காவிரி மைந்தன்
ஒற்றை ரோஜா ஒய்யாரமாய் வீற்றிருக்க..
அன்பே!
துடிக்கின்ற இதயத்தில் முழுவதுமாய் நீ இருக்க..
எனக்கதுவே சுகமாக இருக்கிறது என்று சொல்லும் விந்தை என்ன?
மனக்கதவை திறப்பதற்கு மாலையென்ன.. காலையென்ன?
மகராணி தரும் பார்வை எனக்கான போதைதானே!
கணக்காக கட்டிமுத்தம் ஒன்றிரண்டு தந்தால் போதும்.. உனக்காக கவிதைமலர் நெஞ்சினில் கொட்டும்! கொட்டும்!!
மையல்தரும் கண்களையே மாறன்விடும் கணைகளென பாவலர் பலரும் எழுதிவைக்க.. ஆம்.. கண்ணே.. அவ்விழிகள் செய்யும் செயல் ஒன்றல்ல.. இரண்டல்ல.. என்றேன்!
ஐம்புலன்கள் தம் பணியை தக்கபடி செய்திருந்தும்.. விழிகளில்தான் தொடக்கம் வரும்!
விழிகளில்தான் நீர் சொறியும்!
மகிழ்ச்சியின் உச்சங்களில் சிலநேரம் கண்களில் நீர் பெருகும்!
துயரத்தின் பிழிவினிலும் உள்ளங்கள் தான் கரைந்து கண்ணில் நீர் உற்பத்தியாகும்!
என்னவளே.. என்னை நீ அழவைக்க மாட்டாய் என்கிற என் நம்பிக்கை பொய்க்காது!
துள்ளிவரும் வேல்போல் உன் விழிகள் என்னைக் கொய்வதற்கு பாய்ந்ததுதான் தெரியுமே.. சொல்லிவிட முடியாத வார்த்தைகள் மூன்றுதானே!
போரினிலே வீரம்தனைக்காட்டி பகைவரை புறமுதுகுகாட்டி ஓடவைத்த வீரரும் தோல்விகாணும் ஒரு இடம் இதுவல்லவா?
பார்.. என்றால் பார்வைகூட நேர்ப்படாது.. கேள் என்றால் வார்த்தைகள்கூட வெளிவராது.. தத்தளிக்கும் உள்ளம் இருவருக்கும் சொந்தமல்லவா?
எப்படி.. உள்ளங்கள் இப்படிக் காதலை ஒப்புவிக்கின்றன!
சுகந்தமான பரவல் இதயத்திற்குள் நிலவிட.. முதலில் நீ பேசிய சொல் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்.. நினைவுக்குழியிலிருந்து எதுவும் சிக்கவில்லை.
அதன்பிறகு பேசிய அத்தனைச் சொற்களும் மனதிற்குள் நிலைக்க.. அன்பே உன் முதல் வார்த்தையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
அதுசரி.. உன் கண்களல்லவா முதலில் பேசியிருக்கும் என்றேன்!
ஆம் என்றாய்!
வளையல்கள் குலுங்கியபடி.. வஞ்சிநீயும் என்னை வரவேற்ற கோலம் மனதினில் இன்றும் பசுமையாக..
உன் கருங்கூந்தலில் நான் தந்த ஒற்றை ரோஜா ஒய்யாரமாய் வீற்றிருக்க..
முதல் தேர்வில் தேர்ச்சியுற்றேன் என்று திரும்பிய திசைகளில் எல்லாம் எழுதி வைக்க விரும்பினேன்!
மூச்சு வாங்க ஓடிவந்த அப்பாதையில் அறிந்தவர் எல்லாம் என்ன என்ன..
என்று வினவ.. என்ன சொல்ல அவர்களுக்கு?
தொட்டால் பூ மலரும் பாடல் வரிகளுக்கு முழுமையான அர்த்தம் கிடைத்தது
அன்றுதானே?
Leave a comment
Upload