தொடர்கள்
அரசியல்
அண்ணாமலையில் ரஃபேல் வாட்ச் - என்ன விசேஷம் ?? - ரோலக்ஸ்

20221124090949638.jpg

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்களின் கேள்விகளுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபரின் கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், "சமீபகாலமாக தமிழக அரசியல்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. எனது கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை ₹3.50 லட்சம். இது, ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. உலகெங்கிலும் மொத்தம் 500 வாட்ச்கள் உள்ளன. என்னுடையது 149-வது வாட்ச். எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். இது, எனது தனிப்பட்ட விஷயம்!" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரான்ஸ் நிறுவனத்துக்காக, உலகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, ₹5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க… தேசியவாதி, ஆடு வளர்த்து ₹5 லட்சத்தில் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

வார் ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால், இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா?' என சாட்டையை சுழற்றினார். இத்தகவல் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அனைத்து தரப்பினரிடமும் பல்வேறு விமர்சனங்களாகவும் மீம்ஸ்களாகவும் வெடித்து கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி நிருபர்களை சந்தித்து அண்ணாமலை பேசியபோது, "வரும் ஏப்ரல் மாதம் செந்தில் பாலாஜி உள்பட அமைச்சர்கள் உள்பட, அதில் அங்கம் வகிக்கும் பலரின் ஊழல் முறைகேடுகள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் பண, சொத்து முதலீட்டு விவரங்களை வெளியிடுவேன். இதில் பொதுமக்களும் பங்களிக்கும் வகையில் ஆஃப், இணையதள முகவரி விரைவில் வெளியிடப்படும்.

அந்தந்த தொகுதிகளில் அமைச்சர்கள் உள்பட ஆளுங்கட்சி நிர்வாகிகள் வாங்கியுள்ள விவரங்களை பெயர் குறிப்பிடாமல் பொதுமக்கள் பதிவு செய்யலாம். அவ்விவரங்களை எங்கள் குழுவினர் ஆய்வு செய்து வெளியிடுவோம்!" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரஃபேல் வாட்ச்சில் என்ன விசேஷம்? பிரான்ஸ் நாட்டின் டுஸ்ஸால்ட் நிறுவனம் 'ரஃபேல்' போர் விமானங்களை தயாரித்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவை, கடந்த 2013-ல் பொன் விழாவாக டுஸ்ஸால்ட் நிறுவனம் கொண்டாடியது.

இதன் நினைவாக, பெல் அண்ட் ராஸ் என்ற பிரான்ஸ் கடிகார நிறுவனத்துடன் இணைந்து, சிறப்பு எடிஷனாக ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு 500 கைக்கடிகாரங்களை தயாரித்து, கடந்த 2015-ம் ஆண்டு டுஸ்ஸால்ட் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டது. அப்போது இதன் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் ₹4.40 லட்சம்! அன்றைய தினம் 'புக்' செய்த 500 பேருக்கு மட்டுமே ரஃபேல் வாட்ச் கிடைத்தது.

அன்றைய காலகட்டத்தில், ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ₹62.97! இதனால் அப்போதைய ரஃபேல் வாட்ச்சின் இந்திய மதிப்பு ₹3.90 லட்சம்! இதில் மணி, நிமிடம், விநாடிகளை காட்ட தனித்தனி முட்கள் உள்ளன. இதுதேதியும் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கைக்கடிகாரத்தின் கேஸ், ரஃபேல் விமானத்தில் பயன்படுத்தப்படும் செராமிக் போன்ற எஃகு பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இது, ஜெட் விமானங்கள், ராக்கெட்டுகளில் வெப்பத்தைத் தாக்கு பிடிக்கும் இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளன.

செராமிக் எஃகு போன்ற கடினத்தன்மை உள்ள பொருட்களை பயன்படுத்தினாலும், இது வழக்கமான கைக்கடிகாரங்களைவிட பலமடங்கு எடை குறைவானதாகும். இதன் பேண்ட் மட்டும் ரப்பரில் உருவாக்கப்பட்டது. எனினும், இந்த வாட்ச் முழுமையாக ரஃபேல் விமான உதிரிபாகங்களால் செய்யவில்லை என்பதும் நிரூபணமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20221124091500333.jpg

இன்னொரு சுவாரஸ்யமான தகவல்… தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது இரண்டு கைகளிலும் வாட்ச் காட்டியிருப்பது ஏன்? அவரை ஏன் 'டபுள் வாட்ச் டக்ளஸ்' என்று மீம்ஸ் போட்டு விமர்சிக்கின்றனர் என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா?

இதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தாத்தா மற்றும் தந்தை கட்டியிருந்த 2 ரோலக்ஸ் வாட்ச் களை என்னிடம் தாயார் வழங்கினார். அந்த பழமையான ரோலக்ஸ் வாட்ச்களை கட்டி வந்தேன். கடந்த கொரோனா ஊரடங்கின்போது 2 வாட்ச்களும் ரிப்பேரானது. அதில், தாத்தாவின் பழைய ரோலக்ஸ் வாட்ச்சை அமெரிக்காவில் பழுதுநீக்கி ஒரு கையில் கட்டி வருகிறேன்.

பின்னர் அமெரிக்காவில் FitBit வகை வாட்ச்கள் அறிமுகமானபோது, எனது உடல்நலனை அறிவதற்காக ஆப்பிள் வகை FitBit வாட்ச்களை மற்றொரு கைகளில் கட்டியிருக்கிறேன். இந்த வாட்ச் மட்டும் ஆண்டுதோறும் நவீன மாடல்களுக்கு ஏற்றபடி வாங்கி அணிந்து வருகிறேன்! நான் அமெரிக்காவில் லேமென் பிரதர் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உலக சந்தை நிலவரத்தை தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம். இதனால் உலக நாடுகளின் நேரங்கள் குறித்து அதன்மூலம் அறிந்து வைத்திருந்தேன். தற்போது அதில் சென்னை, மதுரை நேரங்களை மட்டும் எனக்கு தெரிந்து வைத்திருந்தாலே போதுமானது!" என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது 2 கைகளில் கட்டியுள்ள வாட்ச் களை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.

ஒரு வாட்ச் நாலு லட்சத்திற்கு அவ்வளவு பெரிய விஷயமா ?? ஒரு சின்ன ஒப்பீடுக்கு இன்றைய தேதிக்கு ஐபோனின் அதிகபட்ச விலை 2 லட்சம்.

இந்தியாவில் ஐபோன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை உங்களுக்கே தெரிந்திருக்கும்.

அண்ணாமலையின் அதிரடி எதிர்கட்சி அரசியலை சமாளிக்க இது போல ஏதாவது செய்து தான் ஆக வேண்டியிருக்கிறது திமுகவிற்கு. இது கருணாநிதி கற்றுக் கொடுத்த அரசியல்.

அதை மட்டும் கச்சிதமாகவே செய்து வருகிறார்கள் கழக கண்மணிகள்.