தொடர்கள்
தொடர்கள்
திருப்புகழ் இசையும் இலக்கணமும் 4 - குருநாதன்.

ஒம் சரவணபவ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

20221109173724620.jpg

20221109233706307.jpg

திருப்புகழ் வண்ணவிருத்தப் பாடல்களின் அடிப்படையாக இருக்கும் ‘சந்தக்குழிப்பு’ என்பதைப் பாடிக்காட்டி விளக்கும் ஒரு சிறு முயற்சி இது.

இப்பதிவில் இருக்கும் ஒலிப்பதிவுகள் 'திருப்புகழ் இசையும், இலக்கணமும்' என்ற கட்டுரையில் கூறப்பட்டவைகளை மேலும் விளக்குவதற்கானவை. எனவே, அந்தக் கட்டுரையின் தொடர்ச்சி மற்றும் நீட்சியாக இந்தப் பதிவைக் கொள்ளவேண்டும். இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதற்குமுன் அந்தக் கட்டுரையைப் படித்துப் புரிந்துகொண்டவர்களுக்கு இப்பதிவில் உள்ளவை எளிதாகப் புரியும்; மேலதிகத் தெளிவையும் தரும்!

திருப்புகழ்ப் பாடல்கள் சந்தக் குழிப்புகளின் அடிப்படையில் பாடப்பட்ட வண்ண விருத்தப் பாடல்கள் என்று மேலே குறிப்பிட்ட நம் கட்டுரையில் நாம் சொல்லியிருக்கின்றோம். மேலே செல்லுமுன்னர், அதாவது ஒலிப்பதிவுகளைக் கேட்பதற்குமுன், வண்ண விருத்தப் பாடல்களின் சில முக்கியமான அம்ஸங்களை, கூறுகளைச் சற்று சுருக்கமாக நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

'சந்தம்' என்றால் 'ஒலியின் வண்ணம்,’ ‘ஒலியின் அழகு,’ ‘ஓசை ஒழுங்கு’ எனலாம். ஒரு குறிப்பிட்டக் கால அளவில், ஒரு குறிப்பிட்ட ஒலிக்கோர்வையின் ஓசை மீண்டும், மீண்டும் அலைபோல் எழுந்து ஒலித்துச் சந்திப்பதால் கிடைக்கும் ஓசைநயம், அல்லது எழும் இசை என அதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். கிட்டத்தட்டத் 'தாளகதி' அல்லது சீராக ஒலிக்கும் 'தாளலயம்' போன்றதுதான் இதுவும்.

'சந்தக்குழிப்பு' என்பது எழுத்து வடிவில் இருக்கும், இலக்கண விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டச் சந்தகளின் கோர்வை அமைப்பு அல்லது வரிசை என்றும் புரிந்துகொள்ளலாம்.

'விருத்தம்' என்பது ஒருவகைப் பாவினம். ஒரு விருத்தப்பாவில் நான்கு அடிகளே இருக்கவேண்டும். ஒவ்வொரு அடியிலும் சீர்கள் (சொற்களன்று) எத்தனை வேண்டுமானலும் இருக்கலாம். நான்கு அடிகளும் ஒரே அளவில் சீர்களால் அளவெடுத்து வரவேண்டும்; ஒத்து இருக்க வேண்டும். அதாவது, ஒரு அடியில் இருக்கும் சீர்களும் மற்ற மூன்று அடிகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் சீர்களும் ஒரே அமைப்பில், ஒரே அளவில் இருக்க வேண்டும்! ஒர் அசையோ, ஒற்றோ மாறக்கூடாது.

விருத்ததின் ஒவ்வொரு அடியும் இரு பகுதிகளாகவும் பிரிக்கப்படலாம். ஒவ்வொரு பகுதியும் 'கலை' எனப்படும். இரண்டு கலைகள் சேர்ந்து ஓர் அடியாகும். ஒவ்வொரு அடியிலும் இருக்கும் முதல் சீர், மற்ற மூன்று அடிகளில் இருக்கும் முதல் சீரோடு எதுகையால் ஒத்திருக்கும். ஓர் அடியில் இருக்கும் இரு கலைகளின் முதற்சீரின் முதலெழுத்து மோனையால் ஒத்திருக்கும். இதுவல்லாத மோனை விதிகளும் இருக்கின்றன. ஆனால், அவைகளைப் பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு கலையின் இறுதியிலும் 'தொங்கல்' எனும் தனிச் சீர் இருக்கும்.

தனிச்சீர் அல்லது தொங்கலைத் தவிர, ஒரு கலையில் இருக்கும் மற்ற அத்தனைச் சீர்களும் அசைகளாலும், ஓசைஒழுக்காலும் , அமைப்பாலும், அளவாலும் மத்த கலைகளில் இருக்கும் சீர்களோடு ஒத்திருக்க வேண்டும். அதுபோன்றே நான்கு அடிகளிலும் இருக்கும் தனிச்சீர்களும் ஒன்றையொன்று ஒத்திருக்க வேண்டும்! சீர்கள் விருத்தப்பாவிற்குரிய யாப்பிலக்கணப்படி அமைந்திருக்க வேண்டும்.

திருப்புகழ் போன்ற வண்ண விருத்தப்பாடலில் ஒரு கலையில் இருக்கும் அத்தனைச் சீர்களும் நாம் முன்பே குறிப்பிட்டச் சந்தக்குழிப்பின்படி அமைந்திருக் வேண்டும்! இது கிட்டத்தட்ட மீட்டருக்கு மேட்டர்போல்தான்! ஆனால், திரைப்படப் பாடல்களைப்போலின்றி, இவையெல்லாம் கடுமையான இலக்கண விதிகளுக்கு உட்பட்டவையாகும்.

சீர்கள், அவற்றின் ஓசை ஒழுக்கு என்ற‌ அத்தனையும் சந்தக்குழிப்புகளுக்கானக் கன கச்சிதமானக் கணக்கின்படி இருக்க வேண்டும்!

மீண்டும் சொல்கின்றோம். சந்தக்குழிப்பு என்பது சீர்களுக்கானது. பாடலின் சொற்களுக்கானது அன்று! சொற்கள் சீர்களின் அமைப்பிற்கேற்பச் சிதைந்தோ அல்லது சேர்ந்தோ வரும் என்றறிக‌!

திருப்புகழ் வண்ணவிருத்தப் பாடல்களில் பெரும்பாலும், தனிச்சீரைத் தவிர, ஒரு கலையில் இருக்கும் மற்ற சீர்கள் அனைத்தும் ஈரசைச் சீர்களாவும், தனிச்சீர் மூவசைச் சீராகவும் இருக்கும்! சில பாடல்களில், ஒவ்வொரு கலையிலும், தனிச்சீர் மட்டும் அல்லாது, மூவசைச் சீர்கள் கலந்தோ, முழுவதுமாகவோ இருப்பதையும் நாம் காணலாம்! தனிச்சீர் யாப்பிலக்கணத்தில் குறிப்பிடப்படும் 'காய்ச்சீர்' என்ற அமைப்பில் இருக்கும்.

யாப்பிலக்கணப்படி, சீர்களில் இருக்கும் மெய்யெழுத்து ஒற்றுகள் அசைகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஒற்றுக்களை நீக்கிவிட்டுதான் ஒரு சீரில் உள்ள அசைகளைக் கணக்கிடல் வேண்டும். இதற்கு இலக்கண ரீதியானக் காரணம் உண்டு. அதை நாம் இப்போது அறிந்துகொண்டே ஆகவேண்டியத் தேவை ஏதுமில்லை!

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த ஒற்றுக்களே வண்ணத்தில் அல்லது சந்தத்தில் இருக்கும் ஓசைநயத்தின் முக்கிய‌ காரணிகளில் ஒன்றாகும்! ஆனால், அவைகள் அசைகளாகக் கருதப்படுவதில்லை.

இப்பொழுது நம் முந்தையக் கட்டுரையில் எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளக் 'கைத்தல நிறைகனி...’ என்று துவங்கும் திருப்புகழ்ப் பாடலை எடுத்துக்கொண்டு, அதன் முதல் இரண்டடிகளைக் சந்தக்குழிப்புகளின் துணையோடுப் பாடிப்பார்க்கலாம். முறைப்படியும், பொருள் புரிவதற்காவும் சீர்களை அல்லது பதங்களைச் சேர்த்தும், பிரித்தும் சொற்களாக்கிக் கொண்டுப் பாடிப் பார்க்கலாம்.

இந்தப் பாடல் திருப்புகழ்ப் பாடல்வரிசையில் முதற்பாடலாக ஒரு காப்புச்செய்யுள் அல்லது கடவுள் வாழ்த்துபோன்று அமைந்துள்ளது. ஆனால், உண்மையில் திருப்புகழுக்கு காப்புச்செய்யுள் என்று ஏதும் தனியாக இல்லை. இது அருணகிரியார் பாடியருளிய முதற்பாடலும் அன்று. மங்கலகரமாகத் துவங்க வேண்டும் என்பதற்காக, அது ஒரு விவாதி ராகமே என்ற போதிலும் கூட, நாட்டை ராகத்தில் இந்தப் பாடலை அமைத்துப் பாடுவது ஒரு மரபாகும். கம்பீரநாட்டையிலும் இப்பாடலைப் பாடுவது உண்டு! ஓதுவார்மூர்த்திகள் ‘நட்டபாடை’ என்ற தமிழ்ப்பண்ணில் இந்தப் பாடலைப் பாடுவார்கள். இந்தப் பாடலுக்குக்கானத் தாளம் ஆதி.

1. முதலில் இந்தப் பாடலுக்கானச் சந்தக்குழிப்பு:

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான

- என்பதாகும்.

2. இதை ராகத்தோடுப் பாடிப் பார்க்கலாம்.

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான

3. இப்பொழுது, இப்பாடலின் முதல் இரண்டு அடிகளைப் பாடிப் பார்க்கலாம்:

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி

கப்பிய கரிமுகன் அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை கடிதேகும்!

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!

4. இப்பொழுது, இப்பாடலின் முதலிரண்டு அடிகளை மற்றும் சற்று நடைமாற்றிப் பாடிப் பார்க்கலாம்!

5. இப்பாடலின் முதலடியைக் கம்பீரநாட்டை ராகத்திலும் பாடிப்பார்க்கலாம்:

6. இப்போது, இப்பாடலின் முதலடியை மட்டும் அசைகளின் அமைப்பைக்கொண்டுப் பாடிப்பார்க்கலாம்:

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

நேர்நிரை நிரைநிரை நேர்நிரை நிரைநிரை

கப்பிய கரிமுக னடிபேணிக்

நேர்நிரை நிரைநிரை நிரைநேர்நேர்

7. இந்தப் பாடலின் முதலடியைச் சீர்களின் யாப்பிலக்கண வாய்ப்பாட்டின் துணைகொண்டுப் பாடினால் எப்படி இருக்கும் என்றும் இப்பொழுது பார்க்கலாம்:

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்

கப்பிய கரிமுக னடிபேணிக்

கூவிளம் கருவிளம் புளிமாங்காய்

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான

- என்ற சந்தக்குழிப்பில் ஏழு சீர்களே இருக்கின்றன. ஆனால், ஆதிதாளத்தில் எட்டு அட்சரம் அல்லது அளவைகள் (counts) உள்ளன. ஏழு சீர்களே ஆனாலும், ஆதி தாளத்தின் எட்டு தாள அளவில் இது கச்சிதமாகப் பொருந்தி அமர்வதற்கானக் காரணம் முதல் ஆறு சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், ஏழாவது சீர், அதாவது தனிச்சீர், மூவசைச் சீராகவும் இருப்பதால்தான்.

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளவை ஓர் எளிய புரிதலுக்கானவை. இது பாண்டித்தியம் பெற்றவர்களுக்கு ஆனது அன்று. இதில் பல‌ குறைகள், பிழைகள், போதாமைகள் இருக்கக்கூடும். அவற்றை விவரம் நன்கு அறிந்தவர்கள் பொறுத்தருள வேண்டும்! திருத்தங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று அன்போடும், பணிவோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி M.S. அம்மா இந்தப் பாடலை நாட்டை ராகத்தில் பாடுவதைக் கேட்க இங்கே

சொடுக்கவும்.

திருவாளர் சம்பந்தம் குருக்கள் ஐயா கம்பீரநாட்டை ராகத்தில் இப்பாடலைப் பாடுவதைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

மிக்க நன்றி! ஓம் முருகா சரணம்!

திருப்புகழ் இசையும் இலக்கணமும் இதுவரையில்...

முற்றும்