டில்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மெல்போர்னுக்கு கிளம்பியது, ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 கிரிக்கெட் உலககோப்பை ஆரம்பிக்க இருந்தது, உலககோப்பையில் பங்குபெற இந்திய கிரிக்கெட் அணி விமானத்தில் புறப்பட்டிருந்தது.
பதினாறு அணி வீரர்கள்.
ஒரு பிரதான பயிற்சியாளர்
ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர்
ஒரு பீல்டிங் பயிற்சியாளர்
ஒரு விளையாட்டு இயன்முறை மருத்துவர்
ஒரு பெண் மருத்துவர்
விமானம் கிளம்பிய அரைமணி நேரத்தில் ஒரு ஆறடி மனிதர் கிரிக்கெட் வீரர்கள் முன்எழுந்தார். அவருக்கு வயது 72இருக்கும். வெண்பனி நீள் தலைகேசம் அழகிய ஓஷோ தாடி. கிருஷ்ணக்கண்கள். ரோஸ் நிறஉதடுகள். நீளநீள விரல்கள்.
சானல் நம்பர் பைவ் சென்ட் அடித்திருந்தார். ஆரஞ்சுநிற ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்திருந்தார். இடது காதில் வைர கடுக்கண்.
“உற்சாக பானம் அருந்தும் உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரம். என் பெயர் ஜிக்னேஷ் பாபா. குஜராத்தின் வதோதராவை சேர்ந்தவன். நான் ஜோதிடம் மாந்திரீகம் எண்கணிதம் வாஸ்து நிபுணன். உலகத்தின் துர்தேவதைகள் அனைத்தும் எனக்கு ஊழியம் செய்யும் அடிமைகள்!”
அணிதலைவன் பாகித் ஷர்மா கேலியாக சிரித்தான்,
“என் சக்தி தெரியாததால் என்னை கேலி செய்கிறாய். என் சக்தி தெரிந்தால் என்காலடியில் விழுந்து கிடப்பாய். என்னுடைய மகத்துவத்தை இந்திய கிரிக்கெட் போர்டு முழுமையாக உணர்ந்திருக்கிறது. அதனால்தான் என்னை இந்திய உலக கோப்பை அணிக்கு ஜோதிடமாந்திரீக ஆலோசகராக நியமித்துள்ளது. எனக்கான சம்பளம் இருபதுகோடி!”
“இருபது கோடி ரூபாய்க்கு நீங்கள் இந்திய அணிக்கு தரும் சேவைகள் என்னென்ன?”
“என்னை தொடர்ந்து கேலி செய்தால் அணி தலைவனாய் நீடிக்கமாட்டாய் ஏன் அணியிலிருந்து கூட விலக்கப்படுவாய்!”
‘‘நான் கேலி செய்யவில்லை சாதாரணமாக கேள்விகள் தான் கேட்டேன்!”
“எட்டாவது இருபது ஒவர் கிரிக்கெட் உலக கோப்பை 16.10.2022லிருந்து13.11.2022வரை நடக்க உள்ளது. மொத்தம் 45ஆட்டங்கள் 16அணிகள். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், பிரஸ்பேன், ஜிலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கும். இந்தியா , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ந்யூசிலாந்து போன்ற பலமான அணிகள் தவிர அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஜிம்பாவே, நேபால், யுஏஈ, சிங்கப்பூர் போன்ற சோப்ளாங்கி அணிகளும் விளையாடுகின்றன. போனதடவை ஆஸ்திரேலியா ஜெயித்தது. இந்த முறை நாம் ஜெயிக்கவேண்டும்!”
“உலக கோப்பையில் நாம் ஜெயிக்க ஆட்டகளத்தின் தரம், டாஸ், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட வீரரின் பார்ம் முக்கியம். இதில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”
ஜிக்னேஷ் பாபா சிரித்தார்.
“நல்லகேள்வி. நான் ஒரு நாளில் பீய்ச்சிக் கொள்ளும் சென்ட்டை இன்னொருநாள்பீய்ச்சிக் கொள்வதில்லை. ஜோ மெலான், பிளாக் ஓபியம், ஜியார்ஜியோ அர்மானி, ஜிப்ஸிவாட்டர் என மாறிமாறி உபயோகிப்பேன், ஒரு நாளுக்கு என்ன நறுமணம் பொருந்தவேண்டுமோ அந்தநறுமணத்தை பூசிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த நாள் முழுக்க தோல்விதான்!”
“ஓவ்!”
“டில்லியிலிருந்து மெல்போர்னுக்கு 10212கிமீ தூரம். பயணநேரம் 12மணிநேரம் 20நிமிடங்கள். மெல்போர்ன் இறங்கும் வரை உங்களுக்கு பல பாலபாடங்களை கற்றுத் தரப் போகிறேன், உலககோப்பையில் கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என உங்கள் பயிற்சியாளர் சொல்லித் தருவார். கிரிக்கெட்டின் ஆட்ட நுணுக்கங்களை தவிர மீறி அனைத்தையும் நான் சொல்லித்தருவேன். நான் ஆடப் போகும் பொம்மலாட்டத்தின் பொம்மைகள் நீங்கள்!”
“செத்தோம்!’ முணங்கினான் பாகித் சர்மா
“பிராத் காவ்லி ஒன் டவுன் ஆடும் அற்புத ஆட்டக்காரர். ஆனால் அவர் கடந்த மூன்று வருடங்களாக டெஸ்ட் மேட்ச்சிலோ ஐம்பது ஒவர் மேட்ச்சிலோ இருபது ஓவர் மேட்ச்சிலோ செஞ்சரி அடிக்கவில்லை. இதுவரை அவர் பெயரை BIRAT HAWLI என தான் போட்டு வந்தார். இன்றிலிருந்து அவர் பெயர் BIRAAT HAULY. இந்த ஸ்பெல்லிங் மாற்றத்தை மீடியாவுக்கு தெரிவித்து விடுங்கள்!’
பிராத் ஹாவ்லி ஒரு பர்கோலாக்ஸ் முகபாவம் காட்டினார்.
“உலக கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகளின் தலைவர்களின் பொம்மைகளை செய்து வூடுமந்திரம் மூலம் அவர்கள் உடல் முழுக்க ஊசியால் குத்தப் போகிறேன். அதனால் அவர்கள் நம் அணிடன் விளையாடும் போது மோசமான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் அல்லது உடல் சுகவீனபட்டு அவர்களது அணியிலிருந்து வெளியேறுவார்கள்!”
“இதெல்லம் தேவையா?” வாய்க்குள் புலம்பினான் பாசித் சர்மா.
“உலககோப்பை நடைபெறும் 29நாட்களும் நீங்கள் நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். நீங்கள் இரவில் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்- நீங்கள் மூன்று வேளையும் என்ன உணவு உண்ண வேண்டும்- என்ன திரவ உணவை பருகவேண்டும்- என்ன உள்ளாடை அணிய வேண்டும்- மனைவியுடனோ பெண் தோழியுடனோ செக்ஸ் வைத்துக்கொள்ளஅனுமதி உண்டா?- எதிர்அணி வீரர்கள் யாராருடன் கை குலுக்கலாம் யாராருடன் கை குலுக்கக் கூடாது?- மீடியாக்காரர்களிடம் என்ன பேச வேண்டும்- என்ன மொழியில் பேச வேண்டும்?-விளையாட செல்லும்போது என்ன சைஸ் பேட்டை என்ன சைஸ் கிளவுஸை, என்ன பிராண்டு ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும்?- எல்எல்எல்லாம் நான் சொல்வேன் என்னை கேட்காமல் நீங்கள் எச்சில் கூட துப்பக்கூடாது!”
“இதென்ன கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை?”
“நமது வீரர்கள் நன்கு ரன் அடிக்க சிறப்பாக பந்துவீச அட்டகாசமாக பீல்டிங் செய்ய அசுரமாய் விக்கெட் கீப்பிங் செய்ய ஒரு உபாயம் செய்துள்ளேன். இதோ மந்திரித்த கயிறும் சர்வரோகநிவாரண புனிதநீரும். இந்த மந்திரித்த கயிறை அரைஞான் கொடியாக கட்டிக்கொள்ளலாம். புஜத்தில் கட்டிக் கொள்ளலாம் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளலாம். பிரதான மேட்ச்சுக்கு செல்லும் முன் இந்த புனிதநீரை ஒரு மொடக்கு குடியுங்கள்!”
“பொகார்டி குடிக்கும் வாயால் இந்த புனிதநீரை குடிப்பேனா?” பாகித் சர்மா.
ஆளுக்கொரு பாட்டிலும் ஒரு மந்திரித்த கயிறும் நீட்டினார் ஜிக்னேஷ் பாபா.
“மந்திரித்த கயிறு கட்டியவுடன் ஒவ்வொருவரும் பத்து ஆள் பலம் உணர்வீர்கள்!”
“அப்படின்னா இந்திய அணி 110வீரர்களுக்கு சமம்!”
“ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு இந்தியவீரர் செஞ்சரி அடிப்பார் ஒரு இந்திய வீரர் அஞ்சு விக்கெட் எடுப்பார். செஞ்சுரி அடிக்க இநதிய வீரர் ஐம்பது பந்துகளே எடுத்துக் கொள்வார். பந்து வீச்சாளர் வீசும் 24பந்துகளில் பத்து ரன்களே விட்டுக் கொடுப்பார். அம்ரா வீசும் கடைசி 12பந்துகளில் பத்து பந்துகள் முன்னங்கால் விரல்களை ஒடிக்கும் டெட்லி யார்க்கர்ஸ். அம்ராவீசும் யார்க்கர்கள் வாசிம் அக்ரத்தை விட பேய்தனமாய் இருக்கும்”
“ஜிக்னேஷ் பாபா கிரிக்கெட் பத்தி கொஞ்சம் ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்திருக்காரு!” பாகித் சர்மா.
“நான் கொடுக்கும் மந்திரித்த கயிறுகளை பயிற்சியாளர்களும் பிஸியோதெரபிஸ்ட்களும் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டரும் கூட அணிந்து கொள்ள வேண்டும்!”
“சரி!” என்றார் கவி சாஸ்திரி.
“நான் ஒரு மந்திரம் தயாரித்துள்ளேன். அதனை பேட்டில் தடவிக் கொண்டு பேட் செய்தால் பந்தை எதிர்அணிகாரன் கேட்ச் பிடிக்க முடியாது. வழுக்கிக் கொண்டு ஓடி விடும். பீல்டிங் செய்யும் போது அதே மையை நம் வீரர்கள் கையில் தடவிகொண்டால் கேட்ச் வந்து ஒட்டிக் கொள்ளும்.கையில் மை தடவினதை எந்த கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது!”
“இவர் சொல்வதெல்லாம் படுபயங்கரமாய் இருக்கே!”
“பீல்டிங் செய்ய போகும் போதும் பேட்டிங் செய்யப் போகும் போதும் நான் சொல்லும் மந்திரத்தை மூணுதடவை உச்சரிக்கவேண்டும்!”
“என்ன மந்திரம்?”
“ஜிங்கிலிக்கு ஜிங்கிலி வோர்ல்டு கப்கா மங்கிலி!”
“ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு வரி மாதிரி இருக்குது!”
“விளையாட்டு மைதானத்துக்குள் நுழையும் நம் வீரர்கள் உலக கோப்பையை எம்ப்ராய்டரியா வரைஞ்சு கர்ச்சிப்பை பேன்ட் பாக்கட்டில் வைத்திருக்க வேண்டும்!”
“ஜிக்னேஷ் பாபா படத்தை எம்ப்ராய்டரியா வரைய சொல்லல… நல்லவேளை தப்பிச்சோம்…”
“வாருங்கள் எல்லாரும்… வெற்றிக்கு முன்னோட்டமாக ஒரு ஆனந்ததாண்டவம் ஆடுவோம்..” அனைவரும் நான்காவது லார்ஜில் இருந்ததால் ஜிக்னேஷுடன் சேர்ந்து ஒரு செம குத்தாட்டம் போட்டனர்.
மெல்போர்னில் விமானம் இறங்கியது. அனைவரும் ஹோட்டல் அறைகளுக்குள் பிரவேசித்தனர். ஒவ்வொரு அறையிலும் சாம்பிரணி புகையும் கற்பூரவாசனையும் தாழம்பூ சுகந்தமும் சேர்ந்தடித்தன. முதல் மூன்று பயிற்சி ஆட்டங்களில் இந்தியா பிரமாண்ட வெற்றி பெற்றது. ஜிக்னேஷ் பாபா கண்சிமிட்டி சிரித்தார். “இனி என் லீலைகள் படுபயங்கரமா இருக்கும்!”
இந்தியஅணி தொடர்ந்து ஆடியது. பல ஆட்டங்களில் படுதோல்வி. சில ஆட்டங்களில் மயிரிழையில் வெற்றி. மொத்தத்தில் இந்தியா தரவரிசையில் ஆறாவது இடம் பெற்று உலககோப்பையிலிருந்து வெளியேறியது.
ஜிக்னேஷ் பாபா துளியும் கவலையில்லாமல் களமாடிக் கொண்டிருந்தார்.
மீண்டும் விமானம் இந்தியா திரும்பும் போது இந்தியவீரர்கள் தாயத்துகளையும் கர்ச்சிப்களையும் புனிதநீர் பாட்டில்களையும் வூடு பொம்மைகளையும் ஜிக்னேஷ் முகத்தில் விசிறியடித்தனர்.
-இரண்டு மாதங்களுக்கு பின்…
‘உலககோப்பையில் பத்தாவது இடத்துக்கு தகுதியான இந்திய அணியை ஜிக்னேஷ் பாபா ஆறாவது இடத்துக்கு அரும்பாடுபட்டு கொண்டு வந்தார். மேலும் ஒரு வருடத்துக்கு ஜிக்னேஷ் பாபா இந்தியஅணி ஜோதிடாக நியமிக்கப்படுகிறார். சம்பளம் ஐம்பது கோடி’ என இந்திய கிரிக்கெட் போர்டு அறிவித்தது.
ஜிக்னேஷ் பாபா மர்மப்புன்னகை வெடித்தார். இதெல்லாம் கிரிக்கெட் அரசியலில் சர்வசாதாரணமப்பா…
Leave a comment
Upload