தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 66- ஆர் . ரங்கராஜ்

20230006202357925.jpg

பணக்கோயில் எழுப்பிய வேந்தனும் மனக்கோயில் எழுப்பிய வேதியரும் -- இருதயாலீஸ்வரர் திருக்கோயில், திருநின்றவூர் .

பல்லவ மன்னர்களின் தலை நகரமாக விளங்கிய காஞ்சியில் மன்னராக இருந்தவர் காடவர் கோன் என்று அழைக்கப் பெற்ற இராஜசிம்ம பல்லவன். இராஜசிம்ம பல்லவ மன்னன் சிவனுக்கு மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பினான். . அதற்கு கயிலாசநாதர் ஆலவம் என்றும், இராஜசிம்மேஸ்வரம் என்றும் பெயரிட்டான்.

கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்து ஊரே தயார் நிலையில் இருந்தது. விடியற்காலை கும்பாபிஷேகம். மன்னன் இராஜ சிம்மன், யாராலும் கட்டமுடியாத கோவிலைத் தான் கட்டி முடித்ததை எண்ணிப் பெருமையுடன் சிறிது நேரம் கட்டிலில் படுத்தான்.

"உறங்கும் அரசன் ஓர் கனவு கண்டான். ஒரு கற்றை ஒளி அவன்பால் விழுகிறது. உடனாக அசரீரிக் குரல் ஒலியும் எழுந்தது." "அன்பனே நீ கும்பாபிஷேகம செய்யப்போகும் கோயிலுக்கு நாளை நாம் வருவதாக இல்லை. திருநின்றவூரில் நம் அன்பன் ஒருவன் நெடிது நாட்களாக நினைந்து கட்டி முடித்த கோயிலில் விடியலில் கும்பாபிஷேகம். நாம் அங்கு எழுந்தருளுகின்றோம். ஆதலின், நீ வைத்திருக்கும் கும்பாபிஷேக நாளை இன்னொரு நாளில் வைத்துக்கொள்க' என்று கூறி அக்குரலோசை மறைந்தது," அந்தக்காட்சியை விவரிக்கிறார், திரு. ம. அன்பழகன், வரலாற்றுத்துறை, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி , செய்யாறு.

உறக்கத்திலிருந்து எழுந்த மன்னன் திடுக்கிட்டான். கும்பாபிஷேகத்தை நிறுத்த ஆணையிட்ட அரசன் உடனே திருநின்றவூர் செல்ல முடிவெடுத்தான். மன்னன், அரசமாதேவி, அமைச்சர் ஆகியோர் பரிவாரங்கள் திருநின்றவூரை அடைந்தனர். "பொழுது புலரும் விடியல், பொற்கோழி கூவுகிறது. எங்கும் ஒரே இருள். கோயிலும் எதன்படவில்லை. அரசன் முதலானோர் வைபவத்திற்கான விசேடங்கள் ஒன்றும் தெரியவில்லை. அரசன் முதலானோர் திகைத்து நின்றனர்."

அமைச்சர் ஊர் மக்களிடம் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் எங்குள்ளது என்று கேட்டார். பூசலார் கோயில் கட்டியுள்ளாரா? அவர் ஓர் ஏழைப் பிராமணர், சிவப்பித்தர், ஆகாரமின்றி ஒரு இலுப்பை மரத்தடியில் கிடப்பார் என்று கூறினார்கள். மன்னரும் மற்றவர்களும் பூசலார் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

"பணக்கோயில் எழுப்பிய வேந்தனும், மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரையொருவர் கண்டனர். நீங்கள் யார் என்று கேட்பது போல் உணர்ந்த அரசர், அரனார் ஆலய குட முழுக்கைத் தரிசிக்க வந்துள்ளோம் என்று மெல்ல புலப்படுத்தினார்."

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)