்கினவற்றையும் கவிதை என்பீர்கள். பதிப்பகம்
நடத்தியும் சிறுபத்திரிகை நடத்தியும் இலக்கிய உலகில் தொடர்ந்து சில
காய்கள் நகர்த்துவீர்கள். பேஸ்புக்கும் ட்விட்டரும் இன்ஸ்டாவும் உங்களுக்கு
மீன் மார்க்கெட். டிவி விவாதமேடைகளில் கலந்து கொண்டு கிஜேபி
உறுப்பினரை விட இரண்டு மடங்கு அதிகமாக கத்துவீர்கள்!”
“போதும்டா போதும்டா… ஸேம்சைடு கோல் போடாதே!”

“கம்மிங் பேக் டு தி பாய்ன்ட்.. புத்தககண்காட்சி உங்களை மாதிரி
இலக்கியதாதாக்கள் பலிங்சடுகுடு ஆட ஏற்ற இடம். நீங்க இந்த புத்தக
கண்காட்சிக்கு ஒரு வேலை பண்ணனுமே…”
“என்ன பண்ணனும் சொல்லு…”
“எண்பது பக்கத்ல நூறு பக்கத்ல கவிதை புத்தகம் அறுபது எழுபது ரூபா
விலைல போட்டு ஆயிரம் ரெண்டாயிரம் பாக்றது அந்த காலம். இப்பல்லாம்
ஆயிரம் ரெண்டாயிரம் பக்கத்ல பெரிய தலையணை சைஸ் இரண்டாயிரம்
ரூபா விலைக்கு புக் போடனும். ஸ்டால் முன்னாடி உக்காந்துக்கிட்டு
ஆட்டோகிராப் போட்டு போட்டு புக்கை விக்கனும். சில பந்தா பார்ட்டிகள்
தலையணை சைஸ் புக்கை வாங்கிட்டு போய் வீட்ல தூசி படற போட்டு
வச்சிரும்கள்.. அதனால நீங்க ஒரு மூவாயிரம் பக்கத்ல ஒரு கவிதை
தொகுப்பு போடுறீங்க!”
“கண்காட்சிக்கு இன்னும் அம்பது நாள்தான் இருக்கு. எப்டிடா
மூவாயிரம் பக்கம் ரெடி பண்றது?”
“உங்களுக்கு முப்பது நாப்பது வருஷமா டைரி எழுதுற பழக்கம்
இருக்கே… டைரில கிறுக்னதை பூராவும் எடிட்பண்ணி போட்ருவம்..”
“கவிதை தொகுப்புக்கு தலைப்பு?”
“முத்தமிடவா?”
“வேற தலைப்பு..”
“சொப்ன ஆலிங்கனம்…”
“ம்ஹிம்.. ‘தொலையாதே என் கனவே’ இது எப்டிடா இருக்கு?”
“சூப்பர்… இந்த தொகுப்பை ஒரு பாய்பெஸ்ட்டி தன் தோழிக்கு
வாங்கித்தரலாம். ஒரு கள்ளக்காதலி ஒரு கள்ளக்காதலனுக்கு வாங்கித்
தரலாம். வெள்ளிவிழா திருமணநாளில் கணவன் மனைவிக்கும் மனைவி
கணவனுக்கும் இந்த தொகுப்பை வாங்கித்தரலாம். தான் ஒரு தலையாய்
காதலித்த பெண்ணுக்கு திருமணமாகும் போது திருமண பரிசாய் தரலாம்.
இந்த தொகுப்பு ஒரு காதல் பண்டமாற்று என விளம்பரம் செய்யலாம்!”
“எத்தனை பிரதி விக்கும்னு நினைக்ற?”
“தொப்பிக்காரன் ஒரு தொப்பியை தூக்கிப் போட மரத்துமேல இருந்த
எல்லா குரங்குகளும் தொப்பிகளை தூக்கி போட்ட மாதிரி மக்கள் புக்கை
வாங்குவாங்க. ஒரு பிரதிவிலை மூவாயிரம் ரூபாய். 500பிரதி வித்தா
பதினைஞ்சு லட்சம் ஆயிரம் பிரதி வித்தா முப்பது லட்சம் லம்ப்பா
பாத்திரலாம். ஒரே ஆள் பத்து பிரதி கேட்டு முப்பதாயிரம் ரூபாயை ஜிபேல
போட்டு விட்ட மாதிரியும் காதல்லயும் காமத்லயும் ஈடுபடுற ஆண்பெண்கள்
புத்தகத்தை வாங்க முண்டியடிக்ற மாதிரியும் புரபகாண்டா பண்ணுவோம்.

இந்த புத்தகத்தை வாங்கலன்னா காதலுக்கு எதிரானவன் /வள் என்கிற
அவப்பெயர் வந்து விடுமோன்னு பயந்து மக்கள் வாங்கனும்..”
“எனக்கு குழப்பமா இருக்கு கும்பகோணத்தான்!”
“யாமிருக்க பயமேன் வாத்தியாரே!”
“சரிடா… எறங்கி துவம்சம் பண்ணுடா..”
டைரிகளுக்கு நடுவே புகுந்து கவிதைகளை தேட ஆரம்பித்தான்
கும்பகோணத்தான்
கண்ணே!
கொரேனா தடுக்க
நீ அணிந்து வீசிய முகஉறையில்
உன் உமிழ்நீருடன் உன் மூச்சுக்காற்றும் உன் வியர்வை வாசனையும்
எடுத்து நான் அணிந்து கொள்கிறேன்
என் சுவாசத்தில் மன்மத மகிழம்பூ

காதல் புத்திரன்
14.022022 இரவு 12.08 மணி

-தொகுப்பு தயாரானது. தொகுப்புகள் கிப்ட் பேக் பண்ணப்பட்டு
டெம்போவில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.
கும்பகோணத்தான் தவிட்டுக்குருவி போல பறந்து வந்தான் “நாம
மோசம் போயிட்டோம் வாத்தியாரே… நாம மோசம் போயிட்டோம்!”
“என்னடாச்சு?”
“சந்திரமோகன் பத்தாயிரம் பக்கங்கள்ல ‘சாண்டில்யன்களின்
ஜலக்கிரீடைகள்’ புத்தகம் பத்தாயிரம் ரூபாய் விலைல போட்ருக்கார்.
‘தமிழனின் இன்னொரு ஆதார் அட்டை சாண்டில்யன்களின் ஜலக்கிரீடைகள்
வாங்கி உங்கள் அடையாளங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்’. என
விளம்பரம் வேற!”
காதல்புத்திரன் ‘ஞே’ என விழித்தார்