தொடர்கள்
கவிதை
எட்டு வழிச் சாலை... - கே.ராஜலட்சுமி.

20210001154303279.jpeg

எட்டு வழிச் சாலைக்கு
திட்டம் ஒன்று தீட்டி
விட்டு வேலை துவக்கும்
வேளையும் வந்தது!...

விளக்கம் கேட்டோர்
வாயடைத்துப் போயினர்
வளர்ச்சி விரிவாக்கம்
எனும் பதங்கள் கேட்டு!....

சுற்று வழிப்
பாதையாம்!...
அதை சுருக்க
ஒரு திட்டமாம்!...

எரிபொருள் மிச்சமாம்!...
அதி வேகமாய் வாகனங்கள்
ஏறி வரப் பாதையாம்!...
அதனால் உயரும்
வணிகமாம்!...

எட்டு வழிச் சாலைத்
திட்ட நகலுடன் இடம்
கேட்க கூட்டம் ஒன்று
முற்றுகையிட்டது
முன் பின்
பாரா ஊர்களை!...

கையகப் படுத்த
வந்தோம் உங்கள்
நிலவளங்ளை
கையொப்பம் பெற
வந்தோம் சான்றாய்!...
என்றவுடன்
துவண்டனர் குடிகள்!...

எட்டு வழிச் சாலைக்கு
ஏழைகள் எங்கள் நிலங்களை
விட்டு விட்டு ஏற்கும்
தொழில் தான் எது?!...
வாழும் வகையும் ஏது?!...

ஏர்ப்பின்னது உலகமெனில்
ஏருழும் உழவர் புலங்கள்
சாலையாய் உருமாறுதல் ஏன்?!..
வணிகத்துள் வரவில்லையோ
விவசாய விளை பொருட்கள்?!...
கூட்டத்தார் வைத்த கேள்விகள்!...

இவையெல்லாம் செவிடன்
செவிக்குள் சங்கு ஊதியது
போல் காரியம் முடித்தனர்
கடமையின் காவலர்கள்!...

ஒன்றிரண்டு
உயிர்ப்பலிக்குப்
பின்னே
பெறப்பட்டது
அரைகுறை
நீதியொன்று!...
அது மீட்குமா
அவர் புலங்களை?!...
இல்லை
சாலைகள்
நிறுவப்படுமா
அவர் சடலங்கள் மேல்?!...