தொடர்கள்
கவிதை
தியானம் - பொன் ஐஸ்வர்யா

20221124093417129.jpeg

நேராய் உட்கார், சீராய் சுவாசி
தெளிவாய் உள்நோக்கு, தியானம் வசப்படும்
தியானம் என்பது கண்ணை மூடி
உன்னைத் திறக்கும் உன்னதத் திறவுகோல் !

உன்னையே நீ ஒருசில நிமிடம்
உற்றுப் பார்க்கக் கற்றுக் கொள்
ஆராவாரம் அடங்கிப் போகும்
அமைதி மெல்லத் தெரிய வரும்

உலகில் தெரியும் அதிசயங்கள்

ஒவ்வொன்றையும் கற்ற துண்டு,
உனக்குள் உறைந்த அதிசயத்தை
ஒருநாளேனும் உணர்ந்த துண்டா ?

விதையிலிருந்து நீ விருட்சமான
விந்தையை நின்று சிந்தித்துப் பார் !
இயங்குகின்ற எந்திரம் நீ எனில்,
இயக்குகின்ற மந்திரம் எது ?


சற்றே யோசி சலனமின்றி நீ
எங்கே இன்று இருக்கின்றாய்
அகன்று பரந்த பேரண்டத்தில்
உனது இடம் புள்ளியாய் தெரிகிறதா ?

எத்தனை நாளாய் இங்கே குடித்தனம்
எதுவரை இன்னும் இருக்க உத்தேசம்
உன் உள்ளங்கை திறந்து பார் !
உன் கையில் இருப்பது என்ன ?

நீண்ட சுவாசம் எடு
நிதானமாய் வெளியே விடு
உருவமற்றப் புள்ளிகள் பல
ஒன்று சேர்ந்து வருகிறதா ?

நீண்ட பயணம் கொண்ட
நித்திய யாத்திரீயே - உன்
பாதை தெரிகிறதா - போகும்
பயணம் புரிகிறதா ?

மகிழ்சிதான் உன் இயல்பு
மறந்ததால் வந்த விளைவு
துன்பங்கள் என்பது தூக்கி சுமப்பதே!
யாத்திரீகனுக்கு ஏனிந்த சுமை ?

இனிமை தராததை இறக்கிப் போடு
எங்கு நோக்கினும் இயற்கை யழகு
காண முடியாமல் கடந்து போவதா !
கண்ணை மறைக்கக் கண்ணாடி எதற்கு ?