துலிப் மலர் தோட்டம் (Tulip Garden)
எனக்கு வெகுநாட்களாக துலிப் மலர் தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்றிருந்த ஆசை, அண்மையில் நிறைவேறியது. சினிமா பாடல்களில் மட்டுமே பார்த்திருந்த துலிப் தோட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அந்த கனவு நனவாகிய தருணத்தையும், துலிப் மலர்களைப் பற்றிய விவரங்களையும் உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த மே மாதம் என் மகள் அந்த வார இறுதியில் அமெரிக்காவில் கனெடிகட் (Connecticut) மாநிலத்திலுள்ள துலிப் தோட்டத்திற்கு போவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கி வந்தாள். அந்த நிமிடத்திலிருந்து நான், துலிப் மலர்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன் துலிப் மலர்கள் மணி (Bell) வடிவத்தில் இருக்கும், துலிப் செடி மெல்லிய நீளமான தண்டினை உடையது. தண்டின் அடிப்பகுதியில், நிலப்பரப்புக்கு மேலே இரண்டு அல்லது மூன்று தடிமனான இலைகள் கொத்தாகக் காணப்படும். தண்டின் நுனியில் துலிப் மலர் இருக்கும், துலிப் மலர்கள் அதனுடைய பிரகாசமான வண்ணங்களுக்காகவும், அழகான வடிவத்துக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இது அல்லி மலர் (Lilly) மற்றும் வெங்காய குடும்பத்தினைச் சார்ந்தது. துலிப் பூவின் ஆங்கிலப் பெயரான “டூலிப்ஸ்” (Tulips) என்பது பாரசீக சொல்லாகும். இது “டர்பன்” (Turban) என்ற சொல்லில் இருந்து வந்தது. நல்ல மலர்ந்த துலிப் மலர், டர்பன் வடிவத்தைப் போல இருந்ததால், “டூலிப்ஸ்” என்ற பெயர் அதிலிருந்து வந்தது.
அந்த வார இறுதியும் வந்தது நாங்கள் மதிய வேளையில் அந்த தோட்டத்திற்கு அருகில் வாகனம் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். தோட்டத்திற்குப் போக சிறிது தூரம் நடக்க வேண்டும். அப்போது துலிப் மலர்களைப் பற்றி, நாங்கள் அறிந்த விவரங்களைப் பேசிக் கொண்டே சென்றோம்.
நெதர்லாந்து (Netherlands) தான் துலிப் மலர்களுக்கு மிகவும் பிரபலமான நாடு. அந்நியன் படத்தின் பாடல்காட்சியில் நெதர்லாந்தின் துலிப் தோட்டம் இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தின் துலிப் அடிநில தண்டு கிழங்கு (Tulips Bulbs) உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி நடந்து இந்திய ருபாயில் முன்னூறு கோடிக்கும் மேலாக வருமானம் கிடைக்கின்றது. துலிப் மலருக்கும் நெதர்லாந்துக்கும் இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருந்தாலும், துலிப் மலர்களின் பூர்வீகம் இங்கு கிடையாது. ஆரம்பத்தில் துலிப் மலர்கள் மத்திய ஆசிய நாடுகளில்தான் இருந்தது. முதலில் துருக்கிக்கு கொண்டு வரப்பட்டது, அங்கு பிரபலமானது. பிறகு அங்கிருந்துதான் நெதர்லாந்துக்கு கி.பி 1560 களில் கொண்டு வரப்பட்டது.
பதினறாம் நூற்றாண்டில் துலிப் மலர்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. சராசரியாக வேலை செய்பவர்களின் வருட வருமானத்தை விட பத்து மடங்கு அதிகமாக இருந்ததாம். துலிப் தண்டு கிழங்குகளின் (Tulips Bulbs) விலை நாளுக்குநாள் உயர்ந்துக் கொண்டே வந்தது. இதன் மதிப்பு உயர ஆரம்பித்தவுடன், மக்கள் அவரவர்களின் நிலங்கள் மற்றும் கையிருப்புப் பணத்தை கொண்டு நிறைய தண்டுகிழங்குகளை வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் இதன் விலை இறங்கி வியாபாரம் சரிய ஆரம்பித்தது. 17ம் நூற்றாண்டின் இந்த நிகழ்வை இந்த வியாபாரச் சரிவை “டூலிப் மேனியா” (Tulip Mania) என்று குறிப்பிடுகிறார்கள்.
நாங்கள் சிறிது தூரம் நடந்து, தோட்டத்தை வந்தடைந்தோம். அங்கு எதிர்பார்த்திற்கும் மேலாக நல்ல குளிராக இருந்தது. குளிரில் முகமெல்லாம் சிவக்க, கைகள் விறைக்க, தோட்டத்தின் நுழைவு வாயிலில் நுழைவு சீட்டை காண்பித்து விட்டு உள்ளே வந்தோம். ஆஹா, என்ன அழகு! வானவில்லை படுக்க வைத்தது போல் அப்படி ஒரு அழகு, மலர்களே மலர்களே இது என்ன கனவா? நான் நம் நாட்டில் ரோஜா தோட்டத்தை தான் பார்த்திருக்கிறேன். துலிப் மலர் தோட்டத்தை என் வாழ்நாளில் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். காற்று வீசியதில் துலிப் மலர்கள் ஒன்றோடு ஒன்று சாய்ந்து கொண்டு அழகாக ஆடிக்கொண்டிருந்தன. கின்டர் கார்டனில் (Kindergarten) படிக்கும் குழந்தைகள் வரிசையாக நின்று கொண்டு உடலை அசைத்து அசைத்து ஆனந்தமாக நடனமாடி வரவேற்பது போல் இருந்தது. எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. சுற்றிலும் பரந்து விரிந்த பசுமையான நிலப்பரப்புக்கு நடுவில் இருந்த இந்த தோட்டம் ரம்மியமாக தென்பட்டது. சிறிய தோட்டம்தான், ஆனால் பிரகாசமான வண்ண வண்ண கப் வடிவத்தில் துலிப் மலர்கள் நெருக்கமாக நேர்த்தியாக வளர்ந்து, காண்பவர்களின் கண்களை கவரும் விதமாக இருந்தது.
துலிப் மலர்கள் வரிசை வரிசையாக இருந்தது, எனக்கு வயல்வெளிகளில் உள்ள வரப்பை நினைவுப்படுத்தியது. ஒவ்வொரு வரிசையின் இரண்டு பக்கமும் இடைவெளி இருக்கும். மக்கள் நடந்து சென்று இரண்டு பக்கமும் பார்வையிடுவார்கள். துலிப் மலர்கள் சிவப்பு, வெண்மை, மஞ்சள், ரோஸ் (Pink), ஊதா மற்றும் இரண்டு நிற கலவைகளிலும் காணப்பட்டன. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு எண்ணத்தை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளது. துலிப் மலரைப் போல மிக வசீகரமான மலரை நாம் பார்க்கவே முடியாது. இவை பொதுவாக அன்பு, மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான எண்ணத்தை குறிக்கின்றது என்றாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. இவற்றில் கருப்பு துலிப் மலர் மிகவும் அரிதான வகை. இது சக்தி மற்றும் வலிமையை குறிக்கின்றது. ஊதா நிறம் அரச குடும்பத்தினரின் (Royalty) நிறம் இது மிகவும் அரிதான வண்ணம் மிகவும் பழைய காலத்தில் எலிசபெத் ராணியின் தோட்டத்தில் மட்டுமே காணப்பட்டது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில், அரச குடும்பத்தினர் தவிர இந்த ஊதா நிறத்தை மற்றவர் யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்றிருந்தது. ஊதா நிறம் மறுபிறப்பையும் குறிக்கின்றது. அதனால் இது வசந்த காலத்திற்கு ஏற்ற வண்ணம். இன்று மூவாயிரத்து ஐநூறு வகைகளுக்கும் மேலாக துலிப் மலர்கள் சந்தையில் உள்ளன.
துலிப் மலர் தோட்டத்தில் மக்கள் ஆங்காங்கு புகைப்படம் எடுத்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். நிறைய மக்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் அதிகமாக தென்பட்டார்கள். அவர்கள் குதூகலமாக மலர்களின் அருகில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள். பெற்றோர்கள் அவர்களை மலர்களுடன் பலவித கோணங்களில் உற்சாகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். தண்டுகளின் நுனியில் மொக்குகள் சூம்பியிருந்தன, அவை பலவிதமான நிலைகளில் இருந்தன. சிறிய மொக்குகள், பெரிய மொக்குகள், எப்போது பிளவுபடுமோ எனக் காத்துக் கொண்டிருக்கும் மொக்குகள் இருந்தன. இதனைப் பார்க்கும் போது எனக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் நினைவுக்கு வந்தாள். கொஞ்சமாக மலர்ந்த மொக்குகள், நன்றாக மலர்நத பூக்கள் என பல நிலைகளில் துலிப் மலர்களைப் பார்த்தோம். ஒவ்வொரு வரிசையும் ஒவ்வொரு வண்ணத்திலிருந்தன. சில வரிசைகளில் மாறுபட்ட இரண்டு வண்ண மலர்கள் அடுத்தடுத்து நடப்பட்டிருந்தன, மற்றும் சில இடங்களில் மொத்தமாக அனைத்து வண்ண மலர்களும் மாறி மாறி நடப்பட்டிருந்தன. அவை மிகவும் அழகாக காணப்பட்டன.
மற்ற சில பூக்களை போலவே துலிப் மலர்களையும் நாம் சாப்பிடலாம். உண்மையில் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) இரண்டாம் உலகப் போரின் போது, போதுமான உணவு கிடைக்காத மக்கள், துலிப் மலர்களையும் அதன் தண்டு கிழங்குகளையும் தான் உணவாக சாப்பிட்டார்கள் மது தயாரிப்பதிலும் வெங்காயத்திற்குப் பதிலாக இதனை உபயோகப்படுத்துகிறார்கள்.
ஒரு நுழைவு சீட்டுக்கு பத்து துலிப் மலர்களை எடுத்து வரலாம். நான் வேறுபட்ட வண்ணங்களில் பத்து துலிப் மலர்களை, அதன் தண்டுடன் நிலத்திலிருந்து பிடுங்கி எடுத்தேன், சுலபலமாக எடுக்க வந்தது. தண்டின் அடியில் வெங்காயம் போன்ற கிழங்கு நிலத்துக்கு கீழே இருந்ததது. இதனை எடுத்து வர அழகான சாய்வான நாற்காலி போன்றிருந்த மூங்கிலால் ஆன கூடையும், ஆரஞ்சு நிற பிளாஸ்டிக்கால் ஆன கூடையும் நுழைவு வாயிலின் அருகே வைத்திருந்தார்கள். மலர்களை அந்த கூடைகளில் வைத்து நாங்களும் சில புகைப்படங்களை இந்த அழகான மலர்களுடன் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். குளிர் அதிகமாக இருந்ததால் எங்களால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை.
துலிப் மலர்கள் ஸ்பிரிங் (Spring) என்னும் வசந்த காலத்தில் தான் பூக்கும். ஒன்று அல்லது இரண்டு வாரம் தான் பூத்திருக்கும் இதனால் அது வாடுவதற்குள் இங்கும், உலகின் மற்ற இடங்களிலும் துலிப் திருவிழா (Tulips Festival) என்று வைத்து, மக்களை தோட்டத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரமான ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். இங்கும் "துலிப் திருவிழா" வசந்த காலத்தில் கொண்டாடப்படுகின்றது. நெதர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் "தேசிய துலிப் தினம்" ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.
துலிப் மலர் பலவித கலைகளின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கின்றது. இஸ்லாமிய கலைகளில் சுல்தான் காலத்திலிருந்து துலிப் மலர் முக்கிய இடம் வகிக்கிறது. ஜெர்மனி ஓவியர் தன் ஓவியப் புத்தகத்தில், ஓவியங்கள் மூலமாக துலிப் மலர்களின் வகைகளை அனைவரும் அறியும்படி செய்திருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் கலை மற்றும் கைவினைகளில், பிரதானமாக துலிப் மலர் இருந்திருக்கிறது. டிஃபேனி டூலிப்ஸ் விளக்கு (Tiffany Tulips Lamp) பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. துலிப் மலர் ஈரான் மற்றும் துருக்கி நாடுகளின் தேசிய மலராக விளங்குகின்றது. சிவப்பு துலிப் மலர் ஆப்கானிஸ்தானின் தேசிய மலராக உள்ளது.
இத்தனை வரலாற்று பெருமை, முக்கியத்துவம் மற்றும் வசீகரத்தை தனக்குள்ளே வைத்துக் கொண்டு, ஒயிலாக காட்சி கொடுக்கும் துலிப் மலர்களை பார்த்து ரசித்த சந்தோஷத்துடன் வீடு திரும்பினோம்.
Leave a comment
Upload