தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
நினைவுப் பேழையின் திறவுகோல் -கிறிஸ்துமஸ்  மரியா சிவானந்தம் 

20221123175522638.jpg

"மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறார் -நல்ல

மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்"

இறைவன் மனித உரு எடுத்து ஒரு குழந்தையானதை நினவு கூறும் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகை !

பண்டிகை காலம் நம்மைப் புதுப்பிக்கும் காலம் !.

நமது உணர்வுகளை உயிர்ப்பிக்கும் காலம். இறைவனுடனும்,, மனிதருடனும் நம் உறவுகளை மேம்படுத்தும் காலம். எப்போது திரும்பி பார்க்க நேர்ந்தாலும் உள்ளம் நெகிழும் நினைவுகளை மீட்டும் காலம், விழாக்காலம் !

எல்லா பண்டிகைகளைப் போலவே, கிறிஸ்துமஸ் பண்டிகையும் தனித்துவ அழகு கொண்டது. பாரம்பரிய அடையாளங்களைத் தரித்துக் கொண்டு உலக மக்கள் பெரும்பான்மையினரால் குதூகலமாக கொண்டாடப்படுகிறது.

.கிறிஸ்துமஸ் குடில் , பாலன் இயேசு, வீடுகளில் கட்டப்பட்டு மின்னும் நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், உருகி வழியும் மெழுகுவர்த்திகள், விசேட அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் கேரல் மற்றும் பஜன் பாடல்கள், நள்ளிரவு திருவழிபாடு, புத்தாடை, பூக்கள், வாழ்த்து அட்டைகள் பலகாரங்கள், கேக், வைன் மற்றும் மணக்கும் பிரியாணி என இவ்விழாவின் எண்ணிலா அடையாளங்கள் இன்னும் இங்கு தொலையாமல் உள்ளன. இந்த வெளிப்புற அடையாளங்கள் தரும் ஆனந்தத்தை விட மனதுள் இறைவன் பொழியும் அன்பும், அமைதியும் நிறைவானவை, நிகரற்றவை .

கிறிஸ்துவம் அந்நிய மண்ணில் தோன்றிய மதம் என்று சொல்லப்பட்டாலும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மண்ணில் நுழைந்தது இயேசுவின் சீடர் புனித தோமையார் வழியாக. இங்கு வந்து வேரூன்றிய பின்னர் இம்மண்ணுக்குரிய விதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைந்து விட்டன. தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

"உங்கள் கிறிஸ்துமஸ் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்" என்று மூவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தம் இளம் வயது திருவிழா நினைவுகளை ஆர்வத்துடன் சொல்ல தொடங்கினார்கள்.

முதல் முதலாக நாம் தொடர்பு கொண்டது சிங்கப்பூரில் பணி பிரேமஹி மரியா அவர்களை .

20221123175016457.jpg

மனதை உருக்கும் அழகான அனுபவங்களை அவர் பகிர்ந்தார் .

"நான் பிறந்து வளர்ந்த சிற்றூரில் , கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் முதல் தேதியே தொடங்கி விடும். ஆகமன காலம் எனப்படும் திருவருகைக்காலம் முதல் மூன்று ராஜா பொங்கல் வரை எங்களுக்கு கிறிஸ்மஸ் தான். கோவில் ஜோடிப்பு, பாடல் பயிற்சி என்று நாட்கள் பரபரப்பாக செல்லும். எங்களூர் முழுவதும் கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம். அப்போது விடிகாலை நான்கு மணிக்கு கிறிஸ்மஸ் பஜனைப் பாடல்களைப் பாடியவாறு ஆண்கள் வீதியில் வருவார்கள். இரவிலேயே பெண்கள் போடும் வண்ணக்கோலங்கள் தெருவெங்கும் நிறைந்திருக்கும். "யாருடைய கோலம் ,பெரிது ?அழகானது "" என்று போட்டியே நடக்கும். பாடுபவர்களுடன் சிறுமிகளாகிய நாங்களும் பாடிக் கொண்டே நடப்போம். காலை ஆறு மணிக்கு கோவிலைச் சென்று அடைந்து ,அங்கு பாட்டு பாடி ஜெபிப்போம். அங்கு வழங்கப்படும் காபி மற்றும் சுண்டலை அனுபவித்து சாப்பிடுவோம்.

கிறிஸ்துமஸ் தினத்தில் நள்ளிரவு பூசையில் கோவிலில் நிற்க இடம் இல்லாதவாறு கூட்டமாக இருக்கும். அப்பா வாங்கி தந்த புத்தாடைகளை ஆனந்தமாய் உடுத்தி செல்வோம். பூசையில் காணிக்கை கொடுக்க அப்பா வருடாவருடம் வாழைத்தாரை 'பொடாக்கு' போட்டு எடுத்து வருவார் . பூசை முடிந்த பின் பங்கு மக்கள் கலையவே மாட்டோம். கும்மிப் பாட்டுக்கு முதலில் அம்மாக்களும் பின்னர் இளம் பெண்களும் ஆடுவார்கள். ஆண்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களை மைக்கில் பாடுவார்கள்,மைக்கில் பாடிய என் அப்பாவின் குரல் இன்னும் மனதில் இருக்கிறது . நேர்ச்சி செய்துக் கொண்டவர்கள் ஊற வைத்த பச்சரிசி , வாழைப்பழம் தருவார்கள். அங்கபிரதட்சணம் போன்ற நேர்ச்சிக்கடன்களை செலுத்துவார்கள். அத்தனை சந்தோஷமாக இருக்கும்." என்றார். தொடர்ந்து ,"பலாப்பழத்தில் விழும் சிறு கீறலால் ,அந்த இடமே வசமாக இருக்கும் . இன்று நீங்கள் என் மனதை கீறி விட்டு பழைய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டீர்கள் .இந்த நாள் முழுவதும் அந்த வாசம் என்னைச் சூழ்ந்து இருந்தது "என்றார் கவிதையாக. அவர் குரலில் கண்ணீர் கரைந்திருந்தது.

அடுத்து நம்முடன் பேசியவர் தனியார் பள்ளியின் ஓய்வு பெற்ற பிரின்சிபால் கிளாட்வின் அவர்கள், சென்னையில் வசிக்கிறார் .

20221123175103566.jpg

" என் சொந்த ஊர் பழைய காயல் .அங்குள்ள பரிபூரண மாதா கோவிலில் டிசம்பர் 18 திருவிழா. ஊர்த்திருவிழா, கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு என்று டிசம்பர் மாதம் முழுவதும் திருவிழாதான். மூன்றுக்குமே புத்தாடை கிடைக்கும். கிறிஸ்துமஸ் பஜனை பாடல்கள் களை கட்டி விடும் .என் மாமாக்கள் இசைக்கருவிகளை வாசிக்க, நாங்கள் கூடவே பாடிக்கொண்டே போவோம் . அந்த பாடல்கள் இன்னும் மனதில் இருக்கின்றன . கிறிஸ்துமஸ் முன்பு நான்கு வாரங்கள் பீடம் அலங்காரங்கள் எதுவும் இன்றி இருக்கும் .அந்த வாரங்களில் திருமணம் போன்ற விசேடங்கள் செய்ய மாட்டார்கள். அந்த நேரத்தில் என் அம்மா 'கொட்டான்' எனப்படும் ஓலைப்பெட்டியில் மண் நிரப்பி, கம்பு விதைப்பார்கள் .அது முளைத்து இளம்பச்சை நிறத்தில் இருக்கும். அதை பாலன் யேசுவுக்கு குடிலில் வைப்பார்கள் .

வீட்டில் முறுக்கு, அச்சு முறுக்கு அதிரசம் போன்ற பலகாரங்கள் செய்வார்கள் .அதற்கு அம்மாவுக்கு உதவி செய்வோம். இப்போதும் அவற்றின் ருசி நாவில் இருக்கிறது . நள்ளிரவு பூசை முடிந்து வீட்டுக்கு வந்து , ப்ரெட்டும் கறி குழம்பும் சாப்பிட்ட பின்பே தூங்க போவோம். "தோஸ்திரம் கேட்பது" என்பது எங்க ஊர் வழக்கம் . உறவினர்களைச் சந்தித்து வணங்க, அவர்கள் சிலுவை குறியிட்டு, ஆசீர் வழங்கி கையில் பணமும் கொடுப்பார்கள். தோஸ்திரம் கேட்க சிறு பிள்ளைகள் ஆர்வமாக போவோம். இந்நாட்களில் பெற்றோரின் நினைப்பு அதிகமாகி விடுகிறது .அவர்கள் அமைத்து தந்த அழகான வாழ்க்கையை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்." என்றார்.

ரூபினா ராஜ்குமார் ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர். அவர் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது பற்றிய தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் ,

20221123175144798.jpg

"ஆரம்ப நாட்களில் , என் அப்பா இருந்த போது நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மறக்க முடியாதவை . சில நாட்களுக்கு முன்பே அவர் வீட்டில் குடில் கட்ட, மேடை அமைத்து ,நூல் கட்டி வைப்பார் .காகிதங்களில் காவி தடவி உலர வைத்து ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி , மலை .குகைகள் அமைப்போம் .

சின்ன மண் பானைகளில் மண் போட்டு கடுகு, வெந்தயம் விதைத்து சிறு செடிகளை முளைக்க வைப்போம். அவற்றை அந்த குகைகளில் வைப்போம், அழகாக இருக்கும். ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், சரியாக ஒரு வாரம் இருக்கும் போது என் அப்பா இறந்து போனார். அதன் பின் பல வருடங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தேன். திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பின்பு கூட , கொண்டாட்டங்களில் அந்த பழைய சந்தோசம் இல்லை . இப்போது பேரக்குழந்தைகளுடன் கொண்டாடும் போது அந்த மகிழ்ச்சி மீண்டு வந்துள்ளது " என்றார் .

இப்போது பிற பண்டிகைகளைப் போலவே , வணிக நிறுவனங்கள், ஊடகங்களின் புண்ணியத்தில் கிறிஸ்துமஸ் நாளையும் வணிக மயமாக்கி வருகின்றனர். இம்மூவரும் பகிர்ந்துக் கொண்ட அனுபவங்கள் எளிய மக்கள் ஒரு காலத்தில் இவ்விழாவை ,மண்ணின் மரபு மாறாமல், அர்த்தமுள்ள விழாவாக கொண்டாடி இருப்பது தெரிந்தது . இவர்கள் மூவரும் தம் பெற்றோரை குறிப்பாக அவர்கள் தந்தையின் நினைவில் தவிப்பது புரிந்தது. ஒவ்வொரு கிறிஸ்துமசும் ,ஒவ்வொரு நினைவை நம் நினைவின் அடுக்குகளில் விட்டுச் செல்லும்.

ஆடைகள், அலங்காரம், உணவு எல்லாம் தாண்டி அந்நாளைய உருக்கமான நினைவுகளின் பேழையைத் திறக்கிறது கிறிஸ்துமஸ் என்னும் திறவுகோல் .

கோவிலின் உயர, உயரமான பித்தளை மெழுவர்த்தி தாங்கிகளை 'பிராஸோ' போட்டு துடைத்து ஜொலிக்க வைத்தது, கோவிலைச் சுத்தம் செய்தது, குடில் அலங்காரம், கோவில் அலங்காரம் செய்ய உதவியது, பஜனைக்கு பாட்டு எழுதி தந்தது என்று எல்லாமே என் நினைவில் இருக்கிறது. காலை, மதிய உணவுக்கு அப்பா, பெரியப்பா இருவரும் ஆள் வைத்து பெரிய பாத்திரங்களில் சமைத்து ஊரில் பலரை அழைத்து வீட்டில் உணவிட்டதும் நினைவுக்கு வருகிறது. இதில் விசேடம் என்னவென்றால் , எங்கள் குடும்பமும் மிக சாதாரண எளிய குடும்பமே.

இந்நாட்களில் மறைந்த ஒரு வழக்கம் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது. நான் சிறுமியாக இருக்கும் போதே பத்து காசு முதல் சேமித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் வாங்கி நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும் அனுப்பி விடுவேன் .அதற்கு பதில் வாழ்த்து வரும் போது மகிழ்ச்சியாக இருக்கும் .

உறவினர்கள் ,நண்பர்களுடன் ஒன்று கூடி கொண்டாடுவதும், எளியவர்களுக்கு உதவிகள் தந்து பகிர்ந்து அளிப்பதும் இந்நாளின் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக்குகிறது.

" உன்னதங்களில் இறைவனுக்கு மாட்சிமை

உலகில் நன்மனத்தோருக்கு அமைதி "

அன்பும், அமைதியும் கொணரும் கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துக்கள் !