தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் -  இந்த வார பறவை புள்ளி ஆந்தை ப ஒப்பிலி 

20250229064745809.jpeg

நம்மில் பலருக்கும் ஆந்தை என்றாலே ஒரு அல்ர்ஜி. பெரும்பாலானவர்கள் ஆந்தை என்பது ஒரு அபசகுனத்தின் அடையாளம் என நினைக்கிறார்கள். ஆந்தை இனங்கள் விவசாயியின் நண்பர்கள் என்று தான் கூற வேண்டும் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களை எடுத்து செல்லும் இந்த வயல் எலிகளை உணவாக உட்கொண்டு விவசாயிகளுக்கு உதவி புரியும் இந்த ஆந்தைகளை வேறு எப்படி அழைப்பது.

மிகவும் சிறிய அளவிலான ஒரு பறவை இந்த புள்ளி ஆந்தைகள். பெரிய வட்ட வடிவிலான முகம், முன்னோக்கியே உறுத்து பார்க்கும் மஞ்சள் நிற கண்கள். இதுதான் இந்த ஆந்தையின் அடையாளம், என்கிறார் பறவையின ஆராய்ச்சியாளர்களின் தந்தை சலீம் அலி.

மரங்களில் உள்ள சிறிய பொந்துகளே இந்த ஆந்தைகளின் இருப்பிடமாகும். அந்தி பொழுதுகளிலும், இரவு நேரங்களிலும் மட்டுமே வெளியில் வரும். பரவலாக இருக்கும் இந்த ஆந்தைகளை அவ்வளவு எளிதாக காண முடியாது. மனித நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே வசிக்கும் இந்த ஆந்தைகள் என்கிறார் சலீம் அலி.

காலை பொழுதுகளில் ஜோடியாக அணைத்துக்கொண்டு பொந்துகளில் வசிக்கும் இந்த பறவையினம். தங்களை யாராவது பார்க்கிறார்கள் என சந்தேகமடைந்தால், தன் இருப்பிடத்திலிருந்து பறந்து சென்று வேறு மரத்தில் அமர்ந்து கொண்டு தன்னை நோட்டம் விட்டவர்களை கண்காணிக்கும் குணம் கொண்டவை.

வண்டுகள், பூச்சி வகைகள், சிறிய பறவைகள், எலிகள், ஓணான்கள், மற்றும் பல்லி வகைகளே இவற்றின் முக்கிய உணவாகும். இந்த வகை ஆந்தைகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை. ஒரு சமயத்தில் மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை ஈனும். ஆந்தை குஞ்சுகள் வந்த பின் ஆண் பெண் என இரண்டு மாக சேர்ந்தே குஞ்சுகளை வளர்க்கும் குணம் கொண்டவை என்கிறார் சலீம் அலி.

கடந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்றிருந்த பொழுது பறவைகள் குறித்து விளக்க வந்த வனத்தடுப்பு காவலர் திடீரென ஒரு மர பொந்தை சுட்டிக்காட்டி, உள்ளே ஒரு ஜோடி புள்ளி ஆந்தைகள் இருக்கிறது பாருங்கள் என்றார். மிகவும் இணக்கமான ஜோடியாக அமர்ந்திருந்த அவற்றை பார்த்ததை மறக்க முடியாது.

அடுத்த முறை ஆந்தையைப் பார்த்தால் திகில் சினிமா டைரக்டர்கள் விரும்பி உபயோகிக்கும் ஆந்தை படங்களை புறக்கணித்து, விவசாயிகளின் நண்பனாக பார்க்கவும்.