தொடர்கள்
கவர் ஸ்டோரி
முத்திரை சிறுகதை !! ஒரு காவலாளியும் களவாணியும் - சத்தியபாமா உப்பிலி.

20221109162115439.jpeg

20221109162138683.jpg

வாசல் கதவை மெதுவாக இழுத்து தாளிட்டு வெளியே வந்தான் ராம்சிங். ஒவ்வொருமுறையும் அது செய்யும் போது மனம் கலங்கும். வீட்டிற்குள் படுத்த படுக்கையாய் தாய். கால்கள் செயலிழந்து சக்கர நாற்காலியில் மனைவி. அவர்களை கவனித்துக்கொள்ள வரும் சரளா இன்னும் வர வில்லை. கொஞ்சம் தயங்கி வெளியே நின்றான். ரோட்டின் இரெண்டு பக்கமும் வெறிச்சோடி இருந்தது. பலருக்கு இன்னும் பொழுதே விடிந்திருக்காது. முந்திய நாள் பெய்த மழையினால் தெருவில் அங்கங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. சரளா வர நேரம் ஆகும். அவள் வீட்டின் முன் குண்டும், குழியும் சகதியுமாக இருக்கும். ஜாக்கிரதையாக வரவேண்டும். அந்த அக்கரையில் எத்தனை சதவிகிதம் சுயநலமென்று யோசித்தான். என்ன செய்வது! சரளா வரவில்லை என்றால் கொஞ்சம் கடினம் தான். அம்மாவின் தேவையை ஆஷா கவனித்துக்கொள்வாள். ஆஷாவுக்கு தான் சரளா தேவை. பாவம். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே ஆஷா, காலையில் உணவு தயாரித்து, காலைக்கும், மதியத்திற்குமாய் சாப்பாடு கட்டி கொடுத்து விடுவாள். அவளுக்கு துணைக்கு கூட நின்றால் போதும்.

மெதுவாக நடக்க ஆரம்பித்தான் ராம்சிங். ரோடு முனை வரும்போது திரும்பி பார்த்தான். மறு பக்கத்தில் சரளா வேகமாக வருவது தெரிந்தது. செருப்பை கையில் தூக்கிக்கொண்டு, புடவையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தாள். நிம்மதி பெரு மூச்சு விட்டுவிட்டு வேகமாக ரயில் நிலையம் நோக்கி நடந்தான்.

ராம்சிங். பேரில் மட்டும் தான் சிங். மத்தபடி சரியான தமிழன். நாலைந்து தலை முறைக்கு முன் வடக்கிலிருந்து வந்து இங்கே குடி புகுந்தவர்கள் அவன் முன்னோர். மதுரையில் தான் படித்து வளர்ந்தான். பின் வேலை தேடி சென்னை வந்தான். ஆறு அடி, நல்ல உடற்கட்டு. பட்டாளத்தில் சேரவேண்டுமென்ற ஆசை, ஆயிரம் தடைகளினால் இப்போது ஒரு வீட்டிற்கு செக்யூரிட்டி ஆக இருக்கிறான். காலையில் ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை. வரும் சம்பளத்தில் வீட்டை காப்பற்ற முடிகிறது. முதலாளி, அவன் மனைவிக்கும் தாயாருக்கும் மருந்து செலவிற்க்காக, கூட ஒரு ஐநூறு ரூபாய் கொடுக்கிறார். நல்ல மனிதர். நிதானமான வேலை.

ரயில் நிலையத்திற்கு வரும்போது சரியாக அவன் போகவேண்டிய மின்சார ரயில் வந்தது. தாம்பரத்திலிருந்து கிண்டி வரவேண்டும். ஒரு முக்கால் மணி நேரமாவது ஆகும். ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். ஜன்னலோரமாக அமர்ந்தால், இரு புறமும் மனிதர்களை பார்க்க வேண்டாம். ஒரு பக்கம் மட்டும் சகித்துக்கொண்டால் போதும். சிலநாட்கள் யாருடனும் பார்த்து பேசவே அவனுக்கு தோணுவதில்லை. ஜன்னலில் தலை சாய்த்து கண் மூடிக்கொண்டான்.

" இன்னிக்கு சம்பள நாள். முதலாளி அம்மாகிட்ட எப்படியாவது பேசி ஒரு 5000 ரூபாய் வாங்கி விட வேண்டும். ஒரு டிவி வாங்கி கொடுத்தால் அம்மாவுக்கும் ஆஷாவுக்கும் கொஞ்சம் பொழுது போகும். முதலில் கொஞ்ச ரூபாய் கட்டிவிட்டால் பின் தவணை முறையில் கட்டி விடலாம். அம்மா குடுக்கணும். அய்யா கிட்ட கேட்டா, அம்மா கிட்ட கேளுன்னு தான் சொல்லுவார்."

கிண்டியில் இறங்கினான். மணி ஆறு ஆகியிருந்தது. " லேட்டு தான்" மனதுக்குள் சொல்லிக்கொண்டே வேகமாக நடந்தான். ரயில் நிலையத்திலிருந்து 5 நிமிடம் நடை தான். பங்களா வந்து சேரும்போது மணி 6.10 ஆகி இருந்தது. செக்யூரிட்டி அறையினுள் வேலு இல்லை. அவசர அவசரமாக சீருடைக்கு மாறிக்கொண்டு வெளியே வந்தான்.

" வந்துடீங்களா ராம்சிங். என்ன காணுமேன்னு நினைச்சேன்! வீட்டுல ஒன்னும் பிரச்னை இல்லையே!" கையில் பையுடன் கிளம்ப தயாரான நிலையில் வேலு வந்தான்.

வேலுவுக்கு கோவமே வராது. நல்ல நண்பன். எதையும் நம்பி பேசலாம்.

" சாரி வேலு. சரளா வர நேரமாயிடுச்சு."

"ராம், இன்னிக்கு சம்பள நாள். 5000 ரூபாய் கேக்கறேன்னு சொன்னீங்களே தயங்காம கேட்டுக்கோங்க. நான் இப்போ தான் சம்பளம் வாங்கினேன். வரவுக்கு முன்னாலேயே செலவு தலையை தூக்கிகிட்டு நிக்குது. வரேன்."

சொல்லிவிட்டு. தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.

ராம்சிங் தன் செக்யூரிட்டி கூண்டுக்கு சென்று வருகை பதிவேட்டை எடுத்து திறந்து வைத்தான். யாராவது முக்கியமானவர்கள் வருவதனால், முன் கூட்டியே முதலாளி சொல்லி விடுவார். கூண்டை விட்டு வெளியே வந்து கதவருகே நின்றான். அது அவன் முதலாளி காலைநேர நடைக்காக வருகின்ற நேரம். இவனை பார்த்து புன்னகைப்பார். சில சமயம் நின்று ஏதாவது பேசுவார். தோளில் இருந்த துணியை எடுத்து வாசல் இரும்பு கதவு பிடியை துடைக்க ஆரம்பித்தான். முதலாளியின் செருப்பு சத்தம் கேட்டதும், திரும்பி சற்று ஒதுங்கி நின்றான். அவர் தினமும் கதவருகே வந்து நின்று கைப்பிடியை தொட்டு விட்டு திரும்பி செல்வார். ஒரு எட்டடி கதவு. அரண் போல நிற்கும். முதலாளி, எப்பொழுதும் போல் கைப்பிடியை தொட்டு விட்டு திரும்பினார். தினமும் வீட்டு வாசலிலிருந்து கதவு வரை ஒரு 45 நிமிடம் நடப்பார். ராம்சிங், அவர் நிமிர்ந்து பார்த்தால் புன்னகைக்கலாம் என்று தயாராக நின்றான். அவர் அவனை இன்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சரி, அடுத்த முறை வரும்போது சிரிக்கலாம் என்று தன் சிரிப்பை சற்று ஒதுக்கி வைத்தான். ஒரு ஐந்தாரடி நடந்தவர், திடுமென நின்று திரும்பி பார்க்காமலே, "ராம்சிங்!" என்று கூப்பிட்டார். "இதோ வரேன் சார்!" வேகமாக ஓடினான்.

"இன்னிக்கு அம்மா கிட்ட போய் சம்பளம் வாங்கிக்கோ."

"சரி அய்யா!"

5000 பற்றி பேச்சை எடுப்பதற்கு முன் வேகமாக சென்று விட்டார். அவ்ளவுதான். இனிமேல் இதைப்பற்றி பேச முடியாது. அம்மாவிடம் தான் கேட்க வேண்டும். ஒரு எட்டு மணிக்கு தான் உள்ளிலிருந்து அழைப்பு வரும். பார்க்கலாம். தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

"கேட்கலாமா வேண்டாமா? டிவி இல்லை என்றால் என்ன ஆகி விடப்போகிறது. காசு கிடைக்கவில்லை என்றால், ஆஷாவோ அம்மாவோ ஒன்றும் சொல்லப்போவதில்லை."

சொல்ல மாட்டார்கள் அனால் லேசாகவேனும் வருத்தப்படுவார்கள். கேட்டு தான் பாப்போம். கிடைக்கும், கிடைக்காது. இதற்குமேல் மூன்றாவது பதில் இல்லையே." ராம்சிங்க்கு ஒரே குழப்பமாக இருந்தது. சரியாக எட்டு மணிக்கு உள்ளிருந்து போன் வந்தது. வாசற்கதவு தாளிட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்றான்.

மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்குள் செல்வான். பிரம்மாண்டமும் அமைதியும் கலந்து இருக்கும் அங்கே. பத்து வருடம் முன்பு வரை கலகல வேண்டிருந்த வீடு. பிள்ளைகள் இருவரும் வளர்ந்து வெளிநாடு சென்ற பின் ஒரு இறுக்கம் கொண்டது. தயங்கி தயங்கி வெளியே நின்றான்.

" வா ராம்சிங்" அம்மா அழைத்ததும், கையை கட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

" இந்தா! இந்த மாசம் சம்பளம். சார் ஆயிரம் ரூபாய் கூட்டி குடுக்க சொல்லி இருக்கார். வாங்கிக்கோ."

ராம்சிங் மறுபடியும் குழம்பிப்போனான். "இந்த நேரத்தில் ஐயாயிரம் ரூபாய் கேட்டால் பேராசை என்று நினைத்து விடுவார்களோ!"

" என்ன ஆச்சு. உனக்கு திருப்தி இல்லையா?" சிரித்துக்கொண்டே கேட்டார்.

" அதெல்லாம் இல்லம்மா! ரொம்ப சந்தோசம்." சற்று குனிந்து சம்பளம் வாங்கிக்கொண்டு திரும்பினான்.

“அடுத்தமாசம் கேட்டுக்கலாம்” என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு தன் இடம் நோக்கி நடந்தான்.

அடுத்த மாதம் வேறு ஏதாவது பிரச்னை வரலாம். இப்போது கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து மறுபடியும் திரும்பி உள்ளே சென்றான்.

" என்ன ராம்சிங்?" வெளியே கிளம்பிக்கொண்டிருந்த முதலாளி அம்மா கைப்பையை திறந்து ஏதோ தேடிக்கொண்டே கேட்டார்.

" அம்மா, அது வந்து..."

" சீக்கிரம் சொல்லு"

"ஒன்னும் இல்லை மா. நீங்க எங்கயோ கிளம்பிட்டு இருக்கீங்க. நான் அப்பறம் வரேன்"

"நீ இருவது வருஷமா இங்க வேல பாக்கற. இப்படி இரண்டாவது தடவ நீ உள்ள வந்து நான் பாத்தது இல்ல, சொல்லு என்ன வேணும்!"

" அம்மா, ஒரு 5000 ரூபாய் வேணும். சம்பளத்துல கூட கழிச்சுகோங்க!"

"எதுக்கு இப்போ 5000 வேணும்?"

" ஒரு டிவி வாங்கம்மா!"

"டிவி யா? எதுக்கு?"

"அம்மாவும் ஆஷாவும் வீட்டிலேயே தானே இருக்காங்க! கொஞ்சம் பொழுது போகக்கட்டுமே ன்னு..." தயங்கி தயங்கி சொன்னான்.

" எப்படி வாங்க போற?"

"தவணைல தான்!"

"ம்ம், எதுக்கு கடன் வாங்கற? இதெல்லாம் அனாவசிய செலவு!"

சொல்லிவிட்டு, கைப்பையை மூடி, தோளில் மாட்டிக்கொண்டு, "ஜானகி, டிரைவர் கூப்பிடு." என்று சொல்லிக்கொண்டே ராம்சிங்கை கடந்து சென்றாள். ஒரு நிமிடம் தயங்கி நின்று பின் கதவை திறக்க வாசலுக்கு ஓடினான் ராம்சிங்.

கார் வாசல் கதவருகே வந்த போது, கார் கண்ணாடியை இறக்கி," இந்தா, ஆனா கடன் வாங்க ஆரம்பிச்சா முடியாது. பாத்துக்கோ."

" ரொம்ப நன்றிம்மா" சந்தோஷத்துடன் கூறி பணத்தை வாங்கிக்கொண்டான்.

கடனோ, கிடனோ அம்மாக்கும் ஆஷாக்கும் இனிமேல் பொழுது போகும்.

சாயங்காலம் போகும் போது மூர்த்தியை பார்த்து பணத்தை கொடுத்துவிட வேண்டும். பிறகு மாசம் ஆயிரம் ரூபாய் கட்டி தவணையை முடித்துவிடவேண்டும். உற்சாகமாக அன்றைய வேலையை தொடர்ந்தான். ஆறு மணிக்கு வேலு வந்ததும், ஐயாயிரம் கிடைத்ததை சொல்லிவிட்டு மூர்த்தியை பார்க்க கிளம்பினான். சம்பள பணத்தை சட்டையின் உள் பையில் வைத்துகொண்டு, ஐயாயிரம் ரூபாயை பர்சில் வைத்துக்கொண்டு கிளம்பினான். மூர்த்தி தாம்பரம் தான். போகும்போது பணம் குடுத்தால் நாளை டிவி வந்து விடும். உற்சாகமாக ரயில் நிலையத்திற்கு வந்தான். கூட்டம் தான். ஒன்றும் செய்யமுடியாது. ரயில் வந்ததும் அவசரமாக ஏறி கம்பியை பிடித்துக்கொண்டே கதவருகே சாய்ந்து நின்றுகொண்டான். டிவி வாங்கினால் கேபிள் போட வேண்டும். அதற்கும் மாசம் செலவாகும். எப்படியாவது சமாளிக்க வேண்டியது தான். கிரோம்பேட்டையில் சற்று கூட்டம் இறங்கும். ஏதாவது இருக்கையில் அமர்ந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். அவ்வப்போது சட்டை பையையும் பர்சையும் தடவி பார்த்துக்கொண்டான்.

செல்வராசுக்கு அன்றைக்குத்தான் விடுதலை. செய்யாத குற்றத்திற்கு ஆறுமாதம் தண்டனை. திடீரென்று ஏதோ காரணம் சொல்லி குப்பதிலிருந்து கூட்டிக்கொண்டு போனார்கள். பொன்னுத்தாயி கதறிக்கொண்டே வந்தாள். "சாமி, எம்புள்ள வம்பு தும்பு போகாது சாமி. என் கூடவே கொளத்து வேலைக்கு வந்துட்டு திரும்பிடும். யார்கூடயும் பேச கூட செய்யாது சாமி." அதிகாரம் காதில் வாங்கிக்கொள்ள வில்லை. பின் என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவும் இல்லை. ஆறு மாதம். இன்று தான் திரும்பி வருகிறான். தாய் சொல்லாத பாடத்தை ஆறு மாதம் ஜெயில் அனுபவம் சொல்லி கொடுத்தது. ரயில் நிலையம் வரும் போது வீட்டுக்கு போய் என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அம்மாவுடன் மறுபடி வேலைக்கு செல்ல முடியாது. ஜையிலில் அவன் சந்தித்த ராணாவை நினைத்துக்கொண்டான்.

" நீ ரொம்ப நல்லவனா இருக்க. குடுத்து வைச்சுருந்தா கடைசி வரைக்கும் அப்படியே இருந்து தப்பிச்சுடலாம். இல்லைன்னா ஏதாவதுல மாட்டி சிக்கி சிதைஞ்சுருவோம். அதுல இருந்து வாழணும்னா அதுக்குள்ளயே ஏதாவது பிடிச்சுக்கிட்டு தொங்கு. ஊரு உன்னைய எதையும் மறக்கவிட போறதில்ல."

பத்து ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கிக்கொண்டு, ஒவ்வொன்றாக வாயில் போட்டுக்கொண்டே ரயில் நிலையம் நோக்கி சென்றான். எழும்பூரில் இறங்கி வீட்டுக்கு போகவேண்டும். "அம்மா வாசல்லேயே நிக்கும்."

நீ ஒண்ணுத்தையும் மனசுல வைச்சுக்காதே கண்ணு. வீட்டுக்கு வா. ஆறும் ஒன்னியும் சொல்லாது. எல்லாம் நம்ம சனம் தானே."

செல்வராசுக்கு நம்பிக்கைஇல்லை. யோசித்துக்கொண்டே ஒரு கம்பியில் சாய்ந்து நின்று தன்னை சுற்றி பார்த்தான். எல்லாரிடமும் ஏதாவது ஒரு பை. எல்லாருமே அதை இருக்க பற்றிக்கொண்டிருந்தார்கள். அவனருகே ஒரு ஆறடி மனிதன் வந்து நின்றான். அவ்வப்போது சட்டைப்பையையும், பாண்ட் பாக்கெட்டையும் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான். அவனையே பாத்துக்கொண்டிருந்தான் செல்வராசு. ராணாவின் வார்த்தைகள் வந்துவந்து போயின. ஒரு முடிவு எடுத்தவன் போல கையில் இருந்த கடலையை சாப்பிட்டு முடித்து, விலகிப்போய் நின்றான். ரயில் வந்ததும் அந்த ஆறடி மனிதன் அருகே போய் நின்றுகொண்டான். அந்த மனிதன் எதையோ யோசித்துக்கொண்டு கதவுக்கருகில், கம்பியை பிடித்துக்கொண்டு சாய்ந்து நின்று கொண்டிருந்தான். கிரோம்பேட்டையில் அதிக கூட்டம் இறங்கி ஏறும் தருணத்தில், அந்த மனிதனின் பாண்ட் பாக்கெட்டிலிருந்து லாவகமாக பர்ஸை எடுத்து கொண்டு கூட்டதோடு இறங்கி கரைந்து போனான்.

கேபிள் டிவியில் என்னவெல்லாம் சேனல் கேட்கவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்த ராம்சிங், யாரோ தன்னை தள்ளுவது போல உணர்ந்தான். தடுமாறி சமாளித்து எழுந்து நிற்பதற்குள் ரயிலும் ஒரு ஆட்டம் ஆடி கிளம்பியது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து பாண்ட் பாக்கெட்டில் கை வைக்கும் பொழுது சில்லென்று ஏதோ ஒன்று உச்சி மண்டையில் அடித்தது போல் இருந்தது. படபடப்புடன் இரெண்டு பாக்கெட்டிலும் தேடிப் பார்த்தான். சட்டையில் கைவைத்து பார்த்தபோது அந்த பணம் பத்திரமாக இருப்பது தெரிந்தது. அவன் படபடப்புடன் தேடியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் என்ன என்று கேட்க ஆரம்பித்தனர். யாரை நம்புவது, என்ன சொல்வது. அவனுக்கு உலகமே சுற்றியது போல் இருந்தது. அந்த பெட்டியிலே அங்கும் இங்கும் நடந்தான். எல்லா இருக்கைக்கு அடியில் தேட முயற்சித்தான். அனைவரும் அவனை ஓரம் தள்ளினர். யார் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. பைத்தியம் பிடித்தது போல் கதவோரம் அமர்ந்து கொண்டான். கண்களில் கண்ணீர் அவனை மீறி வந்து கொண்டிருந்தது. எத்தனை ஸ்டேஷன் கடந்தது என்று தெரியவில்லை. திடீரென்று ஒரு ஸ்டேஷனில் இறங்கினான். கால் போன போக்கில் நடந்தான். தனக்குளேயே பேசிக்கொண்டான். தலையில் அடித்துக்கொண்டான். கையை கையை உதறினான். மறுபடியும் பையில் தேடினான், தரையில் தேடினான். குழம்பி போய் ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்தான். முட்டை கட்டிக்கொண்டு, குழந்தை போல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

" டேய் யாரு நீ? இங்கெல்லாம் உக்காரக்கூடாது. கிளம்பு." அந்த வீட்டின் காவல் மிரட்டியது. பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

"சொன்னா கேக்கமாட்ட? கையில் கம்புடன் அருகில் வந்த காவல்காரனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சற்று தயங்கி பின் மறுபடியும்" என்னடா முறைக்கிற? போலீஸ் கூப்படட்டுமா?"

அடக்கி வைத்திருந்த கோவமும், வெறுப்பும் மேலேற,

" எதுக்குடா போலிஸ் கூப்பிடுவ. இங்க உக்காந்ததுனாலயா. இப்போ உள்ளேயே போறேன் என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ."

வேகமாக காவல்காரனை தள்ளிவிட்டு, கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் ஓடினான். காவல் காரன் சமாளித்து எழுந்துகொள்வதற்கு முன், வீட்டின் கதவை இடித்து தள்ளி விட்டு உள்ளே சென்றான். ஒரு வயதான பெண்மணி சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

"நீங்க பாக்கறீங்க இல்ல. நல்லா தானே இருக்கு. பொழுது போவுதுல்ல. அதுக்குத்தான் வாங்கணும்ன்னு நினைச்சேன். பாவம் அம்மாவும் ஆஷாவும்."

அதிர்ந்து போய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்த பெண்மணி. அதற்குள் காவல்காரன் மற்றும் சிலரை கூட்டிக்கொண்டு உள்ளே வர அனைவரும் சேர்ந்து ராம்சிங்கை இறுக்கி பிடித்தனர். அவன் களைத்து போய் இருந்தான். தப்ப முயற்சிக்கவே இல்லை. இருவர் அவனை அமுக்கி பிடித்து தரையில் அமரவைக்க , இருவர் அவன் கையையும் காலையும் கயிறால் காட்டினர். முதலாளியும் அப்போது உள்ளே வர, காவலன் எல்லாவற்றையும் கூறினான். அவர் மெதுவாக அந்த பெண்மணியின் அருகில் சென்று அமர்ந்தார்.

"பயந்துட்டீங்களா அம்மா? உள்ள போறீங்களா?" என்று கேட்டார்.

"அவன் என்ன ஒண்ணுமே பண்ணல. ஏதேதோ ஒளறினான். அப்பறம் அழ ஆரம்பிச்சுட்டான். பாவம். விட்டுடு"

முதலாளி மற்றவர்களை பார்த்து,

" எதுக்கு இப்படி கையையும் காலையும் கட்டி போட்றுகீங்க. இதென்ன போலீஸ் ஸ்டேஷனா? முதல்ல அவுத்து விடுங்க" என்றார்.

கட்டை அவிழ்த்து விட்ட பிறகும் ராம்சிங் அசையாமல் அமர்ந்திருந்தான்.

முதலாளி அவனிடம் வந்து,

"நீ யாரு? உனக்கு என்ன வேணும்?"

ஒன்றும் பதில் சொல்லவில்லை.

"அய்யா போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் விட்டுடலாமா?"

" எதுக்கு? அவன் தான் ஒன்னும் செய்யலையே!"

" இங்கபாரு, நான் உனக்கு உதவி பண்ணனும்னு நினைக்கிறேன். நீ ஏதாவது சொன்னா தான் என்னால செய்யமுடியும்"

அவரை நிமிர்ந்து பார்த்தான் ராம்சிங்.

"அய்யா, ஏதோ மனசு குழம்பி போய் உள்ள வந்துட்டேன்யா. நான் வேலை பாக்கற வீட்டுல கூட அனாவசியமா உள்ள போக மாட்டேன்யா. என் அம்மாவும் மனைவியும் வீட்டுல தனியா இருப்பாங்க. நான் எங்க இருக்கேன்னு கூட தெரியல. என் வீட்டுக்கு வழி சொன்னா மட்டும் போதும்"

அவர் ராம்சிங்கை பார்த்தார். இத்தனை வருட வக்கீல் தொழில், இவன் கண் பொய் சொல்லவில்லை என்று தோன்றியது.

"சரி. உன் விலாசம்?”.

சொன்னான்.

"ராமு, அவன் வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்துடு. வழியில் நீ எதுவும் பேசாதே." என்று தன் ட்ரைவரை பார்த்து சொன்னார்.

ராம்சிங் மெதுவாக எழுந்து அவரை பார்த்து கும்பிட்டான். பின் அந்த பெண்மணியை பார்த்து,

"மன்னிச்சுகோங்கம்மா" என்று தழுதழுக்க கூறிவிட்டு வெளியே சென்றான்.

செல்வராசு தன வீட்டிக்கு நெருங்கும்போது நன்றாக இருட்டி இருந்தது. ரயிலில் எடுத்த பர்ஸை, தன் சட்டைக்கு உள்ளே வைத்திருந்தான். எடுத்து பார்க்க பயமாக இருந்தது. வீட்டிற்கு சென்று பார்க்கலாமென்று நினைத்திருந்தான். வீடு நெருங்கும்போது அம்மா வெளியில் இருப்பது தெரிந்தது. "எத்தனை நேரமா காத்திருக்கோ" முனுமுனுத்துக்கொண்டே வேகமாக நடந்தான்.

" பிள்ளை வந்துருச்சி. வெளில வாங்க என்று வீட்டுக்குள் எட்டி பார்த்து குரல் கொடுத்துக்கொண்டே வேகமாக அவனை நோக்கி நடந்தாள்.

"ஏம்மா, நான் என்ன பட்டாளத்துல இருந்தா வரேன். ஏன் கத்தற?" மெதுவாக கூறினான். அதற்குள், அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் அனைவரும் வந்து விட்டனர்.

அவன் தந்தை அவன் முகத்தை தடவி, "பிள்ள பாவம் வதங்கி போச்சு என்றார்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் தைரியம் சொல்ல , செல்வராசு அமைதியாக நின்றான்.

"சரி, இன்னிக்கு அவன் படுத்து தூங்கட்டும் நாள பேசலாம் என்று சொல்லி கூட்டத்தை களைத்து உள்ளேகூட்டிச் சென்றாள் பொன்னுதாயி.

"கண்ணு, போய் குளிச்சிட்டு வா. சாப்பிடு. நல்ல தூங்கு. நாளைக்கு நல்ல விடியும்."

விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்தான்..

" செல்வராசு, ஒரு நிமிசம். "

"என்ன அப்பா?"

" தம்பி, உன்கூட உள்ள இருந்தவங்க யாரு என்னன்னு எனக்கு தெரியாது, நல்லவங்களாகவே இருக்கலாம். உன்ன மாதிரி தப்பே செய்யாம மாட்டியிருக்கலாம். ஆனா யாரு என்ன அறிவுரை சொல்லி இருந்தாலும் , உன் மனசாட்சி சொல்றது தான் முக்கியம். கோவத்துல எந்த தப்பான வழியும் யோசிக்காதே. நம்ம மேஸ்திரி உன்ன திருப்பி வேலைக்கு கூட்டிட்டு வர சொன்னார். எல்லாம் உன் மேல இருக்கற நம்பிக்கை தான். நம்ம சேரிலேயே யாரும் உன்ன தப்பா பேசல. எல்லாருக்கும் உன்ன பத்தி தெரியும். நம்ம கூட நல்ல மனுசங்க இருக்காங்க ராசா. நடந்தது ரொம்ப தப்பு தான். ஆனா நீ அத காரணமா வைச்சு வேற தப்புக்கு போயிடாதே கண்ணு. அது மாய சுழலு. சுத்தி சுத்தி உள்ளேயே தான் இருப்ப. நீ ஜெயிலுக்கு போவரத்துக்கு முன்னாடி இருந்த இல்ல, அது தான் நிசம். அது தான் நீ. தெளிவா இருந்துகோய்யா. என்ன ஆனாலும் தப்பா போகக்கூடாது."

"சரிப்பா" குளியல் அறைக்கு சென்றான். சட்டையை கழட்டும் போது பர்ஸ் கீழே விழுந்தது. எடுத்து பிரித்து பார்த்தான். ஐயாயிரம் ரூபாயும், கொஞ்சம் சில்லரையும் இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் இரெண்டு புகைப்படம் இருந்தது. பர்ஸை துழாவினான். ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் இருந்த விலாசத்தை பார்த்துக்கொண்டே இருந்தான்.

ராம்சிங் வீட்டுக்குள் வரும்போது சரளா வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

"ஏன் அண்ணே லேட்டு? அம்மாவும் அக்காவும் தவிச்சு போய்ட்டாங்க. நான் கிளம்பறேன்."

உள்ளே வந்தான். ஆஷா வண்டியை தள்ளிக்கொண்டே அவனிடம் வந்து, "ரொம்ப லேட்டா ஆயிடுச்சா கவலையா போச்சு"

அவன் பதில் சொல்லாமல் சேரில் அமர்ந்தான்

இந்தாங்க. உங்க பிரெண்டு ஒருத்தர் வந்து உங்க பர்ஸை குடுத்துட்டு, நீங்க இன்னும் அரைமணியில வந்துடுவீங்கன்னு சொல்லிட்டு போனாரு. அதுக்கப்புறம் தான் நிம்மதி ஆச்சு. அமாம், அவர் கிட்ட ஏன் பர்ஸை குடுத்தீங்க? ஐயாயிரம் ரூபாயோட வேற. அவர் யாரு? எல்லாரையும் இப்படியா நம்புறது"

நம்ப முடியாமல் அந்த பர்ஸை பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சிங்.

தன் வீட்டு வாசலில் ஒரு கால் மேல் ஒரு கால் போட்டு படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை கண் சிமிட்டாமல் எண்ணிக்கொண்டிருந்தான் செல்வராசு.