தொடர்கள்
கவிதை
என்னுடன் பேசு...! - சி. கோவேந்த ராஜா.

20201020175018382.jpeg

நீ இழுக்கும் இழுப்புக்கெல்லாம்....
நான் ஓடோடி வருகிறேன்....!
என்னையும் அறியாமல்....
உன்னையும் நான் அறியாமல்....!
உனக்கும் எனக்கும் என்ன உறவு....?!

உன் மூச்சிழுக்கும் சத்தம் தான்....
எனக்கு சக்தியளிக்கும் சுத்த உணவு....!

நீ வெளியிடும் காற்றை..
நான் சுவாசித்து மகிழ்கிறேன்.... வாழ்கிறேன்....!
உன்னோடு.. உற்சாகமாக‌... ஓடோடி வருகிறேன்...!

நீ பாதை காட்டுகிறாய்....!
நான் தொடர்ந்து பயணிக்கிறேன்....!

எவ்வளவு காலம் தான்....
நாம் பேசாமலேயே பழகுவது....?

ஒரு முறையேனும்...
என்னுடன் பேசு....!

உன் பெயரையாவது
பகர்ந்து விடு....
என் மனதினில்
பதிவு செய்து கொள்கிறேன்....!

எவ்வளவு காலம் தான்....
உன் முதுகழகையேப் பார்த்துக் கொண்டிருப்பது....?!

ஒரு முறையேனும்....
திரும்பிப் பாரேன்...!
உன் முகத்தழகைப் பார்த்துக் கொள்கிறேன்...!

இந்த கொரோனாப் பூச்சிக்குத்
தெரியுமா....?!
நம் காதல் வாசனை....!
நம்மையும் முடக்கிப் போட்டு விட்டதே...!!

இந்த பூமி சுழல்வதைப் போல்...
நாமும் சுழல்வோம்.... வா...!

ஒரு முறையேனும்...
என்னுடன் பேசு....!

ஏன் பேச மறுக்கிறாய்...?
நான் கேட்பது - உனக்கு
கேட்கவில்லையா.....?!

நான் பார்ப்பதை - நீ
பார்க்கவில்லையா....?

என்ன ஆயிற்று உனக்கு....?
ஏன் இயங்க மறுக்கிறாய்...?
வெறுப்பாயிற்றா உனக்கு....?!

ஒரு முறையேனும்....
திரும்பிப் பாரேன்...!

‘பழுதாகி விட்டது -
பிறிதொரு ரயில் எஞ்சினை...
கொண்டு வர வேண்டு’மென....
உரக்க உரையாடுகிறார்களே....!!”

என்னை... இயக்கும்....இழுக்கும்....
உன் பெயர் தான் ரயில் எஞ்சினா....?!

நீ இழுக்கும் இழுப்புக்கெல்லாம்....
நான் ஓடோடி வருகிறேன்....!
என்னையும் அறியாமல்....
உன்னையும் நான் அறியாமல்....!

ஒரு முறையேனும்....
திரும்பிப் பாரேன்...!
உன் முகத்தழகைப் பார்த்துக் கொள்கிறேன்....!