மத்தியப் பிரதேச, சிந்த்வார மாவட்டம், பதிவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம்நாராயண் வர்மா (50), விவசாயி. இவரது முதல் மனைவி தன்வந்தி வர்மாவுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மனைவி சம்பா பாய்க்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத் தகராறு காரணமாக முதல் மனைவி தன்வந்தி வர்மா, தனது 3 பிள்ளைகளுடன் தனியே வசித்து வருகிறார். தனது 2-வது மனைவி சம்பா பாய் குடும்பத்துடன் ஓம்நாராயண் வர்மாவுடன் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் 21 ஏக்கர் விவசாய நிலமும் ஒரு வீடும் உள்ளது.
இந்நிலையில், தனது ஒரே மகனிடம் ஓம்நாராயண் வர்மாவுக்கு மனவருத்தம் ஏற்பட்டது. இதனால் தனது சொத்தின் ஒரு பகுதியை மகனுக்கு பதிலாக, அவர் வளர்த்த 11 மாத செல்ல நாயின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார்.
இவர் எழுதியுள்ள சொத்து உயிலில், ‘எனது 2-வது மனைவி சம்பா பாய் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார். என்னை, செல்ல நாய் ஜாக்கியும் நன்றாக கவனித்து கொள்கிறது. இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால், எனது மரணத்துக்குப் பின், செல்ல நாய் அநாதையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனது செல்ல நாய் அநாதையாகி விடக்கூடாது, நன்றாக கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எனது சொத்தின் ஒரு பகுதியை செல்ல நாய்க்கு பிரித்து கொடுக்கிறேன்.
எனது இறுதி மூச்சுவரை 2-வது மனைவி மற்றும் செல்ல நாய் ஆகியோர் மட்டும் என்னை நன்றாக என்னை கவனித்துக் கொள்வர் என நம்புகிறேன். எனது மரணத்துக்கு பிறகு, இவர்கள்தான் எனது இறுதிச் சடங்கை நடத்துவர். என் மரணத்துக்கு பின் ஜாக்கியை யார் கவனித்துக் கொள்கிறார்களோ, அவர்களே நாயின் சொத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என ஓம்நாராயண் வர்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உயிலில் 21 ஏக்கர் நிலம் உள்பட பல்வேறு சொத்துகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்த விவரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் மனைவி தன்வந்தி மற்றும் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. இதனால் ஓம்நாராயணின் மகனும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து கடந்த 30-ம் தேதி கிராமத் தலைவர்கள் ஒன்றுகூடி, ஓம்நாராயண் மற்றும் அவரது மகனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ‘நாய்மீது எழுதப்பட்ட உயில் ரத்து செய்யப்படும்’ என ஊர் கூட்டத்தில் ஓம்நாராயண் உறுதி கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.
Leave a comment
Upload