“தாத்தா, சும்மாதானே இருக்கே, எங்களோட கோவிலுக்கு வரலாமில்லே. ‘பாட்டியே’ வரும்போது உனக்கென்ன”, அதிகாரத்துடன் அழைப்பு விடுத்தாள் பேத்தி.
“அவளுக்கு இருக்கிற பூஞ்ச உடம்புக்கு, மலைக்கு கிழே இருந்து ஊதி விட்டியானா, கோபுரத்து மேலே போய் ஒட்டிப்பா. என்னை மாதிரி குண்டா இருக்கிறவர்களாலே, நிறைய படிகள் ஏற முடியாதும்மா. அதுமட்டுமில்லே, மணிக்கணக்கிலே டிராவல் பண்ணறது எனக்கு கஷ்டமாயிருக்கும்” என்றேன்.
“இங்கிருந்து இரண்டு மணிநேரத்தில பழனிக்குப் போயிடலாம். அங்கே மலையடிவாரத்திலே இருந்து மேலே போய், தரிசனம் செஞ்சுட்டு கீழேவர இரண்டு மணி நேரம் போதும். வீட்டுக்கு ரிட்டர்ன் வர இரண்டு மணிநேரந்தான் ஆகும். மதியம் லஞ்சுக்கு ஆத்துக்கே திரும்பி வந்திடலாம். அதனால, நாளைக்கு காலையிலே ஆறுமணிக்கெல்லாம், எங்களோட கார்ல கிளம்ப தயாரா இரு” என்ற என் மகனின் ஆர்டினன்ஸை, காதில் வாங்கிக் கொண்டேன்.
“தாத்தா என்னோட ஸ்கூல்ல, ‘பக்திப் பயணம்’ அப்படீங்கிற தலைப்பிலே, தமிழில் ஒரு கட்டுரை போட்டி வைச்சிருக்காங்க. இப்போ, நீ என் கூட வந்தாதான், அதைப் பத்தி என்ன எழுதணும்னு சொல்லித்தருவே. அதுனாலா, நீயும் வா தாத்தா” என்ற பேத்தியின் கெ(கொ)ஞ்சல் வார்த்தைகளால் கட்டுண்டு, “சரி வரேன்” என்று வாக்குறுதி குடுத்துவிட்டு, என் அறைக்கு உறங்கப் போனேன்.
என்னுடய ஆறு வயதில், என் பெற்றோருடன், அந்த மலைக்கோவிலுக்கு போன எக்ஸ்பீரியன்ஸ், மனதில் நிழலாடியது.
“சீக்கிறமா கிளம்புடி. ரயில்வே ஸ்டேஷன் வழியா போற, நம்பஊரு பிரைவேட் பஸ்ஸோட டிரைவர்கிட்டே, வண்டியை கரெக்ட் டயத்துக்கு எடுக்காம, நமக்காக, பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லியிருக்கேன். ஏழுமணிக்கெல்லாம், பழனிக்கு போற டிரெயினை கிளப்பிடுவான். கவர்மென்ட் விட்டிருக்கிற டிரெயின் நமக்காக வெயிட் பண்ணாது. இன்னும் என்ன பண்ணறே?” என்று அவசரப்படுத்தினார் அப்பா.
“உங்களுக்குத்தான் எக்ஸ்டிராவா கொஞ்சம் மொளாப்-பொடி எடுத்து, தனியே பொட்டலமாய் கட்டிண்டிருந்தேன்” என்றபடியே, சோத்துக் கூடையோடு வாசலுக்கு வந்தாள் அம்மா.
“டிரெயினுக்குள்ளே ஏறினதும், காலியா இருக்கிற சீட்ல, காலை நீட்டிண்டு படுத்துடணும், சரியா” என்று அம்மா என்னிடம் சொல்லி வைத்திருந்தாள். கம்பிகளே இல்லாத ஜன்னல் வழியாக, சாப்பாட்டுக் கூடையையும், துணிமணிகள் வைத்திருந்த துணிப்பையையும், அப்பா அந்த கம்பார்ட்மென்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தார்.
நான் படுத்திருந்த, சீட்டுக்கடியில் ஓடிய கரப்பான் பூச்சிகளை பார்த்ததும் அரண்டு போனேன். போராததுக்கு, மரத்தாலான அந்த சீட்டின், இண்டு-இடுக்கில், ஒளிந்து கொண்டிருந்த மூட்டைப் பூச்சிகள், நான் படுத்ததும், கோஷ்டியாக அட்டாக் செய்தன.
தலையில் மூட்டைகளுடன், பிளாட்ஃபாரத்தில் நடந்து வந்த கும்பலிலிருந்த ஒரு பெண், என் அம்மாவிடம், “இந்த பொட்டி திண்டுக்கல்லுக்கு போகுங்களா?” எனக் கேட்டாள்.
“தெரியாதுங்க, இந்த பொட்டி பழனிக்கு போகுது. நீங்க முன்னாடி போய் கேளுங்க” என்று சொல்லிவிட்டு, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் “சனியனே, பேசாம காலை நீட்டிண்டு படுத்துத் தொலை. யாராவது வந்து உட்காந்திரப்போறா”, என்று எரிந்து விழுந்தாள்.
“ரயில்வே டிப்பார்ட்மென்ட்ல கொள்ளையடிக்கிறாங்க. பழனிக்கு போக, ரெண்டு டிக்கட்டுக்கு ஏழு ரூபாய் வாங்கிட்டான்” என்றார் அப்பா.
“இவனுக்கு டிக்கெட் வேண்டாமா” என்ற அம்மாவிடம், “ஐந்து வயசுக்கு மேல அரைடிக்கட்டாம். இப்போதானே இவனுக்கு ஆறுவயசு ஆரம்பிச்சிருக்கு, அதனால டிக்கட் வேண்டியதில்லை,” என்ற அப்பாவின் லாஜிக் எனக்கு புரிவதற்குள், வண்டி நகர ஆரம்பித்தது.
வண்டி கிளம்பி பத்து நிமிஷம் கழித்து, ‘இட்லிய எடு, சாப்பிடலாம்’ என்ற அப்பாவிடம், “மணப்பாறை வரட்டும்னு நீங்கதானே சொன்னேள்” என்றாள் அம்மா. பரவாயில்லை, “திண்டுக்கல்லுக்குப் போனதும் புளிசாதத்தை சாப்பிடலாம், இப்போ இட்லியைக் குடு” என்ற அப்பாவின் கைகளில் வாழைச்சருகை கொடுத்துவிட்டு, அதில் மிளகாய்ப்பொடி தடவிய, இட்லிகளை அலங்காரமாய் அடுக்கினாள் அம்மா.
நான் படுத்துக் கொண்டிருந்த சீட்டையே, எனது டைனிங் டேபிளாக்கி, எனக்கும் இரண்டு இட்லிகள் கொடுத்தாள். இட்லி சாப்பிடும் போதே, நாங்கள் கொண்டுபோன கூஜாவிலிருந்த குடி-தண்ணீர், பாதிக்கு மேல் காலியாகியிருந்தது.
“மணப்பாறை ஸ்டேஷன் வரப்போறது. தண்ணி-கூஜாவை ஒளிச்சு வை” என்ற அப்பாவை, புரியாமல் பார்த்த அம்மாவோ, அந்த ஸ்டேஷனில் சில நிமிடங்கள் நின்ற இரயிலில் இருந்து, குடங்களில் தண்ணீர் பிடித்த ஜன-நெரிசலைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். சிறிது நேரத்திற்குப் பின், நகர்ந்து கொண்டிருந்த டிரெயினுக்கு வெளியே, “படுபாவிங்க, நம்ப போலீஸ்-ஸ்டேஷனுக்கு ஒரு குடம் தண்ணி புடிக்க உடுதுங்களா” என்று புலம்பியபடியே இரு போலீஸ்காரர்கள், காலி-தண்ணிக் குடத்தை எடுத்துக் கொண்டு போனார்கள்.
அந்த புகைவண்டி, ஆடி-அசைந்து ஒரு வழியாக, மதியம் இரண்டு மணிக்கு, பழனி இரயில் நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தது.
“மலையடிவாரத்துக்குப் போணும்னா இரண்டு ரூபாய் வேணும் சாமி” என்ற குதிரை வண்டிக்காரனிடம், ‘முக்கால் ரூபாய்தான் தருவேன்’ என்று பேரம் பேசினார் அப்பா. பிறகு, என்னையும், அம்மாவையும் துணிப்பையோடு வண்டிக்குள் அடைத்துவிட்டு, தான் மட்டும், குதிரையோடு போட்டி போட்டுக்கொண்டு நடந்தே மலையடிவாரத்திற்கு வந்தார்.
வண்டியிலிருந்து நாங்கள் இறங்கியதும், எங்களிடம் வந்தார் ஒரு காவி உடையணிந்த சன்னியாசி. “மகனே… இந்த சித்தர் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. எதாவது தர்மம் பண்ணு. நீ கோயிலுக்கு வந்த புண்ணியத்தை, தேடிக்கோ” என்று, கௌரவப் பிச்சை கேட்டார்.
அவரிடம் என் அப்பாவோ, “இந்த சாமான் பையையும், என் பையனையும் தூக்கிக்கோ. எங்கூட மலைமேல ஏறிவந்து கொடுத்தியானா, உனக்கு சாப்பாடு வாங்கித்தந்து, இரண்டு ரூபாய் காசும் தரேன்” என்று டீல் போடவும், தெறித்து ஓடினார் அந்த ‘போலி சித்தர்’.
“ஐயா, இங்கே வாங்க. அங்கே, மலை மேல அர்ச்சனை சாமானெல்லாம் கிடைக்காது. பூ, பழம், சூடம் எல்லாம் இங்கேதான் வாங்கிக்கணும்” என்றார் ஒரு கடைக்காரர். “நான் முருகனை மலைமேல ஏறி பார்க்கத்தான் செலவு பண்ணிண்டு வந்திருக்கேன். அவனாவது மேல இருக்கானா? இல்லே அவனையும் தூக்கிட்டீங்களா?’ என்ற என் அப்பாவின் நையாண்டியைக் கேட்டு, பம்மினார் கடைக்காரர்.
நாலணா கொடுத்து, தேவஸ்தான அலுவலகத்தில் வாங்கிய சீட்டை காண்பித்து, எனக்கு மொட்டை போட்டு, சந்தனம் தடவி, கிட்டத்தட்ட எழுநூறு படிகளையும் ஏறி, மலைமேலிருந்த முருகனின் சன்னிதானத்திற்கு போய் சேர்ந்தோம்.
மலைமேல், ‘தரிசனத்திற்கு வருவோரிடம் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் காசை, முருகனுக்கு காணிக்கையாக போடுகிறேன்’ என அம்மா வேண்டியிருந்தாளாம். பிச்சை கேட்க கூச்சப்பட்ட அம்மாவுக்காக, பினாமியாக, அப்பாவும் சேர்ந்து பிச்சை எடுத்து, வேண்டுதலை பூர்த்தி செய்தார். ஐந்து பக்தர்கள் போட்ட, பதினேழு பைசாவை முருகனுக்கு காணிக்கையாக்கினாள் அம்மா.
அன்று சஷ்டி என்பதால், மாலையில், முருகனின் சன்னிதானத்தில் கிட்டத்தட்ட நூறு பக்தர்களுக்கு மேல், தரிசிக்க நின்று கொண்டிருந்தோம். முருகனுக்கு சாயரட்சைகால ஸ்பெஷல் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
அருகில் நின்று கொண்டிருந்த பெண்மணி, என் அம்மாவிடம், “ஏனுங்க, இங்கன மலைமேல இருக்கிற முருகன், கையில குச்சியோட, கோவணம் கட்டிகிட்டு, மொட்டைத்தலையோட, சின்னப் பையனா இருப்பாகன்னுதானே சொன்னாக. ஆனா இங்கன, வேட்டிமேல கோவணம் கட்டிகிட்டு, தலைமுடியிலே கொண்டை போட்டுகிட்டு, பெரிய ஆளாட்டமா இல்லே இருக்காக” என்ற, தன் சந்தேகத்தை கேட்டாள்.
“ஏன்னா, சுவாமியே தெரியலே, அர்ச்சகர் மறைக்கிறார்” என்று ஆதங்கத்தினால், நச்சரித்தாள் அம்மா. ரௌத்திரமான அப்பாவோ, “டேய், யாருடா அவன், சன்னிதானத்துக்குள்ளே, நகருடா. நீ தீபாராதனையும் காட்ட வேண்டாம், ஒரு மண்ணும் காட்ட வேண்டாம். பாலபிஷேகம் பாருங்கோ… பன்னீர் அபிஷேகம் பாருங்கோன்னு… சத்தம்தான் வருது. உன்னோட பின் பக்கத்தை தவிற, முருகனே தெரியலை.”
“நாங்க எல்லோரும் தரிசனம் பண்ணிட்டு போனபிறகு, நீ மட்டும் தனியா உட்கார்ந்து அபிஷேகம் பண்ணி பார்த்துக்கோ. இப்போ தள்ளிப்போகலே, படவா பயலுகளா, திருச்செந்தூர் கடற்கரையிலே நடக்க வேண்டிய சூர சம்ஹாரத்தை இந்த மலை மேலையே நடத்திப்புடுவேன்” என ருத்திரமூர்த்தியானார் என் அப்பா.
அப்பாவின் அலறலில், கருவரைக்குள்ளிருந்த அர்ச்சகர்கள், அட்ரஸ் இல்லாமல் போனார்கள். அன்று தரிசனத்துக்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள், முருகனோடு சேர்த்து, என் அப்பாவுக்கும் கும்பிடு போட்டுவிட்டு, நன்றியுடன் நகர்ந்தார்கள்.
“மலையேறி வந்தது, கால் கடுக்கறது. கீழே போறதுக்கின்னு டிரெயின் விட்டிருக்காளாமே. அதுல உட்கார்ந்துண்டு, கீழே போலாமா?”, என்று ஆசைப்பட்ட என் அம்மாவுக்கு மட்டும் டிக்கெட் வாங்கி, அவளை, விஞ்சில், ஏற்றிவிட்டார் அப்பா. என்னை, அவரது தோளில் தூக்கியபடியே, யானைப் பாதை வழியாக ‘விஞ்ச்’ கீழே வருவதற்கு முன் அடிவாரத்துக்கு வந்து, அக்கால டெக்னாலஜியை அசிங்கப் படுத்தினார், என் அப்பா.
“ஏம்பா போன வருஷம் வந்தபோது, ஒரு டின் பஞ்சாமிர்தம், ஐம்பது பைசாதானே. இப்போ ஏன் ஒரு ரூபாயாக்கிட்டீங்க” என்று, கடைக்காரரிடம், ‘எக்கனாமிக் ஆடிட்டிங்’ செய்து கொண்டிருந்தார் அப்பா.
“சாமி டப்பாதான் விலை அதிகமாயிடுச்சு. பஞ்சாமிர்தம் அதே விலைதான்” என்றார் கடைக்காரர்.
கையில் வாங்கிய ஒரு டப்பாவிலிருந்த பஞ்சாமிர்தத்தை, எங்கள் உள்ளங்கைகளில் ஊற்றிவிட்டு, மீதியை தானும் நக்கிவிட்டு, ‘இந்தாங்க டின்’ என்று சொல்லி, ஐம்பது பைசாவை கொடுத்து, மலையடிவார பஞ்சாமிர்தக் கடைக்காரரை அதிர்ச்சியடையச் செய்தார் அப்பா.
எப்படியோ, பழனியாண்டவனின் தரிசனம் முடித்துவிட்டு, அன்று இரவே, புகைவண்டியைப் பிடித்து, அடுத்த நாள் காலையில் வீடுவந்து சேர்ந்தோம். கோவிலுக்குப் போய்வந்த செலவு “இருபது ரூபாய்” என்று நோட்டில் கணக்கெழுதி வைத்தார், அப்பா. அந்த நினைவுகளோடு தூங்கிப் போனேன்.
அடுத்த நாள் காலையில், என் பையன் போட்ட பிளான்படி, குடும்பத்துடன் கோவிலுக்குப் போய்விட்டு வந்தோம். ‘பழனி விசிட்’ செலவு இருபதாயிரம் ரூபாய் என்று, என் மகன் கணக்கு சொல்லவும் ‘அவ்வளவா’ என்று அதிர்ச்சியானேன்.
அவசரகதியில் போய்விட்டு வந்த அந்த எக்ஸ்பென்ஸிவ் ‘பக்திப் பயணம்’ பற்றி, சுவாரசியமே இல்லாமல், பத்து வரிகளில் ஒரு கட்டுரை எழுதி என் பேத்தியிடம் கொடுத்தேன். அவளும், அதை ஆன்லைனில், தன் ஸ்கூல் நடத்திய கட்டுரைப் போட்டிக்கு, சப்மிட் செய்தாள்.
அடுத்த வாரமே, அந்த கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்ததாக, என் பேத்தி சொன்னதும், நான் ‘அப்படியா’ என்று மீண்டும் அதிர்ச்சியானேன்.
Leave a comment
Upload