தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி ...! புதுவை ரா ரஜனி  ஓவியங்கள்: மணி ஸ்ரீகாந்தன் 3.

2025022907582219.jpg

,"உலகத்திலேயே சொந்த வீட்டில, ஒரு கேடியை வெச்சு கன்னம் வைக்கிற ஆளை இப்பதான் பாக்கிறேன் பெருசு...!" - என்றான் ஹாஃப் பிளேடு கருணாச்சலம். அவன் கையில்

உலகத்திலுள்ள அத்தனை டூப்ளிகேட் சாவிகளும் இருந்தன.

"சீக்கிரம் ஜோலியமுடி நைனா..." என்றார் சுப்புசாமி. "பீரோவைத் திறந்த உடனே அப்பால ஒத்திக்கோ...!" ,- கொஞ்சம் பயத்தோடு உஷாராக அவனிடம் அறிவுறுத்தினார். 'பயல் கொஞ்சம் ஏமாந்தா லவடிக்கிட்டுப் போயிடுவான்...!'.

"என்னியப்பத்தி உனக்குத் தெரியாதா நைனா? தோஸ்த்துக்கு தோஸ்த். தொழிலுக்குத் தொழில்! வேலை முடிச்சதும், எனக்கு தரவேண்டிய கிஸ்தியை குடு, நான் போய்கினே இருப்பேன்...!"

"ஆமா... பாட்டிமாக்கு தெரியாம பெரிய நெக்லஸை எடுக்கப் போறே. ஏதாவது சின்ன வீடு செட் பண்ணி இருக்கியா பெரிசு?"

"ஜல்தி ஜல்தி...!" என்றார் தாத்தா.

மூன்றாவது நிமிடத்தில் படீரென்று திறந்தது பீரோ. பாட்டியின் பிரத்தியேக பீரோ.

திறந்த பெட்டகத்திலிருந்து கும்மென்ற வாசனை எழும்பியது. எண்ணற்ற வண்ணங்களில் வகை வகையான பட்டுப் புடவைகள், நிறைய வெள்ளிச் சாமான்கள், சில பரிசுப் பொருட்கள், பதக்கங்கள். சுப்புசாமி அவசர அவசரமாய் லாக்கரைத் திறந்தார். இடுங்கிய கண்களுக்குள் ஒரே இருட்டாய் தெரிந்ததால் லாக்கருக்குள் கையை விட்டு அந்த பெரிய நெக்லஸ் பெட்டியை எடுத்தார். பொருளை எடுத்துக் கொண்டு மீண்டும் காலி பெட்டியை உள்ளே வைத்தார்.

கருணாச்சலம் அசந்து விட்டான்!

"யோவ், நீ படாகில்லாடி. இந்தாகாண்டி பெரிய மாலையை அடிக்கப்போறே. மாட்டினா பாட்டி உன்னை ஜென்மத்துக்கும் கும்மாங்குத்து குடுக்கும்...!" என்றான்.

"சரி, சரி சீக்கிரம் பழையபடி பீரோவைப் பூட்டு...! என்றார் தாத்தா. பிளேடு மறுபடியும் கதவைச் சாத்தி மூடினான்.

ஜிப்பாவில் கைவிட்டு இரண்டு 500 ரூபாய் தாள்களை எடுத்து, "இந்தா சில்லறை இல்லை. 200 ரூபாவை திருப்பிக் கொடு...!"

கருணா கருணையே இல்லாமல் ஆயிரம் ரூபாயை அப்படியே தனது கைலி பெல்ட்டில் வைத்துக் கண்டான்.

"நைனா ஜோலி சாதாரண ஜோலி இல்ல. மிஸ்டிக் ஆட்சினா படா பேஜாரா பூடும்...!"

"சரி சரி கிளம்பு...!"

"ரொம்ப தலைவலியாகீது. கொஞ்சம் சுடு தண்ணி போட்டுக் கொடு...!

"சரி இரு...!" என்று அவனை உட்கார வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்று சுடு தண்ணீர் போடத் தயாரானார் தாத்தா.

அவர் தலை மறந்ததுமே சடார் என்று எழுந்த கருணாச்சலம், மறுபடியும் சாவி போட்டு பீரோவைத் திறந்தான். கையில் வந்த சில வெள்ளிப் பொருட்களை மடியில் மடித்துக் கொண்டான்.

சுப்புசாமி சுடு தண்ணீரோடு வந்தபோது, பிளேடு எஸ் ஆகியிருந்தான்.

நெக்லஸை ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மதன்லால் சேட்ஜியைப் பார்க்க விரைந்தார் தாத்தா.

*****

பாட்டி, போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவள், அந்த ஓமவள்ளி செடி தொட்டி அருகில் புதிதாக, விரும்பத்தகாத வஸ்து ஒன்றைக் கண்டாள்.

*****

ஒரு மணி நேரம் கழித்து, பூனையொன்று மெல்ல உள்ளே நுழைந்தது. அது ஒன்றுமே தெரியாததுபோல் சோபாவில் களைத்து அமர்ந்தது. உஸ் என்று கைகளால் விசிறிக் கொண்டது...!

,*****

பாட்டி அமைதியாகக் கவனித்தாள். 'சம்திங் பிஷ்ஷி' என்று மனம் சொல்லியது.

வெளியே சைரன் அடித்ததுபோல சப்தம். யாரோ தட தடவென்று கதவைத் தட்டினார்கள்.

(அட்டகாசம் தொடரும்...)