தொடர்கள்
புத்தக விமரிசனம்
கழுகு. - ப.ஒப்பிலி

20250227074924681.jpegகாட்டின் அனுபவங்களைச் சுவை படக் கூறும் புத்தகங்களில் இது சற்றே மாறுபட்ட ஒன்று. காரணம், சந்துரு தனது கழுகு (பிணம் தின்னிக் கழுகு) ஆய்வில் நிகழ்ந்தவற்றை தொகுத்து வழங்கி உள்ளார்.

அவற்றில் காட்டு விலங்குகளுடன் நிகழ்ந்த சந்திப்புகளும் உள்ளன; பழங்குடி மக்களுடன் நடத்திய நேர்காணல்களும் உள்ளன; காட்டின் நிலப் பரப்பில் நிகழ்ந்த மாற்றங்களைக் குறித்தும் உள்ளன. முனைவர் ஜான் சிங் மற்றும் ரஞ்சித் டானியல் தங்களது முன்னுரைகளில் குறிப்பிடுவது போல இந்த அனுபவங்கள், ஆய்வில் அவரது முனைப்பையும், கழுகுகளைப் பற்றிய அறிவையும், நிலப்பரப்பை பற்றிய அறிவையும் காட்டுகின்றன.

குறிப்பாக, அரைக்கடவில் யானைகளின் இடையே புகுந்து தப்பி வருவதும், புலியை ஆடிக்கொம்பை அருகே சந்திப்பதும், நிச்சயமாக சிலிர்ப்பூட்டும்! அதே போல, பழங்குடிகளின் பட்டறிவைப் பற்றிப் பேசும் போது அவரது கரிசனம் புரியும்; பழங்குடி காவலர்களின் நிலை குறித்த அவர் கவலை நம்மையும் பற்றும்;

அம்மிணி அம்மாவின் இயற்கையோடு இணைந்த வாழ்வை படிக்கும்போது இயற்கையோடு ஒன்றிய வாழ்வு என்றால் என்ன என்று விளங்கும். அதுதான் பாரதி பாஸ்கரை இது குறித்துப் பேச வைத்தது! இப்படி பலதரப்பட்ட காட்டுடன் தொடர்புள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், காட்டின் இயல்பைப் புரிந்து கொள்ளவும், இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கருவி என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக, கொற்றாட குட்டனுடன் கொரதானி மந்துவில்; நாகராஜ் அய்யாவுடன் அல்லி மாயாரில்; ருத்ரனுடன் புதுக்காட்டில்; எனப் பல பழங்குடிப் பெரியவர்களுடன் செய்த நேர்காணல்கள் இந்த வனப் பிரதேசத்தின் பண்டைய இயல்பு, கழுகுகளின் எண்ணிக்கை, அயல் தாவரங்களினால் பாதிப்பு குறித்து நன்கு அறிந்து கொள்ள உதவியது எனப் புரிகிறது.

பழங்குடிகளின் தொன்று தொட்டு வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இயற்கை அறிவு எவ்வாறு தற்போது சிதைந்து விட்டது என்பதையும் அவர் ஒரு சில தலைப்புகளில் பேசுவது இயற்கைப் பாதுகாப்பில் நாட்டமுள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நல்ல பாடம் தரும். எப்படி இந்த பாரம்பரிய இயற்கை அறிவைப் பாதுகாக்கத் தவறி விட்டோம் என்று உணர்த்தும்.

இப்படி பல கோணங்களில் காட்டின் இயல்பை வேறு யாரும் சித்தரித்ததில்லை என்றே நினைக்கிறேன்.