தொடர்கள்
தொடர்கள்
நெடுந்தொடர் சமையல் குறிப்பு-எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20221123185002666.jpg

தனது அறைக்குள் நுழைபவரை வணங்கினான் இளங்கோவன். வயது
42. உயரம் 190செமீ பவர் கிளாஸுக்குள் துருத்தும் அறிவு ஜீவிக்கண்கள்.
நாவல்நிற உதடுகள். உட்கார்ந்திருந்த இளங்கோவனின் பின்னங்கழுத்தை
தனது முன்னுறுப்புகளால் தேய்த்தபடி நின்றிருந்தாள் இளங்கோவனின்
உதவியாளனி யாஷிகா.
அறை சுவர்கள் முழுக்க தென்னக சீரியல்களின் லேமினேட்டட்
புகைப்படங்கள்.
“வாங்க .. உக்காருங்க சார்!”
வந்தவர் தன் இரு அல்லக்கைகளுடன் அமர்ந்தார்.
“உங்க பெயர்?”
“நஞ்சப்ப கவுண்டர்!”
“என்ன பணி செய்றீங்க?”
“விவசாயம்!”
“என்ன விஷயமாக என்னிடம் வந்துள்ளீர்கள்?”
“நான் தமிழில் ஒரு மெஹாசீரியல் தயாரிக்க விரும்புகிறேன். சிறப்பாக
மெஹாசீரியல்கள் தயாரிக்க நீங்கள் தகுந்த ஆலோசனைகள் தருவதாக
கேள்விபட்டேன்.. ப்ளீஸ் எனக்கு உதவுங்கள்!”
“எனது ஆலோசனை கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் தர முடியுமா
உங்களால்?”
“தாராளாக தருகிறேன்…” யாஷிகாவின் கிளிவேஜை பார்த்து இளித்தார்
நஞ்சப்பர்
“ஆரம்பிப்போமா?”
“சரி!”
“சீரியலின் டைரக்டராக யாரை போடப்போகிறீர்கள் என்பது மிக
முக்கியம். அவன் சானலின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும்.
சானலின் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு போதிய கமிஷன் கொடுத்து
ப்ரைம்டைம் வாங்கும் சாதுர்யம் கொண்டவனாய் அவன் இருத்தல் நலம்.
பத்து வருடங்களுக்கு முன் சீரியல் ஹீரோவாக நடித்து ரிட்டையர்

ஆனவனாக இருத்தல் கூடுதல் சிறப்பு. டிஆர்பி ரேட்டிங்கை மானிபுலேட்
பண்ண தெரிந்திருக்க வேண்டும். அவனுக்கு குமுதத்தின் சிங்கிள் வரி
சிறுகதையை 1500 எபிஸோடாக நீட்டும் மாயமந்திரம் தெரிந்திருக்க
வேண்டும். ஏற்கனவே அவனுக்கு ரேஷன்கார்டுகள் கொடுக்கும் அளவுக்கு
சின்ன வீடுகள் இருக்க வேண்டும் இல்லையென்றால் நம் சீரியல்
ஹீரோயினை அசமடக்கி சீரியலுக்கு வேட்டு வச்சிடுவான்!”
“மனதில் குறித்துக் கொண்டேன்!”
“சீரியலுக்கு டைட்டில் வைக்க மூளையை ரொம்ப கசக்கிக்கக் கூடாது.
பத்து இருபது வருடங்களுக்கு முன் நூறுநாள் ஓடிய தமிழ் சினிமாக்களின்
டைட்டிலை சுட்டுதான் நம் சீரியலுக்கு பெயர் சூட வேண்டும். எங்க பக்கம்
பிள்ளையார் சிலை திருடிதான் கோயில் கட்டுவார்கள். தமிழ் சினிமா
டைட்டிலை சுடுறதினால சீரியலுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை.
‘சீச்சீ’ ‘தூத்தெறி’ என டைட்டில் வச்சுக்கூட சீரியல் தயாரிக்கலாம். அதையும்
மக்கள் விழுந்து விழுந்து பாப்பாங்க. இருந்தாலும் டைட்டில் சென்டி
மென்டடை விடாம தமிழ் சினிமா டைட்டிலை வைப்பம்..”
“சரி!”
“அடுத்து சீரியல் ஹீரோக்கள். சீரியல் ஹீரோக்கள் ஸ்லிம்மா
ஹான்ட்ஸம்மா இருக்கக்கூடாது. உருளைக்கிடாவா குறைந்தட்சம் 90கிலோ
வெயிட்ல இளம்பியர் தொப்பையுடன் இருக்கனும். சீரியல்ல வர்ற எந்த ஆண்
கதாபாத்திரமும் கிளீன் ஷேவ் பண்ணிகிருக்கக்கூடாது எல்லாப்பயலும்
முரட்டு தாடி வச்சிருக்கனும். ஷுட்டிங்குக்கு பல் விளக்காம முகம் கழுவாம
தலைசீவாம குளிக்காம அப்படியே எந்திரிச்சு வந்தமாதிரி ஒரு தோரணை
வெளிப்படனும்.. நாத்தக்குட்டி ஹீரோதான் நம்ம பெஸ்ட் சாய்ஸ்!”
“மொத்த ஷுட்டிங் ஸ்பாட்டும் கப்பு அடிக்கனும்!”
“கரக்ட். அடுத்து சீரியல் ஹீரோயின்கள். சீரியல் ஹீரோயின்களுக்கு
தமிழ் சுட்டு போட்டாலும் வரக்கூடாது. கேரளப்பெண்ணோ தெலுங்குப்
பெண்ணோ ஏன் மும்பைபெண்ணோ பெட்டர். சீரியல்ல பத்து பெண்கள்
கதாபாத்திரங்கள் வந்தாலும் எட்டு பேருக்கு ஒரே பெண்ணே டப்பிங் பேசுவார்.
சீரியல் ஹீரோயின் தற்கொலை பண்ணிக்கிட்டாலோ சினிமாவுக்கு நடிக்க
போயிட்டாலோ வேறொருத்தியை போடுவோம். வேறொருத்திக்கும் பழைய
ஆளேதான் டப்பிங் பேசுவார். சென்டிமென்ட்டா கன்டினியூட்டி தொடரும்!”
“அட… ஆமாம்!”
“வேலைக்காரி காரெக்டர்ல ஹீரோயின் நடிச்ச சீரியல் சூப்பர் ஹிட்.
எல்லா மிடில் கிளாஸ் வீடுகள்லயும் லோஹிப் கட்டி குடும்பத் தலைவனை
லிட்டர் கணக்கில் ஜொள் விட வைக்ற வேலைக்காரிகள் இருப்பர். அந்த

வேலைக்காரியை நினைச்சுக்கிட்டே ஆம்பிளை சீரியல் பார்ப்பான். தன் வீடு
வேலைக்காரியையும் சீரியல் வேலைக்காரியையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு
சீரியல் பாப்பாங்க பெண்கள்!”
“என் பொள்ளாச்சி வீட்ல கூட கொப்பும் குலையுமா மப்பும் மந்தராமுமா
ஒரு வேலைக்காரி இருக்கா. சும்மா அனுஸிதாரா மாதிரி இருப்பா!”
“ஜொள்ளை துடைச்சுக்கங்க. சீரியல் கதைல ஹீரோயினும் ஹீரோவும்
அற்பசொற்ப காரணங்களுக்காக ஆயிரம் எபிஸோடுகளுக்கு தாம்பத்யம்
பண்ணக் கூடாது. நோ பர்ஸ்ட் நைட்.. நோ டச்சிங் டச்சிங்… சீரியல் ஜோடிகள்
சீரியல் ஆரம்பிச்ச பத்து எபிஸோடுக்குள் தாம்பத்யம் வச்சுக்கிட்டா ‘சீ
இதுகளும் நம்பள மாதிரி அலைஞ்சான் கேசுக’ன்னு சொல்லி சீரியலை
புறக்கணிச்சிடுவாங்க!”
“ஓஹோ!”
“சீரியல்ல கட்டாயம் ஒரு ஜோதிடரோ ஒரு சித்தரோ ஒரு குறி சொல்ற
பெண்ணோ வந்து கண்டமும் அதற்குரிய பரிகாரம் சொல்லனும். கதாநாயகி
மண் சோறு தின்னனும் வாய்ல அலகு குத்திக்கிடனும் கோயில் முழுக்க
அங்கபிரதட்சணம் செய்யனும். அப்பதான் பெண்கள் அழுதுவீங்கி சீரியல்
பார்த்து டிஆர்பி ரேட்டிங்கை எக்கசக்கமா தூக்கி விடுவாங்க!”
“தீமிதியை விட்டுட்டீங்களே சார்!”
“கல்யாணமான ஹீரோவை ஹீரோயின்கிட்டயிருந்து பிரிச்சு நாம்
எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்ன்ற வில்லிகள் எல்லா
சீரியல்களிலும் இருப்பாங்க. நம்ம சீரியல்லயும் அப்படி ஒரு வில்லி காரக்டர்
வைக்கனும். தனது 25வது வயதிலே ஹீரோவை கவர முயற்சி பண்ணி
75வருடங்களுக்கு பிறகு முயற்சியில் வெற்றி பெற்று தனது நூறாவது
வயதிலே ஹீரோவை வில்லி கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி காட்டலாம்
மகா புதுமையா இருக்கும்!”
“நூறாண்டு வில்லிதனம்!”
“இன்னொரு முக்கியமான விஷயம். முறையா ஒரு லேப்ல டிஎன்ஏ
டெஸ்ட் எடுத்திருந்தால் ‘சாரதி கண்ணம்மா’ இருபது முப்பது எபிஸோடுல
முடிஞ்சு போயிருக்கும். அப்பனின் கள்ளக்காதலை பார்த்த மகன் வீட்டில்
அம்மா முன் பஞ்சாயத்து நடத்தியிருந்தால் ‘அபாக்யலட்சுமி’ அம்பது
எபிஸோடுல முடிஞ்சு போயிருக்கும். கொடுமைக்கார இரண்டாவது
மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டு பாடகர் முறைப்படி முதல்
மனைவியோட வாழப் போயிருந்தா ‘ஊமைராகம்’ சீரியல் பத்து
எபிஸோடோடுடன் முடிஞ்சிருக்கும். இரண்டாவது பாகம் வந்து நம்மை
கழுத்தறுத்திருக்காது. ஸோ சீரியல் தயாரிக்கும் போது ஒரு முக்கியமான

விஷயத்தைக் கொல்லனும். அதுதான் லாஜிக். சீரியலில் லாஜிக் சிறுதுளியும்
இருக்கக் கூடாது. தலையை சுத்தி மூக்கை தொட்டா பத்தாது ஆயிரம்
தலையை சுற்றி மூக்கைத் தொடனும்..!”
“லாஜிக்கை கும்பலா நின்று கொன்னுடுவோம்!”
“சீரியல்ல நாலு மெயின் காரக்டர்களை மலையாள மூஞ்சிகளா
போட்டா சீரியலை மலையாளத்ல டப் பண்ணி காசு பாக்கலாம்..”
“எண்ட குருவாயூரப்பா!”
“காய்ந்து போன ரோஜாவே பார்க்கிறீங்களா? வில்லன் நாலடி உயரம்
தான் இருப்பான். மூக்கு முந்திரிப்பழம் மாதிரி வீங்கி இருக்கும். தவளை
மாதிரி தாவிதாவி டயலாக் பேசுவான். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ
சாக்கரை என்பார்கள். சீரியல்களுக்கு டம்மி வில்லன்கள் போதும்.
வில்லன்களை விட வில்லிகள் தான் மகாகொடூரமா இருக்கனும். ஒரு
சீரியல்ல பத்து பெண் கதாபாத்திரங்கள் இருந்தால் எட்டு பெண்கள்
ஸைக்கோ வில்லிகளா இருக்கனும். ‘அவளை கூட்டு பாலியல் பலாத்காரம்
செய்ங்கடா’ ‘அவ வயலுக்கு தீ வைங்கடா’ ‘அவன் அறைக்குள் நாலு
விஷப்பாம்புகளை விடுங்கடா’ ‘அவ குடிக்ற பால்ல விஷம் வைடா’ இப்படி
நம்பியார்தனமாக வசனங்கள் வில்லிகள் பேசனும். நிஜவாழ்க்கையில் ‘மேல
இருக்றவன் பாத்துக்குவான்’ என தேமேன்னு இருப்பாங்க பெண்கள். சீரியலை
பாத்துட்டு இதே பெண்கள் ‘நீங்களாவது எதிரிகளை மூட்டைபூச்சி நசுக்கிற
மாதிரி நசுக்கங்கடி’ என பரம திருப்தி அடைகின்றனர். சீரியலில் வரும்
வில்லிகளை நடமாடும் நகைகடைகளாக காட்ட வேண்டும். கெட்டது
செய்கிறவள் வசதியாக வாழ்வாள் என நெகடிவ் மெஸேஜை மக்களுக்கு
ஊட்ரோம்!”
“ஊட்டுவோம் ஊட்டுவோம்!”
“சீரியல்ல ஒரு ஆஸ்பத்திரி சீன் கட்டாயம் தேவை. கதையின் மெயின்
காரெக்டருக்கு திடீர் சுகவீனம் விபத்து பாம்புக்கடி ஹார்ட் அட்டாக் இப்படி
எதாவது ஆஸ்பத்திரியை வச்சே அம்பது எபிஸோட ஓட்டிரலாம்..”
“ஓகே.. ஆஸ்பத்திரி சீன் அப்ரூவ்டு!”
“நம்ம சீரியல் ஹீரோயின் சானலோட டான்ஸ் நிகழ்ச்சில மிமிக்ரி
நிகழ்ச்சில கலந்து நம்ம சீரியலை பாப்புலராக்கனும். நம் டைரக்டர்
அதற்கான லாபில இறங்கனும்!”
“ஹீரோயினின் நிஜக்குரல் தெரிஞ்சிடும்!”
“நோ ப்ராப்ளம் நம்ம சீரியல் டைரக்டர் ஒரே சானல்ல இரண்டு
சீரியல்கள் டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தா நமக்கு நல்லது. ரெண்டு

சீரியல்களையும் ஒரு இருபது எபிஸோடுகளுக்கு இணைச்சு மகாசங்கமம்
பண்ணிடலாம். தினம் ஒருமணி நேரம் எபிஸோடு!”
தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கினான் இளங்கோவன்.
திருப்தியானார் நஞ்சுப்ப கவுண்டர். ஒரு இலட்சரூபாய் ரொக்கத்தை
இளங்கோவனின் உதவியாளினியிடம் கையளித்தார்.
“இளங்கோவன்! உயரமா ஹாண்ட்ஸம்மா இருக்கீங்களே.. நீங்களே
ஹீரோவா நடித்தலாமே?”
“அஞ்சரை அடி ஹீரோகளுக்கு அஞ்சடி ஹீரோயின்களுக்கு என்னை
பாத்தாலே அலர்ஜி. துணை கதாபாத்திரங்களில் நடித்து சலித்து ஒதுங்கி
விட்டேன்!”
“வெற்றிக்கான பார்முலா வைத்திருக்கிறீர்கள். நீங்களே மெஹா சீரியல்
எடுக்கலாமே?”
“ஐஏஎஸ் கோச்சிங் கொடுப்பவர் ஐஏஎஸ் எழுதமாட்டார். தமிழ்
சீரியல்கள் மீது எனக்கு உலகவெறுப்பு!”
“அடுத்தடுத்து நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?”
சிரித்தான் இளங்கோவன்.
“ஆறு ஏழு எபிஸோடுகளுடன் முடிந்துவிடும் வெப்சீரியல் எடுக்கப்
போறேன். வெப்சீரிஸ் ஒரு முட்டாள்தனமான பார்முலாவுக்குள் அடங்கும்
போது வெப்சீரிஸை விட்டும் வெளியேறுவேன்.”
“நல்லது!”
“என்னிடம் வநது ஆலோசனை கேட்டதை யாரிடமும் சொல்லாமல்
கவனமாக சீரியல் தயாரியுங்கள் வாழ்த்துகள்!” கைகுலுக்கினான்
இளங்கோவன்.
“கோடிக்கணக்கான பெண்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும் போது
ஆயிரம் இளங்கோவன்கள் கிண்டலித்தாலும் நையாண்டி செய்தாலும்
என்னை ஆட்ட முடியாது அசைக்க முடியாது’ சீழ்க்கையடித்தான்
நெடுந்தொடர் அரக்கன்.