தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 19 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

இரவும் நிலவும் வளரட்டுமே..
கர்ணன் திரைப்படத்திற்காக பாடல் எழுதுவதற்காகவும் இசையமைப்பதற்காகவும் விஸ்வநாதன் ராமமூர்த்தி கவியரசு கண்ணதாசன் ஆகிய கூட்டணி பெங்களுர் சென்று அங்கே உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். பி.ஆர்.பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கிய இப்படம் புராணக் கதையைத் தழுவியிருந்ததால், பாடல்கள் வெற்றி பெற்றால்தான் திரைப்படமும் வெற்றிபெறும் என்பதை முன்னதாகவே அறிந்திருந்தார்கள். அதற்காக இசை அமைப்பாளர்கள் இரட்டையர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவருக்குமான தொகையை இன்னதென்று நிர்ணயம் செய்யாமல், இசைவடிவம் பெறுதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியாததால், ஒரு பிளாங்க் காசோலையைத் தந்து எப்படியாவது பாடல்களை அமைத்துத் தாருங்கள் என்று சொல்ல.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் வட இந்தியாவிலிருந்து பிஸ்மில்லா கான் போன்ற இசைக்கலைஞர்களைத் தருவித்து அருமையான பாடல்களை உருவாக்கிய வரலாறு இப்படத்திற்கு உண்டு!


கண்ணதாசன் விஸ்வநாதன் இருவரிடையே எப்போதும் ஒரு விளையாட்டு இருந்துகொண்டே இருக்கும் என்பதால் இவர்கள் இருவரும் அவர்களாக பாடல் எழுத அமரும்வரை ஏனைய படக்குழுவினர் அதில் தலையிடமுடியாத நிலையில்.. பெங்களுர் சென்று மூன்று நான்கு நாட்கள் ஆனபின்னரும் பாடல் உருவாக்கத்திற்காக அமரவே இல்லையாம். நான்காம் நாள் மாலை சுமார் 4.00 மணி வாக்கில் பாடல்கள் எழுதத் தொடங்கி அன்றைய இரவுக்குள் கர்ணன் படத்திற்குத் தேவையான அனைத்துப் பாடல்களும் எழுதப்பட்டதுடன் இசைக்கோர்வையும் வடிக்கப்பட்டன என்பது இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பின் உச்சம் தெரியும்! இன்னுமொரு செய்தி என்னவென்றால் இப்படத்திற்கான பாடல்கள் பலவற்றிலும் இந்துஸ்தானி வகையில் இசையமைக்கப்பட்டவை!


இதோ இந்தப் பாடல் இரவும் நிலவும் வளரட்டுமே.. ஒரு மென்மையான காதல் பாடல்தான்! பால்நிலா பவனிவந்த இரவு நேரத்தில்.. கர்ணன் உப்பரிகையில் அமர்ந்து நிலவைப் பார்க்க.. அதில் அவனது காதலி தோன்றி அவனை அழைக்கிறாள். காதல் பாடல் கண்முன் விரிகிறது!


வயலினிசையும் வீணை இசையும் முழங்க காதலர்கள் சந்திக்கும் வேளையின் ஆலாபனைகளாக.. தேவலோகக் கந்தர்வக் குரல் கொண்ட டி.எம்.செளந்திரராஜன் அவர்களும் பி.சுசீலா அவர்களும் இன்பகானம் வழங்க.. பாடல் தொடங்குகிறது!


மதுர கானம் மனதை மயக்க வயலின், வீணை ஆகிய இசையின்பம் ஊட்டியபின் தொடரும் சாரங்கியும் ஷெனாயும் பரவசமான அமுதகானத்தை அள்ளிவழங்குகின்றன!
கர்நாடகாவில் உள்ள கலைநுட்பம் மிகுந்த கல்தூண்களுடன் ஆன கோவில்களின் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள்! புல்லாங்குழல், சாராங்கி, சந்தூர் என பல்வேறு இசைக்கருவிகளின் இனிய விளைச்சலில் இன்பநாதம் பொங்கிவரும் கீதமாக!! சுத்தசாரங் என்று சிலரும் ஹம்சானந்தி என்று சிலரும் இப்பாடலின் ராகத்தைக் ‘கூறுகின்றனர்.


ஏதோ ஒரு ராஜ லீலைக் காட்சிக்கு பாடல் எழுதித் தந்ததுபோல்.. கண்ணதாசனின் கற்பனைக்கு வானமே வசப்படும் எனும்போது புராணக் காட்சிகள் என்ன விதிவிலக்கா? எழுதிவைத்த ஓவியத்தை இசையின் வாயிலாக எடுத்துச் சொல்லும் விசித்திரம் இங்கே நடக்கிறது! வளரட்டுமே என்று பல்லவி முடிகிற ஒவ்வொரு முறையும் சுசீலா குரலின் நீட்டல் ஒரு அலங்காரத்தையல்லவா செய்துவிடுகிறது!
பாடலின் இடையே வரும் இரவும் நிலவும் வளரட்டுமே
பெண்:
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஆண்:
தரவும் பெறவும் உதவட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இருவரும்:
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
பெண்:
இரவும் நிலவும் வளரட்டுமே…ஏ..ஏ..ஏ..ஏ…
பெண்:
மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
ஆண்:
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
பெண்:
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
ஆண்:
நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே
இருவரும்:
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
பெண்:
இரவும் நிலவும் வளரட்டுமே…ஏ..ஏ..ஏ..ஏ…
பெண்:
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
ஆண்:
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
பெண்:
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
ஆண்:
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இருவரும்:
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும்
பெண்:
வளரட்டுமே…ஏ..ஏ..ஏ..ஏ…


பாடல்: இரவும் நிலவும் வளரட்டுமே
படம்: கர்ணன்
பாடியவர்: P. சுசீலா, T.M. சவுந்தரராஜன்
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964