தொடர்கள்
தொடர்கள்
எடப்பாடியாருடன் ஸ்பெஷல் சந்திப்பில் மிஸ்டர் ரீல்...! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20210001220631790.jpeg

முதல்வர் வேட்பாளர் எடப்பாடியை, மிஸ்டர் ரீல் ஸ்ரீரங்கத்தில் சந்திக்கச் சென்றபோது, “இந்தா பெருமாள் பிரசாதம் பொங்கல்” என்று தந்தார் எடப்பாடியார். பக்தியுடன் அதை சாப்பிட்ட மிஸ்டர் ரீல், “நீங்கதான் முதல்வர் வேட்பாளர் என்று உங்க கட்சிக்காரங்க, கூட்டணி கட்சிகள் கூட ஒப்புக்கொள்ள மாட்டேங்குறாங்களாமே.. இப்படி ஸ்டாலின் நக்கல் பண்ணி இருப்பதை கவனிச்சீங்களா இல்லையா?” என்பதற்குள்... எடப்பாடி “பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்” என்றார் தன் வழக்கமான பல் தெரியும் சிரிப்போடு!

“எப்படி இதை இவ்வளவு கூலா எடுத்துக்கறீங்க..?”

“ஸ்டாலினுக்கு இப்ப குஷியோ குஷி. எல்லாம் ரஜினி ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார்ன்ற சந்தோஷத்தில் பேசுறாரு... அதுமட்டுமல்ல... எடப்பாடி எனக்கு ஈடா, ஜோடா என்று கேட்டிருக்கிறார்.. கண்டிப்பா இல்ல. நான் அரசியல்ல ஒவ்வொரு படியா ஏறி இந்த உயரத்துக்கு வந்திருக்கேன். அவரை மாதிரி அப்பா போட்ட பிச்சையால வரலை. அவங்க அப்பா, அவரை அரசியல்ல நுழைச்சு துணை முதல்வர் வரை குறுக்கு வழியில தூக்கி விட்டார். ஆனால் நான் அப்படியா? இடுப்பொடிய படிப்படியா உழைச்சு முன்னேறி இங்க வந்திருக்கேன் ”

“ இடுப்பொடிய உழைச்சுன்னு சொல்றது.. சசிகலாவிடம் உங்க இடுப்பொடிய தவழ்ந்து போய் காலில் விழுந்து கும்பிடு போட்டீங்களே.. அது இல்லை தானே” என்று கேட்க... எடப்பாடியார், அது காதில் விழாதது போல் “ஸ்டாலினுக்கு பாவம் பயம் வந்துடுச்சு, இந்த என் நாற்காலிய நம்பி, 380 கோடி முதலீடு பண்ணியிருக்காரே... நாற்காலி கிடைக்கலன்னா 380 கோடி போயிடுமில்ல...அதான் பயத்துல உளர்றாரு. ஆனால், அவர் ஆசையில மண்ணு விழத்தான் போகுது. அத்தனை கோடி பணமும் போகத்தான் போகுது, அதுதான் உண்மை”

“அதிருக்கட்டும். ஓபிஎஸ் இன்னும் உங்களுக்காக பிரச்சாரம் ஆரம்பிக்கலையே.. கட்சியோட ஒருங்கிணைப்பாளர் அவர்தானே”

“முதல்ல அவர் தொகுதியில் அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார், அவர் தொகுதி அவருக்கு முக்கியம். எனக்கு 234 தொகுதியும் முக்கியம், நான்தான் முதல்வர் ஆச்சே”

“சரி. கூட்டணிக் கட்சிகள் முதல்வர் வேட்பாளர் என்று உங்களை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்யப் போறீங்க?”

“அது என் வேலை இல்லை, கட்சியோட உயர்நிலை ஆலோசனைக்குழு பார்த்துக்கொள்ளும். அவங்க தானே என்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிச்சாங்க... எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது மிஸ்டர் ரீல்.. உன் முகத்தைப் பார்த்தால் நான் சொல்வதை நம்பற மாதிரி இல்லை. ஆனாலும், அதுதான் உண்மை. அவங்க பாத்துப்பாங்க”

“பாட்டாளி மக்கள் கட்சி, ஏதோ துணை முதல்வர் பதவி கேட்டதா சொல்றாங்களே.. உண்மையா?”

“இது மாதிரி வதந்தியை எல்லாம் நம்பாதே. அது எல்லாம் பொய். தைலாபுரம் ஊராட்சியில் துணைத்தலைவர் பதவி கேட்டார் அன்புமணி ராமதாஸ். ஆனால், அதை நான் தீர்மானிக்க முடியாது. அந்தப் பகுதி தேர்தல் பொறுப்பாளர் சிவி சண்முகம் தான் முடிவு செய்ய வேண்டும்”

“ஏங்க நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்லையே! முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் என்று பாமக 2014lலேயே சொல்லி வந்தது. அப்படியிருக்கும்போது ஊராட்சி துணைத் தலைவர் பதவியா கேட்பார்? நீங்கதான் ஏதோ ரீல் விடுற மாதிரி தெரியுது”

“இதோ பாரு மிஸ்டர் ரீல்!.. நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி அவர் ஊராட்சி துணைத் தலைவர் பதவி தான் கேட்டார். துணை முதல்வர் பதவி எல்லாம் 20 சதவிகித வன்னியர் இட ஒதுக்கீடுக்கு பிறகுதான் கிடைக்கும். அதாவது அத்தைக்கு மீசை முளைச்சால்தான் சித்தப்பா ஆக முடியும். இப்போதைக்கு ஒதுக்கீடு எல்லாம் இல்லை. இது தவிர துணை முதல்வர் பதவிக்கு வரணும் என்றால், அவர் முதல்ல தேர்தலில் ஜெயிக்கணும். அது தான் அவரால் முடியவில்லையே. சட்டசபைத் தேர்தலில் தோற்றார், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றார். இப்போது அவர் சீனியர் சிட்டிசன் கோட்டாவில் ராஜ்யசபா உறுப்பினர், அதை நீங்க மறந்துட்டு பேசறீங்க!”

“சரி அதை விடுங்க. ஆனால், பிஜேபியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் ‘தேசிய முற்போக்கு கூட்டணி’ தலைமையில் தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே! இதுக்கு உங்க பதில் என்ன?”

“ அது ஒன்னுமில்ல. அந்த நபர் முதலில் பீகார் தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு மாற்றல் கேட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் பாவம், இன்னும் பீகார் நினைப்பிலேயே இருக்கிறார். அவரை எங்கள் அண்ணன் கேபி முனுசாமி பார்த்துக்கொள்வார்.”

“ அதென்னங்க எடக்கு மடக்கா கேள்வி கேட்டா மட்டும் ‘அவரு பாத்துப்பாரு..இவரு பாத்துப்பாரு’ன்னு ஜகா வாங்கறீங்க?”

“நான் ஏன் ஜகா வாங்கறேன்? முதல்வர் வேட்பாளர்னா அதிகமா வாயத் தொறந்து உளறக் கூடாது. அப்புறம் சுடலைக்கு வர மாதிரி என்னையும் மீம்ஸ் புள்ளீங்கோ கடலையா வறுத்து எடுத்துருவாங்க. அதனால எது என் ஏரியாவோ அது மட்டும் பேசுவேன். அது மட்டுமில்லாம எல்லாத்தையும் நானே பேசனும்கிற பிஸ்கோத்து ஈகோலாம் எனக்கு கிடையாது. எங்க கட்சி ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கிற கட்சி. எல்லாரும் எல்லாமும் பேசலாம்.”

“கடைசியாக ஒரு கேள்வி. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்லுங்கள்”

“மாண்புமிகு அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்கள் 276 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள், இது நிச்சயம்” என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்துக்கு பறந்து விட்டார் எடப்பாடி.

மொத்த தொகுதியே 234 தானே 276 என்பது என்ன கணக்கு என்று தெரியாமல் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து விட்டார் மிஸ்டர் ரீல்!