தொடர்கள்
கதை
கதாசிரியர் சுப்புசாமி - புதுவை ரா.ரஜனி

20221124094141606.jpg

ஓவியம் - மணி ஶ்ரீகாந்தன் - இலங்கை


இன்னும் கதவு திறக்கவில்லை. கோமுப்பாட்டி இதுவரை 18 முறை கணவரின் பள்ளியறையை எட்டி எட்டிப் பார்த்துவிட்டாள். ஒரு சப்தம்கூட இல்லை.

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். ஆனால், பூனை பலம் கொண்ட சுப்புசாமிக்கு? பாத்ரூமில் அந்தர் பல்டி கில்டிஅடித்து விட்டாரா?

'ஒரு சிற்றெறும்புமீது ஒரு புல்டோசர் ஏறினால்கூட அதில் ஏதோ காரண காரியம் இருக்கிறது' என்று சிந்திப்பவள் பாட்டி. இருந்தாலும் டீப் கல்ச்சர் - பத்தினிப் பெண் போன்ற விவகாரங்களில் அவள் நாட்டம் இல்லாமல் இருந்தாலும் தற்போதையநிலையில் தனது மாங்கல்யத்தை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டாள். நெற்றிப்பொட்டில் வியர்வைத் துளிகள்.


‘ஒருவர் உள்ளே இருக்கும்போது கதவை அனாவசியமாகத் தட்டுவது என்பது அநாகரீகம்!’ என்பதை அவள் அறிவாள். இருந்தாலும் இப்போது தட்டிப் பார்க்கத்தான் வேண்டும். மெல்ல கதவருகே சென்று உள்ளே ஏதேனும் சப்தம் வருகிறதாஎன்று கேட்டாள்.


மரண அமைதி.

'ஐ ஷுட் மேக் சம் ஜென்டில் நாக்ஸ்!'


கோடாலியால் பிளப்பதுபோல அல்லாமல் நாசூக்காய்த் தட்டினாள்.


"ஆர் யூ தேர், டார்லிங்?"

எங்கேயாவது ஊர் சுற்ற விடியற்காலையிலேயே எனக்குத் தெரியாமல் போய் விட்டாரா?


இப்பொழுது சற்றுப் பலமாகக் கதவைத் தட்டினாள். அமைதியோ அமைதி. நெருப்பில் இட்ட புழுவாக, கூண்டில் இட்டகிளியாக, பொறியில் அகப்பட்ட எலியாக, அரசியலில் மாட்டிய கமல்ஹாசனாக, பழிச்சொல்லுக்கு ஆளான காயத்ரி ரகுராமாக மனம் படபடத்தது.


சடாரென்று கதவு திறந்தது. சற்று நிதானிக்காமல் இருந்திருந்தால் பாட்டி பொத்தென்று உள்ளே விழுந்திருப்பாள்.


சுப்பு சில பல படபடக்கும் காகிதங்களோடு, இங்க் ஒழுக ஒரு கட்டைப் பேனாவோடு நின்றிருந்தார்.


"இப்படியா நோட்டீஸ் இல்லாமல் கதவைத் திறப்பது? உள்ளே என்ன தலை போகிற காரியம்? கதவைத் தட்டினேன். கேட்கவில்லையா? உடனே வந்து திறப்பதற்கு என்ன?"


பாட்டியின் வாய் கேட்டாலும் வலது கை தாமாகவே தாலியை தொட்டு பார்த்துக்கொண்டது. மனம் நிம்மதியாயிருந்தது.


‘சம் டைம்ஸ் டிரபூல்ஸ் மேக் அஸ் நெர்வஸ்!’


"சிந்தனையைக் கெடுத்த நிந்தனைப் பாட்டியே, வந்தனைக் காரணம் என்னவெனக் கூறுவாயோ?" என்றார் தாத்தா.


டாஸ்மாக் போகாமலேயே உளறியதுபோல் இருந்தாலும், அவர் கூறியது பாட்டியின் காதில் சற்றுத் தேன் வந்து பாய்ந்ததுபோலவே இருந்தது.


"போரை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தீர்களாக்கும்?"


"இது புரட்சிப் போர். இலக்கியப் போர்! யாரும் படைக்காத காகிதப் புரட்சி! நான் எழுதும் இந்தச் சிறுகதையில் பல உலகவிஷயங்களை, உலகச் சிந்தனையோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தொந்தரவு செய்யாமல் ஒரு கோப்பை தேநீர்கொண்டு வா...!"


"செய்த சேட்டைகள் போதாதென்று இலக்கியச் சேட்டையும் செய்வோம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?” கோமுப்பாட்டி மன நிம்மதிகொண்டு நிஜமாகவே கணவருக்கு டீ போட சமையலறைக்குச் சென்றாள்.


முதலில் நடந்ததைப் பார்ப்போம். பிறகு, நடக்கப் போவதையும் பார்ப்போம்.


பாட்டிக்கு, அண்டார்டிகாவிலிருந்து அண்ணாநகர்வரை பல பருவ இதழ்கள், பருவமில்லா இதழ்கள் வருவதுண்டு. அவள்சற்று மேலோட்டமாக மேய்ந்துவிட்டு வைக்கும் புத்தகங்களை சுப்புசாமி அடுக்கி வைப்பதோடு அவரது பணி முடிந்துவிடும். ஒரு கணம்கூடப் புத்தகத்தைப் பிரித்து அவர் உள்ளே பார்த்ததில்லை. அவருக்கு அதில் ஆர்வமில்லை. அவ்வளவுதான்!


நேற்று முன்தினம் போஸ்ட்மேன் பௌலிங் செய்த ஒரு மின்னும் தமிழ் மாத இதழை எதேச்சையாய்ப் பிரித்துப் பார்த்தார். அவர் பிரித்த இடத்தில் ஒரு உலகளாவியச் சிறுகதை போட்டி அறிவிப்பு இருந்தது, யார் செய்த அதிருஷ்டமோ?


"யம்மாடியோவ்! ஒரு கதை எழுதினால் பரிசு 10,000 ரூபாய்? அப்படி என்ன கதை எழுதுவது வெண்டைக்காய் கஷ்டம்? ஏன்நான் எழுதக் கூடாது? ஏன் நான் பரிசு வாங்கக் கூடாது? ஏன் நான் அந்த பத்தாயிரம் ரூபாயை முட்ட முட்டச் செலவுசெய்யக்கூடாது?" என்று பல ஏன்களை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் அந்தமான் அடிமைகள் கேட்ட மாதிரி கேட்டவர், கட்டைப் பேனாவில் இங்க் நிரப்பிக்கொண்டார். பாட்டியின் பைலிலிருந்து சில காகிதங்களை உரிமையோடுஎடுத்துக்கொண்டு வந்து எழுத ஆரம்பித்துவிட்டார் சுப்பு.

பேனாவை முகவாய்க் கட்டையில் வைத்து யோசிக்கலானார்.


‘என்ன எழுதலாம்...? சரித்திரம், குடும்பம், நகைச்சுவை, திடுக்கிடும் கதை? ஏன் சொந்தக் கதையை எழுதக்கூடாது?’


எனவே தனது அண்ணன் முறுக்குமீசை ரவுடி குப்புசாமியைப் பற்றி கதை எழுத ஆரம்பித்தார். குப்புசாமி அண்ணன் தன் தம்பிசுப்புசாமியைக் கும்மாங்குத்து குத்தும் கதையை தழுதழுக்க எழுதலானார். அட, எழுத எழுத - அறுவை போல அல்ல - அருவி போல கொட்டியது கதை!
அவரது அண்ணன் கொடுங்கோலன். கோமுவையே ஒரு சமயம் நடுங்க வைத்தவன்!

சுப்பு முரண்டு பிடிப்பார். அவன் சுருட்டு பிடிப்பான். சுப்புசாமிக்கு பெண்கள் என்றால் அலர்ஜி. குப்புசாமி என்றாலோபெண்களுக்கு அலர்ஜி. குடித்தும் அடித்தும் கும்மாளம் போட்டவன் அல்பாயுசில் போய் சேர்ந்தான். அந்தக் கதையைத்தான்சுப்பு செதுக்கிக் கொண்டிருந்தார். ஏறக்குறைய எட்டு மணி நேரம் கதவைப் பூட்டிக் கொண்டு கடுமையாய் உழைத்து 18 பக்கங்களை 'கொடுங்கோலன் குப்புசாமி' என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதியிருந்தார். அப்பொழுதுதான் பாட்டியின்தொந்திரவு, இடர்ப்பாடு!

"தேனீர் அளித்த தீஞ்சுவையே!" என்று பாட்டியின் கையைப் பிடித்தார்.

வெடுக்கென்று கையை இழுத்தபடி, "கிழம் துள்ளி விளையாடுதோ?" என்றாள்.

"நம்ம ஸ்டோரியை கொஞ்சம் படிச்சுப் பாரும்மே...!"

"கலை படும் பாடு! கொண்டுபோய் உங்க ஸ்னேகிதர்கள்கிட்டே காட்டுங்கோ...!" என்றாள்.

கனடா எம்பஸீ 'டியர் மேடம் கோம்மு' என்று ஒரு மெயில் அனுப்பியிருந்தது.

நயாகரா ஃபால்ஸ் அருகில் நடைபெறும் ‘உலக கிழவிகள் மாநாட்டில்’ சீதாப்பாட்டியைச் சிறப்பு பேச்சாளராகஅழைத்திருந்தது. அதன் காரியதரிசி லிடியா ஒரு பேரழகிக் கிழவியாய் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வந்தாள்.

"ஹாய் கோம்மு, வண...க்கம்!" என்று இளித்து ஆரம்பித்தாள்.

கோமுப்பாட்டி மூக்குக் கண்ணாடியைச் சற்று ஸ்டைலாய்த் தூக்கி விட்டுக்கொண்டு பேசிய ஆங்கிலத்தில் மயங்கிய லிடியா,"ரியலி, ஐ அப்ரிசியேட் யூ, கோம்மு...!" என்றாள்.

பூஜை நேரத்தில் கரடி வருமல்லவா?


கோமு பேசிக் கொண்டிருக்கையில், சுப்புசாமி குறுக்கே நடந்து சென்றார்.
வீடியோவில் அவரது பின்மண்டை தெரிந்தது.

"யூ சீ... திஸ் இஸ் அன் எக்சாம்பிள். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே நடந்து செல்வதென்பதுதான்ஆணாதிக்கம்!"
லிடியாவுக்கு கனடாவின் மைனஸ் டிகிரியிலும் சிலிர்த்தது!

கோமுப்பாட்டி இன்னொருமுறை தனது மேடைப் பேச்சை வாசித்து வைக்கலாம் என்று தனது பிரத்தியேக பைலை எடுத்துபடித்துக் கொண்டே வருகையில், 8 ஆம் பக்கமும் 13 ஆம் பக்கமும் மிஸ்ஸிங்!

'வேர் தட் ஹெல் பேப்பர்ஸ் கான்? இதில்தானே இருந்தது?'

சட்டென்று புரிந்து விட்டது.

'அவர் ஏதோ கதை எழுதுகிறேன் என்று கத்தை காகிதங்கள் படபடக்க காட்டினாரே?'
பைலில் பாண்டு காகிதங்கள் கணிசமாகக் குறைந்திருந்தது.
'புரிகிறது. நான் எழுதி வைத்திருந்த ஸ்பீச் மெடீரியலையும் சேர்த்து எடுத்து விட்டார்!'

"மன்னவன் பேரைச் சொல்லி… மல்லிகை சூடிக் கொண்டேன்...!" என்ற இனிமையான பாடலை பாத்ரூம் சப்தத்தில்கொடூரமாக சுப்பு பாடிக் கொண்டிருந்தார்.

உள்ளே நுழைந்த பாட்டி, கதையோடு கதையாக இருந்த தனது காணாமல்போன பக்கங்களைக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டாள். சுப்புசாமி அதன் பின்பக்கத்திலும் தனது காவியத்தை எழுதியிருந்தார்.

'ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு கொடுத்தால் போகிறது...! ஸ்பீச்சை ஸ்கேன் செய்து கனடாவுக்கு உடனே மெயில் அனுப்பவேண்டும்…!’ விரைந்தாள்.

கற்கால சுப்புசாமி இக்கால கதாநாயகிபோல ஒற்றை டவலில் வந்தவர்...
"இந்த மாமனொட மனசு..!" என்று பாடிக்கொண்டே, தான் எழுதிய கதைப் பக்கங்களில் வேக வேகமாய் பக்க எண்கள்போட்டு, கோடு போட்டு முடித்தவர், முற்றும் துறந்த முனிவராகி, புதிய ஆடை அணிந்து கொண்டார்.


உடனே கதையைக் கொரியரில் சேர்க்க வேண்டும். விரைந்தார்.


ஒரு மாதம் ஓடி விட்டது. இன்று போட்டி முடிவு!


தாத்தா அடிக்கடி கற்பனையில் மிதந்தார்.


‘முதல் பரிசு பத்தாயிரம்! ஒரு ரூபாய் புழக்கத்தில் இருந்தால் பத்தாயிரம் ஒரு ரூபாய் தாள்கள் இருக்கும். சரி பத்து ரூபாய்கட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு ரூபாய் நாணயங்கள் என்றாலும் நோ அப்ஜெக்ஷன்! கை நிறைய அள்ளி அள்ளிவிளையாடி, ஓசை எழுப்பி கோமுவின் காதை பஞ்சராக்கலாம்!'


பா. மு. க. வுக்கு செல்ல ஆயத்தமாகி வந்த பாட்டி, அவரைப் பார்த்ததும்...
"ஓ...கொடுக்க மறந்துட்டேன். கதையை அனுப்ப இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? ஐயாம் சாரி. என்னிடம்கேட்காமல் என் பர்சனல் பேப்பர்களை தொட்டது தவறு. இருந்தாலும் ஏதோ உருப்படியான விஷயத்துக்கு எடுத்தீர்கள். உங்ககதை கட்டுகளில் என் ஸ்பீச் பேப்பர்ஸ் இருந்தது. காப்பி எடுத்துட்டு ஐ பர்கெட் டூ கிவ் யூ பேக். பேப்பரின் பின்பக்கம் யூ ஹவ்ரிட்டன் சம்திங். இந்தாருங்கள்...!"


சுப்புசாமி அந்த இரண்டு காகிதங்களை வாங்கிப் பார்த்தார். அவர் எழுதிய கதையின் நடுப்பகுதி. அவருக்கு கை நடுங்கியது.இன்னொரு காகிதத்தில் கதையின் முடிவுப் பகுதி. அவரது இடுங்கிய கண்கள் இருண்டன.

'அடிப் பாதகத்தீ!' என்று கத்தலாம் என்றால், கார் புகைகக்கிப் புறப்பட்டிருந்தது!

வெடிக்கத் தயாரான யானை மார்க் வெடி புஸ் புகைவிட்டு அமைதி காத்த நிலை.

“வரட்டும். வைக்கிறேன், வேட்டு!"

மதியம். போர்டிகோவில் கார் சத்தத்தைக் கேட்டதும், "இறக்கடி கூடையை...!" என்று சண்டை பிடிக்க ஓடி வந்தார்.

"வழியில் போஸ்ட்மேனைப் பார்த்தேன். இந்த லெட்டரைக் கொடுத்தார்...!" என்றாள் கோமுப்பாட்டி.

வாங்கிக் கொண்டார். போட்டி நடத்திய நிறுவனம் அனுப்பியிருந்த கடிதம் அது.

'முடிவேயில்லாத உங்கள் கதையை போட்டியில் சேர்த்துக்கொள்ள இயலாத நிலைக்கு வருந்துகிறோம் ' - என்றிருக்கும்என்று தவிப்போடு கவரைப் பிரித்தார்.

'நாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் உங்கள் கதை முதல் பரிசாக ரூ.10,000/- பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய எழுத்து, புதிய கதை, புதிய கருத்து. மிகச் சிறப்பான நடை. சிறந்த சஸ்பென்ஸ். வாசகர்களே முடிவை யூகித்துக்கொள்ளும் பொருட்டு, முடிவை வெகு சாமர்த்தியமாக சொல்லாத தங்களின் சமயோசிதம்...'என்று பலவாறாகப் பாராட்டி, போட்டி நிறுவனர் கையொப்பமிட்டு இருந்தார்.

சுப்புசாமி, அந்தக் கடிதத்தை நம்ப முடியாதவாறு, "கோமு...நன்றி சொல்லவே உனக்கு... வார்த்தை இல்லையே...!" என்றுபாடியபடி மடிசார் கலைய பாட்டியை ஆலிங்கனம் செய்து கொண்டார்!

*****