தொடர்கள்
பொது
காலம் கடந்த கவிராஜன் - பாரதியார்  மரியா சிவானந்தம் 

20221109183737804.jpg

பிறப்பு முதல் இறப்பு வரை மனித உயிர் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறது. உணவு, உறையுள் போன்ற அவசிய தேவைகள் முதல் தேவைகளாக இருக்கின்றன. அவை கிடைத்த பின்பும் மனித மனம் அமைதி கொள்வதில்லை. இவை எல்லாம் தாண்டி அதன் தேடல் தொடர்கிறது. பதவி, செல்வம்,புகழ் என்று வாழ்நாள் முழுவதும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். இது சாதாரண மனிதரின் நிலை .

வழக்கமான இந்த வாழ்க்கைச் சிடுக்குகளில் சிக்கிக் கொண்டு தன்னைத் தொலைத்து விடாத ஞானிகள் தங்கள் தேடலை வேறு தளங்களிலெடுத்துச் செல்கிறார்கள் .இறைவனைப் பற்றிய தேடல், ஆத்மாவின் உள்ளார்ந்த தவிப்புக்கான பதில்கள், வாழ்வின் உண்மைப் பொருள் என்று அவர் தம் தேடல் உன்னத தத்துவங்களைத் தேடி ஓடுகிறது .

அத்தகைய ஒரு ஞானியை நாம் பாரதியாரில் காண்கிறோம். இம்மண்ணின் மாபெரும் கவிஞன் ,இருபதாம் நூற்றாண்டின் தனிப்பெரும் கவிஞன் பாரதி..அவன் பெயரை உச்சரிக்கும் போதே நம் உள்ளமும், உணர்வுகளும் புத்துயிர் பெறும் . விடுதலை வேட்கை நிறைந்த பாடல்களால் சுதந்திர வேள்வியில் தன்னுயிரை நெய்யென வார்த்தவன். உள்ளும் புறமும் ஒன்றென வாழ்ந்த ஒப்பற்ற மனிதன் பாரதி. சோதி மிக்க நவகவிதை எந்நாளும் மாறாத மகா கவிதைகளைப் படைத்தவன் அல்லவா பாரதி .?

பாரதியின் கவிதைகளை நாம் அனைவரும் படித்துள்ளோம் .விடுதலைப் பாடல்கள் ,தெய்வீகப்பாடல்கள் ,பாஞ்சாலி சபதம் ,வசனக்கவிதை,கண்ணன் பாட்டு என்று பலவகைப் பாடல்களை எழுதியவன் பாரதி .அவற்றுள் ஒரு முப்பது பாடல்கள் தத்துவப் பாடல்கள் . இந்தியாவின் விடுதலை ,பெண்களின் நிலை , சாதி ,இன பாகுபாடுகள்,மக்கள் வாழும் இழிநிலை அவரது சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தன. ஆனால் அவரது மன அடுக்கின் ஆழத்தில் தன்னைப் பற்றியும், இப்பிரபஞ்சம் பற்றியும் எழுந்த கேள்விகளும், அவர் கண்டெடுத்த தீர்வுகளும் அந்த தத்துவப்பாடல்களில் கவிதையாய் மலர்ந்தன.

தன்னைத்தானே "நான் யார் ?" என்று அடிக்கடி கேட்டுக் கொள்வோம் இல்லையா ? பாரதியும் அவ்வாறு தன்னை யாரென கேட்கும்போது.

"யானெனும் பொருள்தான் என்னை கொல் ? அதனையிவ்

ஊனென கொள்வர் உயிரிலார் சிலரே

பிரம்மமே யானென பேசுவர் பேசுக

பிரம்மமே யானென பேசினர் பெரியோர் " என்கிறார் .

நான் என்பது நான் மட்டுமல்ல, பிரம்மம் என்னும் இறைவனும் என்னில் அடங்குவான் என்பது பாரதியின் முடிபு.

"நாமார்க்கும் குடியல்லோம் ,நமனை அஞ்சோம் " என்பது அப்பரின் வாக்கு . இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இந்த பூமியில் அச்சம் கொள்ள மாட்டேன் என்று உறுதியுடன் சொன்ன சொற்கள் இவை. பாரதியின் சிந்தனைகளை சிதைத்து , மன உறுதியைக் குலைக்கும் மாயை என்னும் சூழலில் சிக்கிக் கொண்ட பாரதியின் சொற்களோ

" யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தேர்ந்தனன் மாயையே- உந்தன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை -மாயையே "

மாயா , நான் யாருக்கும் அடிமைப் படாதவன் என்று அறிந்த பின்பும் என்னைத் தேர்ந்தெடுத்தாயே , உன்னுடன் போர் புரிய நான் அஞ்சப் போவதில்லை. உன்னைப் பொடி பொடியாக்கி வீழ்த்துகிறேன் பார் "என்று சூளுரைக்கிறார் .

"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்" என்று உணர்ந்துக் கொண்டவர் பாரதி . அவர் உள்ளத்தில் சுடர் விட்ட ஆன்மிக ஒளி அவர் முகத்தில் குடி கொண்டது , அவர் சொல்லில் அவ்வொளி நிறைந்தது .

அதையே அவர்

ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”

தேக்கி வைத்த தேன் மடை என்பதே அவர் பெற்ற தெளிவு தான்.

இறைவனைத் தேடி அலைகிறது நெஞ்சம் . எங்கும் வியாபித்துள்ள பரம் பொருள் உள்ளத்தில் நிறையும் போது அதுவே ஆன்மாவின் உன்னத நிலை. அதை அடைந்த போது "காவி உடையும் வேண்டாம், கற்றைச் சடையும் வேண்டாம் "என்கிறார் பாரதி .அதுவே பெருந்தவம் என்று கொள்கிறார் .

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்று

ஓதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;

பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.

ஒளியும் இருளும் என்ற பாடலில் அவரது கவி மனம் 'உலகெங்கும் கதிரவனின் கதிர் பட்டு ஒளி வெள்ளமாக இருக்கையில் உள்ளத்தில் மட்டும் இருள் நிலவும் தன்மை எதனால்?' என்று கவலை கொள்கிறது .

மிக அழகான எளிய பாடல் இது

வானமெங்கும் பரிதியின் சோதி;

மலைகள் மீதும் பரிதியின் சோதி;

தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே

தரையின் மீதும் தருக்களின் மீதும்

கான கத்திலும் பற்பல ஆற்றின்

கரைகள் மீதும் பரிதியின் சோதி;

மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!

கண் முன் காண்பதெல்லாம் கனவா ,நிஜமா ,தோற்றப்பிழையா என்று கலங்கி நின்ற நேரத்தில் எழுந்த பாடல் ஒன்று

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே …

நீங்களெல்லாம் சொப்பனம் தானோ ?

பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே …

நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ?

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

என்று மயங்கி நிற்கிறார் ,இயற்கையைக் கண்டு !

அதே கவிஞர் தெளிவு பெற்ற பின்பு 'எல்லாம் இன்ப மயம் எல்லா உயிரும் ஒன்றேஎனவும் தெளிகையில் பிறந்த பாட்டு

‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்,

நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்! “

பாரதி தான் வாழ்ந்த காலங்களைத் தாண்டி சிந்தித்த கவிஞன் . அதனால் அவன் பாடல்கள் உலகம் வாழும் அளவு வாழும் . அவன் பாடல்களை இசையோடு பாடிப் பாருங்கள் ,தமிழின் மேல் பெருங் காதலே உண்டாகும் .

பாரதியின் தத்துவப்பாடல்கள் அத்தனையும் முத்துக்களென இருக்கின்றன. அவற்றை அள்ளிச் சூடிக் கொள்ள நாம் தயங்கவே வேண்டாம்

நம் குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடல்களை கற்றுக் கொடுக்கிறோம் .அல்லது அவர்களே இணையத்தில் கற்றுக் கொள்கிறார்கள் .இதோ கீழ் கண்ட எளிய பாடலை இசையோடு கற்றுக் கொடுங்கள் ,அவர்கள் தமிழோடு பாரதியையும் நேசிக்க கற்றுக் கொள்வார்கள்

"பூட்டைத் திறப்பது கையாலே-

நல்ல மனந்திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே-

இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே"

நம் சின்ன வயதில் நாம் கற்றுக் கொண்ட இப்பாடல் பாரதியின் தத்துவப்பாடல்களில் ஒன்றுதான். இன்று பாடினாலும் அந்த தமிழ் இனிக்கிறது ,பாரதியின் நினைவுகளைப் போலவே .

"ஆசை முகம் மறந்துப் போச்சே , இதை ஆரிடம் சொல்வேனடி தோழி” என்று நீ பாடலாம். ஆனால் உன் முகமோ, தமிழோ, கவிதைகளையோ நாங்கள் மறப்பதற்கில்லை .

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரதி .