தொடர்கள்
பொது
நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலா - மாலா ஶ்ரீ

20230006235611472.jpg

கடலில் மிதக்கும் சொகுசுக் கப்பல்கள் நூற்றுக்கும் மேல். அது செல்லும் தூரங்களும் அதிகம்.

கடல் ஒரு புறம் இருக்க, நம் அனைவருக்கும் ஆற்றில் படகு பயணம் என்பதும் ரொம்பவே பிடிக்கும். அதுவும், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பாய்ந்தோடும் நதிகளில் சொகுசு கப்பலில் நீண்ட தூர பொழுதுபோக்கு சுற்றுலா எனில், நெல்லை ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வாவை அப்படியே விழுங்குவது போலிருக்குமே! வெளிநாடுகளைப் போல், இந்தியாவிலும் 2 நதிகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை மத்திய அரசு மிக விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ரூகர் வரை செல்லும் 'கங்கா விலாஸ்' எனும் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை வரும் 13-ம் தேதி வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் 'கங்கா விலாஸ்' எனும் சொகுசு சுற்றுலா கப்பல், இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை, பிரம்மபுத்ராவை இணைக்கும் வகையில் காஜிப்பூர், பங்க்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்கதேசம் வழியாக மொத்தம் 3,200 கிமீ தூரத்தை மொத்தம் 50 நாட்களில் பயணம் செய்து, அசாம் மாநிலத்தின் திப்ரூகரை மார்ச் 1-ம் தேதி சென்று சேருகிறது.

வங்கதேசத்தில் மட்டுமே இந்த சொகுசு கப்பல் 15 நாட்கள் பயணிக்கிறது. வழிநெடுகிலும் சுந்தர்பன் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் காசிரங்கா தேசிய பூங்காவில் சுதந்திரமாக சுற்றி திரியும் வனவிலங்குகள் மற்றும் மரங்கள் அடர்ந்த இயற்கை எழிலை ரசித்தபடியே சொகுசு கப்பலில் ரசித்தபடியே பயணம் செய்யலாம். இந்த சொகுசு கப்பல் 3 தளங்கள் கொண்டது. இதில் 18 கேபின்கள் உள்ளன. எல்இடி டிவி, நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான வசதிகள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் வசதியாக பயணம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த சொகுசு சுற்றுலா கப்பலை அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற 2 தனியார் நிறுவனங்கள் மத்திய அரசுடன் இணைந்து இயக்கும் வகையில் உடன்படிக்கை செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பயணிகளுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. தனிநபர் கட்டணம் ₹25 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம். 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் சுற்றுலா குழுவினருக்கு சிறப்பு தள்ளுபடி கட்டணங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலா