தொடர்கள்
பொது
புயலும், வாழ்வும்-தில்லைக்கரசிசம்பத்

20221109165417813.jpeg

வயலும், வாழ்வும் னு தானே சொல்வாங்க.. இது என்ன புயலும் வாழ்வும் என்று கேட்டால், புயலால் மக்கள் வாழ்வு பாதிக்கப்படுகிற சம்பந்தம் இருப்பதால் புயலும் வாழ்வும் என்று சொல்லலாம். மக்களுக்கு முக்கியமாக ஏழை அடித்தட்டு மக்கள், மற்றும் பயிர் விளைந்திருந்த வயல்களோடு ,தோப்புகளும் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் புயல் வந்தால் நாசம் தான்.

‌இதை சொன்னதற்கு "புயல் நாட்டுக்கு நல்லது" என்று "கறை நல்லது" என்ற அபத்தமான விளம்பரத்தை போல் ஒரு நண்பர் தொண்டை தண்ணீர் வற்ற வாதாடி கொண்டிருந்தார். அதெல்லாம் நல்ல மழை பெய்யும் அளவுக்கு புயல் வந்தால் போதும். நாசம் செய்யும் புயல் வந்தால் கஷ்டம். இதை எப்படி புரியவைப்பேன் என்று வசூல் ராஜா கமல் போல நொந்தது தான் மிச்சம். 2018 ல் கஜா புயல் தஞ்சை நாகை டெல்டா பகுதிகளை நாசம் செய்தது. 100, 50 வருடங்கள் வயதுள்ள மரங்கள் அடங்கிய தோப்புகள் அழிந்தே போயின. . தங்களின் வாழ்வாதாரமே அழிந்து போனதில் விவசாயிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அழுதனர். அவர்களால் இன்னும் மீளமுடியவில்லை என்பது ஒரு உதாரணம். உடனே "கஜா புயல் வீசிய இந்நன்னாளில் " என ஆரம்பித்து விடாதீர்கள்.

அதை விடுங்கள்.

சென்னைக்கும் புயலுக்கும் நல்ல ராசி உண்டு. .1972,1984,1985,1996, 2005, 2010, 2012 என்று கொஞ்சம் இடைவெளி விட்டு தான் அடிக்கும். மற்ற சமயங்களில் சென்னையை புயல் தாக்கும் என்பார்கள். ஆனால் புயல் சென்னையை விட்டு விட்டு ஆந்திரா கடல் பகுதியில் தாண்டவம் ஆடிக்கொண்டே, அப்படியே நைசாக ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டு ஒரிஸ்ஸா கரையோரம் சென்று ஒரு காட்டு காட்டிவிட்டு மலையேறிவிடும். ஆனால் இப்போதெல்லாம் இந்த ஜெண்டில்மேன் அக்ரிமண்ட்டை மீறி சமீபகாலங்களில் புயல் உண்மையிலேயே சென்னைக்குள் புகுந்து அநியாயம் செய்து விட்டு போகிறது . சென்னையன்ஸ் மேல் காண்டு உடைய மற்ற மாவட்ட நெட்டிசன்கள் தான் சூனியம் வைத்திருக்க கூடும் என்ற சந்தேகம் எனக்குண்டு.

சென்னையில்

20221109165509781.jpg

2015, மற்றும் 2017 ல் வர்தா புயலும் ஓகி புயலும் ஆடிய ஆட்டத்தில் சென்னையின் 2000 கிட்ஸ் முதன்முறையாக புயல் தாக்கினால் எப்படி கொடூரமாக இருக்கும் என்பதை கண்ணால் கண்டு, பாடம் கற்றுக் கொண்டார்கள். அடுக்கு மாடிக்குடியிருப்புகளின் முதல் 3 தளங்களும் நீரில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவங்களும் நிகழ்ந்தன.

உயிர் பலிகளும் நிகழ, 16 நாட்களுக்கு மின்சாரம் இல்லாமல் குடிக்க நீர், உணவு இல்லாமல் வீடுகளின் மொட்டைமாடிகளில் வானிலிருந்து விழும் உணவுபொட்டலங்களை பிடிக்க துண்டை விரித்து நின்றார்கள் சென்னையன்ஸ். எப்போதும் போல், சொந்த குடும்பத்தின் மேல் பாசமில்லாத ஊதாரி அண்ணனுக்கு செய்யும் கடமையாக மற்ற மாவட்டக்காரர்கள் சாப்பாடு குடிநீர் அத்தியாவசிய மருந்து பொருட்கள் போன்றவற்றை மூட்டைக் கட்டிக்கொண்டு சென்னைக்கு படையெடுத்து உதவ, கை நீட்டி ஆவலுடன் வாங்கி கொண்டது சென்னை. புயல் முடிந்தவுடன் எப்போதும் போல் தெனாவெட்டு மோடுக்கு திரும்பிய சென்னையன்ஸ் "அண்ணனுக்கு செய்யறது உன் கடமைடா..!" என்று மற்ற மாவட்டக்காரர்களின் பின்மண்டையில் செல்லமாக தட்டி சென்றார்கள். அதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் புயல் தாக்கிய போது, நம் சென்னையன்ஸ் எப்போதும் போலவே கண்டுக்கொள்ளாமல் கடமையே கண்ணாயிரமாக தங்கள் வேலைகளை மட்டும் பார்த்து கொண்டிருந்தார்கள். ‌

தென் தமிழகம் டெல்டா ராமேஸ்வரம் பகுதிகளில் புயல் மிகவும் சகஜம். 1964 டிசம்பர் 15 ல் "ஏதோ ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவானதாக சொல்றாங்கப்பா..!" என்று சகஜமாக ராமேஸ்வரத்தில் பேசிக்கொண்டார்கள். இதுவரை இந்தியாவில் வீசிய புயல்களில் இவ்வளவு பலமாக கரையை தாக்கவில்லை என்று சொல்வது போல அந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி 250 கிமீ வேகத்தில் சென்று இலங்கையில் 1000 பேரை கொன்றுவிட்டு தனுஷ்கோடியில் ருத்ர தாண்டவம் ஆடி 3000 மக்களுக்கு மேல் பலி கொண்டது அந்த பேய் புயல். தனுஷ்கோடியில் கடல் 20 அடி உயரத்தில் உள் புகுந்து ஊரையே அழித்தது. இதுதான் கடைசி பயணம் என்று அறியாமல் இரவு 11.55 மணிக்கு பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டு சென்ற ரயிலை, சுமார் 200 பயணிகளுடன் சேர்த்து கடல் விழுங்கி ஜலசமாதி செய்தது அன்று இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நடந்து முடிந்த துயரத்தின் பேரழிவு சின்னமாக இன்று தனுஷ்கோடி சிதலங்களுடன் நின்று கொண்டு இருக்கிறது. நாகப்பட்டினத்தில் வருடம் வருடம் புயல் வரவில்லை என்றால் அது நாகப்பட்டினமே இல்லையோ என்ற சந்தேகம் நாகை மக்களுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு நாகைக்கும் புயலுக்கும் ஆதியிலிருந்து நல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. நான் சொல்லும் "ஆதி" ராஜராஜ சோழர்காலத்தில் நாகை கடற்கரையோரம் உள்ள சூடாமணி விகாரம் புயலால் கடல் கோண்டு விட சோழமன்னன் திரும்பவும் கட்டி கொடுத்தாரே.. அந்த "ஆதி"யை சொல்கிறேன். 1952 நவம்பரிலும், 1977 நவம்பரிலும் வீசிய கடும் சூறாவளி தஞ்சையிலிருந்து நாகை வரை பேரழிவு உண்டு பண்ணியது குறிப்பிடத்தக்கது.

20221109165536378.jpg

தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் எனும் புயல் தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயரை சூட்டியது ஐக்கிய அரபு அமீரகம். "அப்துல்லா அல் மாண்டஸ்" என்ற துபாய்காரர் வானிலையியலில் முனைவர் பட்டம் பெற்றவராம். அவரை கௌரவப் படுத்த அவர் பெயரை இந்த புயலுக்கு வைத்திருக்கிறார்கள். அது என்ன எப்ப பார்த்தாலும் மற்ற நாடுகளே பேர் வைக்கிறார்கள்.? ஒரு தடவையாவது நல்ல பழந்தமிழ் பேர் வைக்க வேண்டும் என்பது தமிழர்களின் ஆசை..

சான்ஸ் கிடைத்தால்

இளந்திரையன், மாமல்லன் போன்ற பெயர்களை வைக்கலாம். இல்லை முனுசாமி, ராமசுப்பு னு கூட வைக்கலாம்.தப்பில்லை. அடிக்க போவது நாசக்கார புயல் என்று தெரிந்தால் ஆத்திரம் தீர "கபோதி" என்று கூட பேர் வைத்து நம் மனதை சிறிது ஆற்றிக்கொள்ளலாம்.

பேரா முக்கியம். நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேலே விழுந்து பிடுங்காம சென்றால் சரி என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

மழை என வரும் போது நம் ஊர் நெட்டிசன்கள் வீட்டில் பத்திரமாக இருந்து கொண்டு மனைவியை பஜ்ஜி போடு பக்கோடா செய் என சொல்லி அவற்றை ஏலக்காய் டீயுடன் ஒரு கை பார்ப்பது வழக்கம். அதில் தமிழர்கள் பலர் கூடுதலாக இளையராஜா பாடல்களையும் சேர்த்து பால்கனி, ஜன்னல்கள் வழியே மழையை ஆழ்ந்து ரசித்து கொண்டு இருப்பார்கள். இந்த வரம் எல்லாம் இருக்கப்பட்ட ராசாக்களுக்கு தான். குடிசைகளில், நடைபாதைகளில் வசிப்பவர்கள் கடும் மழை வரும் போது பெரும் அவஸ்தைக்கு உள்ளாவார்கள்.

ந.பிச்சமூர்த்தி " ஈஸ்வரன் லீலை" என்ற தனது சிறுகதை ஒன்றில் புயல்மழையினால் இல்லாதப்பட்டவர்கள் படும் துயரத்தை நறுக்கு தெரித்தார் போல் எழுதியிருப்பார்.

அந்த கதையில் வரும் ஊரில் இரவெல்லாம் கடும் மழையுடன் பெரும் புயல் கோரத் தாண்டவம் ஆடி சென்றிருக்கும். மறுநாள் காலை பெரும் ஞானமுள்ள இரு வித்வான்கள் தங்கள் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு புயலை பற்றி சிலாகித்து பேசிக்கொள்வார்கள். அதில் ஒரு வித்வான் கூறுவார்

"நேற்று புயலை ஈஸ்வர லீலை, பராசக்தி தாண்டவம் என்று சொல்ல வேண்டும் அந்த அனந்த சக்தியின் லீலையை பார்க்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..! எவ்வளவு கண்கள் வேண்டும்" என்று சொல்லி உள்ளம் பூரிப்பார். இதை கேட்டு இன்னொரு பரம வித்வான்

"இதைத்தான் நமது வேதத்தில் "நமஸ்தே வாயோ த்வமேவப் பிரத்யக்ஷம் பிரம்மாஸி" என்று அழகாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்" என்று கூறிவிட்டு பரவசத்தில் கண்களை மூடிக்கொள்வார். அந்த சமயத்தில் தெருவில், பல நாள் பட்டினியால் இளைத்த உடம்புடன், ஒரு எலுமிச்சை பழம் வைக்கும் அளவுக்கு குழி விழுந்த கண்களுடன், எலும்பு கூடு போன்ற தோற்றத்தில் வருகிற ஒரு மனிதன் , ஈனஸ்வரத்தில் "சாமியாம் சாமி.. கம்மனாட்டி காத்து.. அதுக்கு பைத்தியம் பிடிச்சுட்டாப்பலே இருக்குது..!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்து செல்வான். புயலால் இரவு முழுவதும் அவதிப்பட்டது பத்தாமல், இரவு அவன் ஒதுங்கியிருந்த பாழடைந்த வீட்டுச் சுவர் வேறு உடைந்து அவன் காலில் விழுந்து பலத்த ரத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கும். "வித்வான்கள் வருணித்த ஈஸ்வர லீலையைப் பைத்தியமாக்கி, பிரும்மத்தை கம்மனாட்டி ஆக்கிவிட்டான் அல்லவா அந்த ஏழை" என்று கதையை முடித்திருப்பார் பிச்சமூர்த்தி.

நாட்டில் என்ன கஷ்டம் நடந்தாலும் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தாம். மக்களைப் பொறுத்தவரை அதுவும் இல்லாதப்பட்ட ஏழைகளை பொறுத்தவரை, அனைத்தையும் அழிக்கின்ற எந்த கடும் புயலுமே கம்னாட்டி புயல் தான். இயற்கை மக்களை பற்றியெல்லாம் கவலைப்படாது. நாமெல்லாம் அதற்கு முன் தூசி போன்றவர்கள். நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடிக்கிற புயல் அடிக்கத்தான் போகிறது. பெய்கிற பேய்மழை பெய்யத் தான் போகிறது. எங்கும் பரந்து பிரமாண்டமாக விரிந்திருக்கும் இந்த இயற்கையின் கருணை அளிக்கும் பிச்சையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, பதிலுக்கு இயற்கையின் சமன்பாட்டை அழிக்காமல் மனிதன் வாழக்கற்றுக்கொண்டால் வருங்காலத்திலும் இயற்கையின் கருணை நிலைத்திருக்கும் . இல்லையென்றால் மனிதனின் கதி அதோ கதி தான்.