தொடர்கள்
பொது
காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது - மாலா ஶ்ரீ

20221124091717704.jpg

தமிழ் படைப்புக்காக 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவல் தேர்வாகியுள்ளது.

மதுரை மாவட்டம், வடகரை கிராமத்தில் மு.ராஜேந்திரன் பிறந்தார். பின்னர் கல்லூரி காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்றார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழக வரலாற்றின் மீது அதிக பற்று கொண்டவர். அண்ணாமலை பல்கலையில் சட்ட மேற்படிப்பும், தஞ்சை தமிழ் பல்கலையில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து 'முனைவர்' பட்டம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்திய ஆட்சி பணியில் பொறுப்பேற்று, தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

இவர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்தபோது, அப்பகுதியில் இயற்கை வளம் சார்ந்த மலைப்பகுதிகளை கனிமவள மாஃபியா கும்பல்களிடம் பறிபோகாமல் தடுத்துள்ளார். மேலும், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்காக கரடுமுரடான பாதைகளை செப்பனிட்டு, சாலைகள் அமைத்துக் கொடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம், தமிழக வரலாற்றின்மீது தணியாத ஆர்வம் கொண்டு செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தொகுத்தல் போன்ற பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

பின்னர் தொகுத்த வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆவண புத்தகங்களாகவும் வெளியிட்டார். அதில், விடுபட்ட வரலாற்று சொல்லாடல்களை தனது புனைவில் புகுத்தி நாவல்களாகவும் ராஜேந்திரன் எழுதி வந்துள்ளார். இவர் எழுதிய 1801, வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு, காலா பாணி போன்ற நாவல்கள் வாசகர்களிடையே மிகப் பிரசித்தம். இதனால் பல்வேறு அறக்கட்டளைகள், இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தின.

பணி ஓய்வுக்குப் பிறகு மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவல், 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்நாவல், 'இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சிப்பாய் கலகத்துடன் துவங்கவில்லை. அதற்கு முன்னரே தமிழகத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. எனவே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த இந்திய விடுதலை வரலாற்றை, தமிழகத்தில் விடுபட்ட தியாகச் சுடர்களை பேசியபிறகே, அதற்கு பின் மற்ற விடுதலை போராட்ட வீரர்களை பற்றி பேசவேண்டும்' என்பதுதான் முன்வைக்கும் வாதமாகும். இந்நாவலின் செய்தி, தேசிய அளவில் மிளிர வேண்டியதும், அதற்கு விருது கிடைத்திருப்பதும் மிகவும் பொருத்தமானது எனக் கூறலாம். இந்நாவல் அகநி பதிப்பக வெளியீடாகவும் கிடைக்கிறது.

இதுகுறித்து நாம் எழுத்தாளர் மு.ராஜேந்திரனிடம் பேசியபோது, "கொரோனா காலக்கட்டத்தின்போது சிவகங்கையில் 'காலாபாணி' நாவல்

வெளியானது. நமது பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். காலா பாணி நூலுக்கு வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். இதில் அதிகம் அறியப்படாத ஜெகநாதன் ஐயர், மணக்காடு சாமி, மருதுபாண்டியரின் மகன் துரைசாமி ஆகியோரை பற்றி எழுதியது எனக்கு மகிழ்ச்சியே!" என்று தெரிவித்தார்.

மாலாஸ்ரீ