தொடர்கள்
தொடர்கள்
சென்னை  மாதம்  --  பாகம் 64-- ஆர் . ரங்கராஜ்

20221123183925802.jpg

அரசியல், சமயம், பண்பாடு ஆகியவற்றின் வரலாற்றுச் செய்திகளை திருக்காரிக்கரைக் கல்வெட்டுகளும் தாங்கி நிற்கின்றன --

(திருக்காரிக்கரை ஊருக்கு வடகிழக்கே இராமகிரி மலையின் அடிவாரத்தில், ஒரே திருச்சுற்றுக்குள் திருவாரிக்கரை பிள்ளையார், திருக்காரிக்கரை உடைய நாயனார்
திருப்பள்ளி நாச்சியார் ஆகியோருக்குத் தனித்த தனியாக மூன்று கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. )

திருப்பள்ளி நாச்சியார்

அரசியல், சமயம், பண்பாடு ஆகியவற்றின் வரலாற்றுச் செய்திகளை, திருக்காரிக்கரைக் கோயிலும், கல்வெட்டுகளும் தாங்கி நிற்கின்றன.

திருக்காளத்தி யாதவராயர்கள் தெலுங்குச் சோழர்களுக்கு அடங்கிய சிற்றாசர்களாகச் சில காலம் இருந்துள்ளனர். வீரக்கண்ட கோபாலனின் மூன்றாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் (கி.பி. 1295) யாதவராயனான வீரநரசிங்க தேவன் குறிக்கப்படுவதிலிருந்து இது தெரிகிறது.

பின்னர், தெலுங்குச் சோழர்கள் இப்பகுதியில் சுயேச்சையாக நீண்ட காலம் ஆட்சி செய்ய இயலவில்லை. காரணம், தெற்கே பாண்டியர்களின் வளர்ச்சி, மற்றும் வடக்கே காகதீயர்களின் வலிமை ஆகும். இக்காலத்தில் திருக்காளத்தி யாதவராயர்கள் சிலகாலம் இப்பகுதியைச் சுதந்திரமாக ஆட்சி புரிந்தார்கள். இதை வீர நரசிங்க தேவனின் 36-ஆம் ஆட்சியாண்டைக் குறிக்கும் இரு கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. பின்னர் விஜய நகர அரசர்கள் எழுச்சி பெற்று இப்பகுதியைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தினார்கள்.

மன்றாடிகள்

சோழர் காலத்தில் கால்நடைகளை நன்கு பராமரிக்க ஊர் தோறும் மன்றாடிகள் அங்கம் வகிக்கும் மன்றாடி கலவைகள் தோன்றின. கோயிலுக்குப் பசு, ஆடு போன்றவற்றை விளக்கெரிக்கத் தானமாகக் கொடுப்பவர்கள் அவற்றை மன்றாடி கலனையிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றைப் பராமரித்துத் தினமும் இறைவன் முன் விளக்கெரிக்க நெய் கொடுக்க வேண்டும். மன்றாடிகள் பிறர் வழங்கும் கால்நடைகளைக் கைக்கொண்டு விளக்கெரிக்க நெய் கொடுத்ததோடு, பல கோயில்களுக்குத் தாமே ஆடு, பசு போன்றவற்றைத் தானமாகவும் வழங்கியுள்ளனர்.

சிவப்பிராமணர்கள்

ஒரு குறிப்பிட்ட கோயிலில் இறைவனுக்கு வழிபாடு செய்யும் உரிமையை சிவப்பிராமணர்கள் பலர் பெற்றிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் யார் எந்த நாட்களில் வழிபாட்டுக் கடமையைச் செய்ய வேண்டும் என்று முறைப்படுத்திக் கெண்டனர். இதனைக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

சில நேரங்களில் சிவப்பிராமணர்கள் தங்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்த உரிமை நாட்களைத் தங்களுக்குள் விற்றுக் கொள்வதுண்டு என்பதை கல்வெட்டு கூறுகிறது.

ஏர் வல்லவர்கள்

விஜய நகர மன்னன் இரண்டாம் அரி அரரின் கல்வெட்டொன்று (கி.பி.1400) வேலூர் காணி ஆளர் ஏர் வல்லவர்கள் தங்கள் ஊரினை திருக்காரிக்கரை நாயனாருக்குத் திருநாமத்துக் காணியாக அளித்துள்ளனர். ஏர் வல்லவர் என்னும் இச்சொல் வேளாண்மையில் வல்லவர்களாகிய வேளாளரை அல்லது நிலக் கிழாரைக் குறிப்பதாகும்.

விழாக்கள்

திருக்காரிகரை உடையார்க்குச் சித்திரைத் திருவிழாவும், வைகாசித் திருவிழாவும் நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவில் இறைவனைத் திருவீதிவுலா எழுந்தளுவிக்க நிர்வாயில் என்னும் ஊரை வரிகள் நீக்கித் தேவதானமாகவும், வைகாசித் திருநாளுக்கு அரிகண்டபுரம் (நாகலாபுரம்), காளய கண்டச்சேரி, பள்ளிப்பட்டி (பள்ளிப்பட்டு) ஆகிய ஊர்களுக்கு இடையில் உள்ள நிலத்தை இறை கழித்துக் குடி நீங்கின நிலமாகவும் யாதவராயனான ஸ்ரீ வீர நரசிங்கதேவன் அளித்துள்ளான்.

காசும், அளவை முறைகளும்

இப்பகுதியில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பொற்காசு, பாங்காசு போன்றவையும், மூன்றாம் இராசராசன் காலத்தில் மாடையும். இரண்டாம் விருபாட்சன் காலத்தில் வராகன் போன்ற காசுகளும் வழக்கத்திலிருந்துள்ளன. இங்குள்ள இறைவன் பெயரால் திருக்காரி கரையான் உழக்கு என்னும் முகத்தலளவை பயன்படுத்தப் பட்டிருப்பது கல்வெட்டுகளால் அறியப்படுகிறது, என்று கூறுகின்றனர் சி. வீரராகவன் - மங்கையர்கரசி, தொல்லியல் ஆய்வாளர்கள், விழுப்புரம்.

தேவதான ஊர்களும், வரிகளும்

"யாதவராயனான வீரநரசிங்க தேவன் இக்கோயிலுக்கு வேலூர், காத்தமங்கலம், சூரலூர்தடை, நிர்வாயில், திருகாளத்தி, தேவ சதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களை, நெல்லாயம், காசாயம், கடமை, பாடி காவல், பட்டிப் பொன், தாப்படி போன்ற வரிகளை நீக்கித் தேவதானமாக அளித்துள்ளான்."

நிலப் பெயர்களும், நீர் நிலைகளும்

"நின்றை ஊர் மக்கள் பயாற்றூர் மகா ஜனங்களுக்கு எரிபாானத்துக்குத் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்து வசதி செய்து தந்துள்ளனர். திருக்காரிக்கரையில் உள்ள திருவாளன் மடத்துக்கு வெண் குளத்தூர் மக்கள் காவந்த கண்ட நல்லூர் நத்தம் ஏரி, வெண்குளத்தூர் ஏரி ஆகியவற்றின் வாய்க்கால்களில் நீர் பாய்ச்சிக் கொள்ளும் உரிமையைக் கொடுத்துள்ளனர். நெடுநாட்டுக் கரும்பேட்டில் இருந்த மல்லி ஏத்த பூட்டை என்னும் நிலத்தையும் அரிகண்டபுரத்தில் பூவுடையான் குழி பள்ளம், கச்சி ஏகம்பர் திருத்து என்னும் நிலங்களையும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன."

கோயில் கணக்கு

விஜய நகர மன்னன் இரண்டாம் கம்பணனின் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு (கி.பி. 1375) ஒன்று இக்கோயிற் கணக்கு புல்வேளூர் என்னும் ஊரைச் சேர்ந்த பன் மாகேஸ்வர வேளான் வீற்றிருந்த பெருமாள் என்பவனைக் குறிக்கிறது.

திருவாளன் மடம்

விஜயநகர மன்னன் இரண்டாம் புக்கன் காலத்தில் (தி.பி. 1382) திருக்காரிக்கரையில் இருந்த திருவாளன் மடத்து முதலியார் சத்திய தரிசனிகளுக்கு நின்றையூர் நாட்டு வெண்குளத்தூரைச் சேர்ந்த மக்கள் தம் ஊரினைத் தானமாகக் கொடுத்துள்ளனர்.

(தொடரும்)


-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)