தொடர்கள்
தொடர்கள்
நல்லதோர் வீணை செய்தே - 4 - வேங்கடகிருஷ்ணன்

20201020182104745.jpg

உங்களால் அதனோடு வாழ முடியுமா..?

அவள் பெயர் சுமதி, ஐடி நிறுவனத்தில் வேலை, ஐந்து இலக்க சம்பளம், ஆனால், பெரிய பாரம் எப்போதும் அவள் நெஞ்சை அழுத்திக்கொண்டே இருந்தது. அவளுடைய நெருங்கிய தோழி என் மனைவியின் தங்கை. சுமதியை பற்றி ஏதோ பேச்சு வாக்கில் சொன்னாள். நான் உடனே சுமதியை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் செல்ல சொன்னேன். அப்படி ஒருவரை பரிந்துரைக்கவும் செய்தேன்...

நான் அதை மறந்தும் விட்டேன், ஒரு சில வாரங்கள் கழித்து என்னை சந்தித்த என் மைத்துனி, சுமதியை பற்றி சொன்னாள். ‘இப்போது நல்ல மற்றம் இருக்கிறது அவளிடம்.... சிரிக்க ஆரம்பித்திருக்கிறாள்..’ என்றாள்

“எனக்கென்னவோ அவ இன்னும் சரியாகல... ஒரு புது மாஸ்க் போட்டுக்கிட்டிருக்கான்னு தோணுது” என்றேன்.

“எப்படி சொல்லறீங்க” என்றாள்.

“தெரபிக்கு போனா கொஞ்சம் கொஞ்சமா பேசுவாங்க... முகத்துல முதல்ல அமைதி வரணும்... சிரிப்பு முதல்ல வந்தா... தெரபிஸ்ட்கிட்ட எதையோ சொல்லாம மறைச்சிருக்கா... தான் சரியாகிட்டதா எல்லாரையும் நம்ப வைக்கிற ஒரு முயற்சி இது” என்று சொன்னேன்.

“சரி. நாளைக்கு நான் உங்களை சுமதிக்கு இன்ட்ரோ கொடுக்கறேன்” என்றாள்.

மறு நாள்... சுமதி என்னப் பாத்து சிரித்தாள். “இவ உங்கள பத்தி நிறைய சொல்லிருக்கா. ரொம்ப இன்டெரெஸ்ட்டிங்.. ஐ வான்டெட் டு மீட் யூ” என்றாள்.

நான் நேராக விஷயத்துக்கு வந்தேன்.... “சுமதி நீங்க தெரபிஸ்டுகிட்ட எதையோ மறைக்கறீங்க.... இது உங்க உடம்ப சீக்கிரமா பாதிக்கும், விளைவுகள் மோசமா இருக்கும்”

அவள் கண்களில் கோபமும், அதிர்ச்சியும் பின் வியப்பும்.... “சரி, நாளைக்கு தெரபிஸ்ட நான் மீட் பண்ணும்போது, உங்களால வர முடியுமா?” என்று கேட்டாள். நான் வருவதாகச் சொன்னதும் அவள் முகத்தில் நிம்மதி..

தெரபிஸ்டின் கிளினிக்கில்.. ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, மருத்துவர் அவளின் ஆழ்மனதை பேசவைத்தார்... அப்போது அவள் சொன்னாள்...

“ நான் சொல்லும் புகாரை என் அம்மாவால் மறுக்கவோ அல்லது அதற்காக என்னை தாக்கவோ (அவளால்) முடியாது என்று எனக்குத் தெரியும். இருப்பினும் அவள் சாப்பிடுவதை நிறுத்தி, தூக்கத்தை நிறுத்தி, உடலை வருத்தி நோயை வரவழைத்துக் கொண்டோ, அல்லது மாரடைப்பு ஏற்பட்டோ, இறந்து போவாள் என்று நான் பயப்படுகிறேன்.”

உடனே தெரபிஸ்ட், சுமதியை அவளது அம்மாவின் இறப்பைப் பற்றி யோசிக்கச் சொன்னார். ‘உன்னால் அதனை ஏற்றுக்கொண்டு வாழமுடியுமா?’ என்று கேட்டார். அது மிகவும் கடினமான நேரமாக இருந்தது.

ஆனால், சுமதி சொன்னாள்... “நான் யோசித்து வந்த முடிவு என்னவெனில், அப்படி நடந்தால் என் அம்மாவின் இறப்புக்கு நான் எவ்விதத்திலும் காரணமில்லை.

ஆம்!..நான் சொல்லும் சேதி கேட்டு ஒரு வேளை அவள் நோயுற்றாலோ, மரணமடைந்தாலோ, அது அவளுடைய விருப்பம். நான் எனது சொந்த அப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்ற செய்திக்கு அவள் வேறெந்த விதத்திலும் பதில் சொல்லலாம். அதற்கு பதிலாக அவள் மரணத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது என்பதே என் மனதின் பதில்.

அம்மா ஒரு வேளை இறந்தால் நான் மிகவும் ஆழமாக காயப்பட்டுப் போவேன், அந்த பழிச்சொல்லில் இருந்து விலகி வருவது மிகவும் கடினமான காரியம் தான். அவள் உயிரோடு இருக்கேவே நான் விரும்புவேன். இருப்பினும் அதற்காக நான் இறந்து போக மாட்டேன். நான் அதிலிருந்து மீண்டு வருவேன். அது தான் என் தேர்வாக இருக்கும்” என்றாள்.

தெரபி முடிந்து, சுமதி எங்களிடம் விடை பெற்றுச் சென்றாள். இப்போது அவள் முகத்தில் தீர்க்கமான அமைதி இருந்தது. மனதில் இருந்ததையெல்லாம் இறக்கி வைத்ததனால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு.

அப்புறம் என் வேலைகளில் நான் மூழ்கிவிட... சில மாதங்களுக்கு பிறகு, நான் சுமதியை பார்க்க நேர்ந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் வாசலில் அவள் வெளியே வர... நான் உள்ளே செல்லவிருந்தேன்...

என்னைப்பார்த்ததும் முகம் மலர்ந்தது... “எப்படி இருக்கீங்க?”

“என்ன விடு, நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே?” என்றதும்... “அற்புதமா இருக்கேன்”.. என்றாள். அவள் சொன்னதின் சாரம் இது தான்...

2020102018251537.jpg

தெரபிஸ்ட் முன்னிலையில் அவள் தன் அம்மாவிடம் மனம் திறந்தது நிகழ்ந்தது, அதைக் கேட்டு அதிர்ந்த சுமதியின் தாயார் நோயுறவோ, இறக்கவோ இல்லை. அவளுடைய மகள் பேசும் உண்மையை கேட்டு, வருத்தப்பட்டாள். தன் மகள் சிறு வயதில் தனக்கு நேர்ந்த அவலத்தை இவ்வளவு கடினமாக வெளிப்படுத்த வேண்டி இருக்கிறதே என வருத்தமுற்று அழுதாள். அதே சமயம் அவளால் இப்போது இதனைக் கையாள முடிகிறது என்பதில் பெருமையும் அடைந்தாள் அந்த அம்மா!

“வர்றேன் சார், வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.. சீக்கிரமா எனக்கு கல்யாணம் நடக்கபோகுது சார்... மறக்காம எல்லாரும் வரணும்...” சொல்லியபடி சுமதி தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்....

நான் கை கூப்பியபடி கோபுரத்தை பார்த்தேன்... சுமதி அங்கே கலசமாய்... என் மனத்திலும்..... உயர்ந்து விட்டாள்....


2020102018232332.jpg

சுமதியின் கதை குறித்து மன நல மருத்துவர் கம் தெரபிஸ்ட் டாக்டர். ஸ்மிதா ராஜன் அவர்களின் கருத்து...

இந்த பதிவு .. இந்த கதையை சார்ந்தது... சில சமயங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள், அவர்கள் அதற்கான சிகிச்சை / தெரபி எடுத்துக்கொள்ளும்போதும், ஆலோசனை பெறும்போதும் மற்றும் அவர்கள் அதிலிருந்து மீளும் சமயம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் மீண்டு வரும் சமயத்தில், சிலர் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். சிலர் எதற்கு எடுத்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள், அதை ஒரு முகமூடியாக பயன்படுத்துவர். சிலருக்கு மறதி ஏற்படுகிறது. சிலருக்கு தன்னை யாரும் தொடுவது பிடிக்காது... இப்படித்தான் அவர்கள் சிகிச்சைக்கு / தெரபிக்கு எதிர்வினை ஆற்றுவார்கள். இது அவர்களுக்கு சிகிச்சை / தெரபி அளிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அந்த ஒரு மணி நேரத்தில், அவர்கள் அந்த ஆலோசகரிடமோ அல்லது தெரபி அளிப்பவரிடமோ எப்படி ஒத்துழைக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் அமையும். அதை அந்த தெரபி அளிப்பவர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இதன் முடிவில் நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்...

சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் உள்ளது. நான், அவர்களும் ஆலோசனை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் அப்பொழுதுதான் அவர்களால் பாதிக்கப்பட்டவரின் வலியை உணர முடியும். மேலும் இந்த சிகிச்சை பாதிக்கப்பட்டவரின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றத்தை அவர்களின் குடும்பத்தார் மூலமே நாம் அறிய முடியும். உதாரணமாக ஒரு தாய் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால், அதை அந்த குழந்தையும் பார்த்திருந்தால், அந்த குழந்தைக்கும் ஆலோசனை வழங்கப்படவேண்டும். அந்த தாய் சிகிச்சை பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த குழந்தைக்கும் ஆலோசனை வழங்கப்படவேண்டும். அதற்காக நான் குடும்ப உறுப்பினர்களும் எல்லா நேரமும் வரவேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இது மிகவும் இன்றியமையாதது . அது மிகவும் நல்ல பலனை விரைவாகவே அளிக்கிறது. இந்த கதை அதனைப் புரிய வைக்கிறது.