தமிழ்நாடு, திருச்சி காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது சமயபுரம். அனைத்து சக்தி ஸ்தலங்களிலேயே மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரத்தில், மாரியம்மன் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக, அஷ்ட புஜங்களுடன் விக்கிரசிம்மாசனத்தில் வீற்றிருந்து, ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் தங்க திருமுடியுடன் குங்கும நிற மேனியில், நெற்றியில் வைரபட்டை ஒளிவீச, வைரகம்மல்களும், வைரமூக்குத்தியும், சூரிய, சந்திரனைப்போல் ஜொலித்து, கண்களில் அருளொளி பாவித்து, அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதார சக்தியாய் அருள்பாலிக்கிறார்.
இப்பகுதி மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கும் பல பக்தர்களுக்குத் தாயாகவும், குலதெய்வமாகவும் விளங்குபவள் சமயபுரம் மாரியம்மன், இவர், சமயபுரத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுர நாயகி, சாம்பிராணி வாசகி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, கெளமாரி, மகமாயி, நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள் என்ற பல பெயர்களில் கேட்டதையும், தகுதியுடையவர்களுக்கு அவர்கள் கேட்காததையும் கொடுக்கும் கற்பக விருக்ஷமாக விளங்குகின்றார். இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் “விபூதி விசேஷ பிரசாதமாக” வழங்கப்படுகிறது.
சமயபுரத்தாளின் திருக்கோலம்:
பக்தர்களுக்குத் தக்க சமயத்தில் வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், சிவப்பு நிற மேனியோடு, அம்மன் எட்டு கைகளுடனும், தலை மாலையைக் கழுத்திலும், சர்ப்பக் கொடையுடன், இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை தொங்கவிட்டபடி வீற்றிருக்கிறார். மாயாசூரன் தலைமீது வலது கால் பதித்துள்ளார். அதன் வலப்பக்கம் அசுரன் சண்டன் தலை, இடப்பக்கம் அசுரன் முண்டனின் தலையென, அம்பாளின் வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து விக்கிரம சிம்மாசனத்தில் அமர்ந்தபடி இருபத்தி ஏழு நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, யந்திரங்களாகத் திருமேனியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாலிக்கின்றார்.
சுயம்புவும் கருவறை மூலவருமான மாரியம்மன், விக்கிரம சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.
கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் அமைந்துள்ளது. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்க, ஶ்ரீ காஞ்சி மகா பெரியவரின் ஆலோசனைப்படி, நுழைவாயிலின் வலப்புறத்தில், ஒரே சந்நிதி்யில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி
1970-ல் கும்பாபிஷேகம் செய்தனர். அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு. சமயபுரத்தாளின் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது, அதனால் உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.
திருவிழாக்கள்:
சமயபுரத்தாளைக் காணத் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி, ஆடிப்பெருக்கு, ஆனி பிரம்மோத்ஸவம், ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், சித்திரை பிரம்மோத்ஸவம், குருப்பெயர்ச்சி, கார்த்திகை தீபம், நவராத்திரி, பங்குனிப் பெருவிழா, தீர்த்தவாரி, தெப்போத்சவம் போன்றவை சிறப்பு விழாக்களாகும். இது தவிரப் பல திருவிழாக்கள் சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். இங்கு ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். சித்திரைத் தேர்த்திருவிழாவன்று சமயபுரத்தாளை ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசித்துச் செல்கின்றனர். தேர்த்திருவிழாவின் பத்தாம் நாள் திருவானைக்காவில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரர் மாரியம்மனுக்குச் சீர்வரிசை அனுப்பி வைப்பார்.
இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்குத் தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரெங்கனாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. ஈஸ்வரனிடமும், அண்ணன் அரங்கனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் சமயபுரம் மகமாயி மட்டும்தான். அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரத்தாளுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூக்கள் சூட்டப்படுகின்றது. சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் சிறப்பான முறையில் நடைபெறுகின்றது.
சமயபுரத்து மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்:
உலக நன்மைக்காகவும் இக்கோயிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். நம்முடைய நலனுக்காக அம்மனிடம் குறைகளைச் சொல்லி விமோசனம் கேட்கிறோம். ஆனால் நமக்கு நல்லது நடக்கப் பரமசிவனிடம் வேண்டிக் கொண்டு சமயபுரத்து அம்மன் தவம் இருக்கிறாள்.
சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்குத் தினந்தோறும் ஆறு கால பூஜையில், ஆறு விதமான தளிகையும் நைவேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே 'தளிகை' என்று சொல்வார்கள். ஆனால் பச்சை பட்டினி விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருபத்தி எட்டு நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை (மாலை வேளை) பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள். இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.
பூச்சொரிதல் திருவிழா:
உலக மக்களுக்காகப் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் அம்மனை குளிர்விப்பதற்காகக் கூடை கூடையாக மலர்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு விழா நடத்துவார்கள். இதைத் தான் பூச்சொரிதல் விழா என்கின்றனர். மாரியம்மனின் அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வரும் பூக்களே அம்மனுக்கு முதலில் அர்ப்பணிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்குச் சாத்தப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காரிக்கப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். மாரியம்மன் பச்சை பட் டினி விரதம் நிறைவு செய்யும் நாளில், சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி (9.3.2025) தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை கோயில் கொடிமரம் முன்பு, விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையைச் சுமந்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து வர இருக்கின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புறநகர்ப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நறுமண பூக்களை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை இந்த விரத காலம் உள்ளது. இந்த இடைப்பட்ட நாளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா நடை பெறும்.
தன்னை வழிபடும் பக்தர்களின் நலனுக்காகப் பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுரத்தாளை வணங்கி அவளின் பேரருளைப் பெறுவோம்..!!
Leave a comment
Upload