தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான்... - 15 - ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி

20201019113138730.jpeg

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.

யார் மிகச்சிறந்த யோகி?!

தூக்கம் என்பது தன்னை நெருங்காமல் யார் இருக்கிறாரோ அவர்தான் மிகச்சிறந்த யோகி! பாவம் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் நெருங்காதவர் தான் யோகி! மனதில் அசுத்தம் இருந்தால்தான் துக்கம் ஏற்படும். மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால், நமது மனது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். மிகச் சிறந்த ஒழுக்கத்தாலும் மனக் கட்டுப்பாட்டினால் மட்டுமே மனதில் உள்ள அசுத்தங்களை நீக்க முடியும். நாம் இந்த உலகை விட்டு மறைவதற்கு முன் நமது ஆத்மா நம் உடலை விட்டு பிரிவதற்கு முன் முழுமையான ஞானம் பெற்று, சரியான கல்வி மூலம் கட்டுப்பாடுடன் ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களை அகற்றி வாழ்ந்து விட வேண்டும். அப்படி செய்தால் கடைசியில் நமது தேகம் இந்த உலகைவிட்டு விலகும்போது யோகம் ஆகிவிடும்.

ஒரு யோகிக்கு அடையாளம் என்பது என்ன? சதாசர்வ காலமும் பரமாத்மாவை மட்டுமே சிந்தனையில் கொண்டு, மனசு வேறு எதைப் பற்றியுமே நினைக்காது இருப்பதே அடையாளம். நமது மனசு வேறு எதைப் பற்றியுமே சிந்திக்கக் கூடாது. அப்படி அலை பாயாமல், ஓடாமல் ஆகிவிட்டால் இந்த மனசு மூலம் நமக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகளும் தொலைந்து விடும். அத்தகைய நிலையைப் பெறுவதற்கு அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நமது மனசு எங்கே இருந்து துவங்கியதோ அதே இடத்தை போய் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால் நமது மனதில் எந்தவித அலைபாயும் எண்ணம் இல்லாமல், கரைந்து பரமாத்மாவுடன் கலந்துவிடும். சகலவிதமான தொந்தரவுகளில் இருந்து விடுபட்ட நிலை இதுதான். நாமெல்லாம் நதி என்று நினைத்துக் கொள்வோம். அது எப்படி உண்டாயிற்று. நீர் ஆவியாகி என்பது அங்கிருந்து நதியாக ஓடி சமுத்திரத்தில் கலக்கிறது. எங்கேயோ உருவாகி பல இடங்களுக்குச் சென்று, சுக துக்கங்களை அனுபவித்து பின்பு அதே இடத்திற்கு செல்கிறது. நமது மனமும் அதேபோல் எங்கு உருவாகியது பரமாத்மாவிடம் போய் சேர வேண்டும். சமுத்திரம் நதியை ஏற்றுக்கொள்வது போல் பரமாத்மா நம்மையும் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்வார்.

வெளி உலகில் உள்ள எந்த ஒரு விஷயமும் நம்மை பாதிக்காமல் இருப்பவர் தான் யோகி. அப்படி இருந்தால் மட்டுமே நாம் அந்த யோக நிலையை அடைய முடியும். ஒரு சிறு தொந்தரவு இருந்தாலும் அது முழுமை பெற்ற ஒரு ஞானநிலை அல்ல. ஒரு சிறிய ஆசை நம் மனதிற்குள் எங்காவது தோன்றினால் கூட, நாம் நமது மனதை பரமாத்மாவிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று தான் அர்த்தம். யோகியின் அடையாளத்தை நாம் வேறுவிதமாகவும் சொல்லலாம். அவருடைய சித்தம், பரமாத்மாவிடம் நிலைத்து விட்டது என்றால் அதற்கப்புறம் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய துக்கம் வந்தாலும், அது அவர்களை துளிக்கூட பாதிக்காது. அவனை அழ வைக்காது, அசைக்காது. தனக்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்று அவனுக்கு தோன்றி விட்டால் கூட, அவன் யோகி இல்லை. அவன் மனது ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நாட்டம் ஏற்பட்டால் கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்று அர்த்தம்.

யோகிகளுக்கும் துக்கங்கள் வரும். ஆனால் அது வெளி உலகத்துக்குத் தான் துக்கமாக தோன்றுமே தவிர, அவர்களுக்கு தோன்றாது. யோகி ஒருவன் மட்டும் தான் சதாசர்வகாலமும் ஆனந்தமாக மகிழ்ச்சியோடு இருப்பவன். அவர்களுக்கு சுபாவமாகவே கருணை மந்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடமும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியளவும் இம்சைகள் வரக்கூடாது என்று நினைப்பவர். தான் என்கிற அகங்காரம் இருக்காது. எந்தவித சொந்தம் என்ற பற்று இருக்காது. அவருடைய அனைத்து காரியங்களிலும் பரமாத்மா மட்டுமே இருப்பார்.

மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் நமது பாவங்களை கஷ்டங்களை நீக்குகிறான். ஒவ்வொரு ஜீவனும் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு சிறிய காலமாவது கருமங்களில் இருந்து விடுதலை தருகிறார். தினமும் நமக்கு சிறிது காலம் தூக்கத்தை கொடுத்து நாள் முழுவதும் சுக துக்கங்களில் அலைந்து கொண்டிருக்கும் நமக்கு ஒரு சிரமபரிகாரம் தருவதுபோல், இந்த சரீரம் போன பிறகும் சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு, இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல் தான் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்றும் சொல்லுவர். அது கூடாது. ஒருமுறை சரீரத்தை விட்டு உயிர் போய்விட்டால், அது மீண்டும் மற்றோரு சரீரத்தில் வரக்கூடாது. அப்படி வராமல் இருக்க, நாம் கட்டுப்பாடுடன் ஒழுங்கு மனப்பான்மையுடன் கருணையுடன் ஜபம், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் கொடுத்து, நம்மை இந்தப் பிறவியிலேயே சரி செய்து கொள்ள வேண்டும். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டே நாம் இவற்றை பழகிக்கொண்டால், நாம் பரமாத்மாவை அடைய முடியும். கோடான கோடி ஜனங்கள் இருக்கும் இந்த உலகில், ஒரு சிலர் அப்படி ஞானியாக உருவாகுகின்றனர். அப்படி ஒரு ஞானி உண்டாவது தான் இத்தனை மனிதர்கள் செய்த பூஜை பிரார்த்தனைகளின் பலன்.