தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 11 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

கோசல நாட்டில் பறவைகளும்
விலங்குகளும் அன்பு பாராட்டி
மகிழ்வாய் வாழ்ந்ததை

தனக்குரிய கவிநயக் கற்பனை
வளத்தோடு சாமான்ய மக்களுக்குப்
புரியும்படி எளிமையாக

பாலகாண்டத்தின் நாட்டுப்படலப்
பாடலிலே கவி பாடுகிறார்

சேல் உண்ட ஒண்கனாரின்
திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப்பள்ளி
வளர்த்திய மழலைப்பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி
கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத்
தேரைத் தாலாட்டும் பண்ணை

மீன் போன்ற கண்களை உடைய
பெண்களைப் போலத் திரிகின்ற
சிவந்த கால்களை உடைய அன்னம்
தாமரை மலர் படுக்கையில்
தன் குஞ்சுகளை இட்டு

கோசலத்து பெண்களின் நடையழகைக்
கண்டு வியந்து திரிய

காலில் ஒட்டிய சேற்றோடு
எருமை அந்த தாமரை மலர்
படுக்கையைத் தாண்டா
நீர்த் திவலைகள் அதன் மடியில்
பட கன்றுக் குட்டி கனைப்பு
நினைவில் நின்றாடத்
தானாகப் பால் பீய்ச்ச
அன்னக் குஞ்சுகள் பாலை
உண்டு பசியாற

பச்சைத் தேரைகள் தாலாட்ட
அன்னக் குஞ்சுகள்
கண் அயர்ந்தன
என்பதே இப்பாடலின் விளக்கம்

பொதுவாக பெண்களின்
நடையழகை அன்னத்தோடு
ஒப்பிடுவர்
இங்கே கம்பர் கற்பனை நயமாக
பெண்களின் நடையழகைக்
கண்டு அன்னம் திரிந்தது
என்றார்

தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்
இதற்கு அருமையாக உவமை
நயம் என்று கூறுவர்

அதாவது எருமையின் பால்
கன்றுக்குச் சொந்தம்
அல்லது அதை வளர்த்தவனுக்குச்
சொந்தம்
ஆனால் யாருக்கும் இல்லாமல்
அன்னக் குஞ்சுகளின் வாய்க்குப்
போனது என்று உரைப்பதின் மூலம்

தயரதனுக்குப் பிறகு அரசாட்சி
ராமனுக்கு
இல்லை எனில் பரதனுக்கு
ஆனால் பாத ரட்சைக்கு
ஆட்சி போனது
என்பதையே கம்பர்
இப் பாடலில் உரைப்பதாகக்
கூறுகிறார்கள்
தமிழ்ச்சான்றோர்

கம்பரை அகமகிழ
முகம் மலர
மெய் சிலிர்க்க
மனமாரப் பாராட்டி வாழ்த்துவோம்

மீண்டும் சந்திப்போம்...