தொடர்கள்
கவிதை
மகளதிகாரம் - 13 - கவிஞர் தனபாண்டியன்

20220405200233627.jpg

# மகளதிகாரம் - 13 #

தின்பண்டங்கள் எவை வாங்கினாலும்
ஆளுக்கு ஒன்று என்றே
நிர்ணயிக்கப்படுகின்றன
அத்தனை வீடுகளிலும்

நடுநிலையாய்
வெளிப்படையாய்
ஆளுக்கு ஒன்றென
பகிர்ந்தளிக்கப்படுகின்றன

அப்பாக்களும் மகள்களும்
பகிரும் போது மட்டும்
ரகசியச் சைகைகளும்
உடன் வர

அப்பாவிற்கும் மகளுக்கும்
பரஸ்பரம்
மறையுறு பங்குகள் உண்டென சுட்டும்
அக்குறியீடுகளைக் கண்டும் காணாததுபோல
பாசாங்கு செய்து
உள்ளுக்குள் நெகிழ்கிறாள்
முன்னொரு சமயத்தில்
மகளாய் இருந்த
அம்மா