சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் விகடன் நிறுவன ஊழியருமான
ஜெ.ஜெகதீசன் (103) நேற்றிரவு 8 மணியளவில் உடல்நலக்குறைவால்
சென்னை மாதவரத்தில் உள்ள தனது மகன் வீட்டில் மரணமடைந்தார்.
அவர் இளம் வயதிலேயே வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு
சத்தியாக்கிரகம் மற்றும் திண்டிவனத்தில் நடைபெற்ற பல்வேறு அறவழி
போராட்டங்களில் ஈடுபட்டவர்.
103 வயதிலும் அவரது வீட்டின் மாடியில் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு தருவதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
விகடன் அலுவலகத்தில் அவர் டெலிபோன் ஆபரேட்டராக வேலை
செய்த போதும், தனது பணி ஓய்வுக்குப் பின்னர் 80 மற்றும் 90ம் ஆண்டுகளில் சரஸ்வதி பூஜையன்று தனது ஜோல்னா பையுடன் தவறாமல் ஆஜராகி விடுவார். அன்றைய ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முதல் இணையாசிரியர் மதன், துணையாசிரியர் ராவ், வீயெஸ்வீ, சுந்தரம், சுதாங்கன், சுபா, அசோகன் உள்பட அனைத்து ஆசிரியர் குழுவினரையும் தவறாமல் நலம் விசாரிப்பார்.
எஸ்.எஸ்.வாசன் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார், ஜெகதீசன்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெகதீசனின் 100-வது பிறந்த நாளில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட பல பிரபலங்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என
அவரது மகன்கள் வீரராகவன் மற்றும் வெங்கட்ராமன் (எ) கிரி குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இதில் வெங்கட்ராமன் எனும் கிரியும் விகடன் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவைப் போலவே அவரும் டெலிபோன் ஆபரேட்டராக பல வருடங்கள் விகடனில் பணி புரிந்தார்.
Leave a comment
Upload