ஞானபீட நாயகன் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு (1922-2022)
பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - சனவரி 31, 1988) என்கிற அகிலன், பிறந்தது 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூர். இக்கிராமத்திலேயே அகிலன் தன்னுடைய இளமைப்பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் வெளிவந்தன.
அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது 1963-இல் கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. உலகின் மற்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேங்கையின் மைந்தனாக இருந்த சிறப்புமிக்க இராஜேந்திர சோழனின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றி தனது பாணியில் சிறப்பாக அகிலன் இந்நாவலில் வழங்கியுள்ளார் . அவரது காலம் கலை, இலக்கியம் மற்றும் நிர்வாகத்தில் தமிழர்கள் புகழின் உச்சத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தோனேசியா, இலங்கை, கடாரம் எனப்படும் மலேசியா, இந்தியாவின் தெற்கு, கிழக்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியனவற்றை இவர் வெற்றி கொண்டார். இந்த நாவலானது கடாரத்தின் மீது பெற்ற வெற்றியையும், இந்தியாவின் வடக்குப் பகுதியை வெற்றி கொண்டதற்காக புதிய நகரமான கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கியதையும் பிரதிபலிக்கிறது. புதிதாகக் கட்டப்பட்ட கோயிலும் நகரமும் போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பல கட்டடக்கலை வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது.
நாடுகளை வென்றதுடன் அழகிய பெண்களான அருள்மொழி மற்றும் ரோகினி ஆகியோரின் இதயங்களையும் இப்புதினத்தின் நாயகன்இளங்கோ வேல் கைப்பற்றினார். அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் அகிலனின் எளிய சக்திவாய்ந்த வார்த்தைகளால் சித்திரிக்கப்பட்டது. இராசேந்திர சோழனின் மூத்த ஆலோசகராக வந்தியத்தேவன் நாவலில் தோன்றி போர் மற்றும் நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்குகிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகவும் வேங்கையின் மைந்தன் நாவல் பார்க்கப்படுகிறது. கல்கியின் பணியை செவ்வனே தொடர்ந்தார்.சோழர் காலத்தின்போது நடந்த வரலாற்று உண்மைகளை நுட்பமாக விவரிப்பதாலும் , அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்தியிருந்ததாலும் இந்த நாவல் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இவரின் பாவை விளக்கு, கயல் விழி(மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ) நாவல்கள் திரைப்படமாகவும் வெளிவந்தன.
சரளமான ,யதார்த்தமான எழுத்து நடை அவரை மிகப்பெரும்பாலோர் ரசிக்கும் , வாசிக்கும் எழுத்தாளராக கொண்டாட வைத்தது.
அவரின் நூற்றாண்டு இது. அவரின் எழுத்துக்களை படிக்க இந்த வருடம் முயற்சி செய்வோம்.
Leave a comment
Upload