தொடர்கள்
சினிமா ஸ்பெஷல்
பிரபலங்களை நிம்மதியாக விடுங்கள் -மரியா சிவானந்தம்

20250228212051669.jpg

சினிமா அல்லது அரசியல் இரு துறைகளும் மக்களின் அன்பைப் பெற வாய்ப்புள்ள துறைகள்.

மக்களின் அபிமானம் புகழாக உருவெடுக்க இரு துறைகளிலும் பெரிதும் உழைக்க வேண்டும். புகழுடன் செல்வமும் வந்து சேரும். இவை இரண்டும் சுலபமாக வராது. அவை வந்த பின் தக்க வைக்க மேலும் உழைக்க வேண்டும் .

இவ்வாறு உழைத்து, புகழ் உச்சியில் ஏறி, கொடி ஏற்றுபவர்கள் அதற்கென ஒரு விலை தந்துக் கொண்டு இருக்கிறார்கள். உலகமே அண்ணாந்துப் பார்க்கும் உயரத்தில் இருப்பவர்கள் , பொது சொத்தாகி விடுகிறார்கள்.அவர்களது வாழ்க்கையைத் திறந்துப் பார்க்க எல்லோரும் ஆர்வம் கொள்கிறார்கள்.

அவர்கள் தனியாகவோ அல்லது குடும்பத்தாருடனோ , சாதாரண மனிதரைப் போல விருப்பப்படி செல்ல முடியாது. ஒரு கோவிலுக்குச் சென்றாலும் அவ்ர்களைக் கேமராக்கள் துரத்திக் கொண்டே செல்லும் . இன்பச் சுற்றுலா, கடைவீதி எங்கேயும் தன்னிச்சையாக செல்ல முடியாது. எம்ஜியார் ,சிவாஜி , ரஜினி , கமல் என்று தொடங்கி நேற்று திரை வானில் முளைத்த புதிய நட்சத்திரம் வரை யாரும் மீடியாவின் கண்களில் இருந்து தப்ப முடியாது

வாழும் போது மட்டும் அல்ல அவர்கள் சாவிலும் அவர்கள் விரும்பும் தனிமை அவர்களுக்கும் அவர் தம் குடுமபத்தினருக்கும் கிடைப்பதில்லை என்பது பெரும் சோகம்.

சமீப காலங்களில் பிரபலங்களின் மறைவின் போது கேமராக்கள் அவர்கள் வீட்டின் உட்புறம் வரை சென்றுபெற்றோரும் , உறவினர்கள் அழுவதை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் புகைப்படமும் ,வீடியோக்களும் எடுத்து உடனுக்குடன் வெளியிடுவதைக் காண முடிகிறது.

அது மட்டும் அல்ல. சாவு வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் மைக்கை நீட்டி கருத்து கேட்பதை ஒரு சடங்காகவே நடத்தி வருகின்றன சானல்கள். அவர்கள் குரல் கம்ம , கண்ணீர் மல்க கூறுவதை எல்லாம் வெளியிட்டு காசு பார்ப்பது , லைக் வாங்க துடிப்பது எல்லாம் எத்தனை மோசமான யுக்தி என்றே தெரியவில்லை

20250228212119877.jpg

எஸ்பிபி , விவேக் , விஜயகாந்த், பவதாரிணி போன்ற பிரபலங்கள் மறைவின் போது இறுதி சடங்குகள் வரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சமீபத்தில் மறைந்த மனோஜ் பாரதிராஜா இறப்பில் இன்னும் ஒரு படி மேலே போய் அவர் ஏன் ஒரு நடிகராக அல்லது இயக்குனராக வெற்றி பெறவில்லை என்று "கருத்தாய்வு" நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஊடகத்தினர்.

20250228212247224.jpg

மின்மயானத்தில் தளர்ந்த நடையும், உடைந்த குரலுமாய் ஒரு குழந்தையைப் போல அழுதுக் கொண்டு வந்த பாரதிராஜாவையும், தன் தந்தைக்கு இறுதிச் சடங்குச் செய்யும் அவர் மகளையும் திரும்ப திரும்ப காட்டிக் கொண்டே இருக்கின்றன இந்த ஊடகங்கள்.

சாவு வீட்டில் கேமராக்கள் சுற்றிச் சுற்றி அலையும் அவலமும் , மொபைல் போன்கள் படம் பிடிக்கும் அவசரமும் அவர்களுக்கு எவ்வளவு சங்கடத்தை உளைச்சலை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

பிரபலமாக வாழும் போது தந்த விலையை விட மரணத்தில் மிகப்பெரிய விலையைத் தருகிறார்கள் இவர்கள். அஜித் அவர் அப்பா இறந்த போது ,'இது எங்கள் தனிப்பட்ட குடும்ப நிகழ்வு , இதில் மீடியாக்களுக்கு இடம் இல்லை " என்று உறுதியாக தெளிவு படுத்தினார். இவ்வாறு எல்லோரும் செய்ய முடிவதில்லை.

பிரபலங்கள் மனிதர்கள் தாம் . எல்லா மனிதர்களைப் போலவே பாச உணர்ச்சி மிக்கவர்கள் தாம். அவர்கள் நேசித்த மகனோ , மகளோ ,கணவரோ , மனைவியோ இல்லாத போது ஏற்படும் அதிர்வில் இருந்து மீளும் முன்னமே அவர்களிடம் மைக்கை நீட்டுவதும் , வீடியோ எடுப்பதும் பண்பாடு இல்லாத செயல் . அதுவும் உள் வீடு வரை ஊடுருவிச் செல்வது அநாகரீகத்தின் உச்சம்.

உறவினை இழந்தவர்களை அழ விடுங்கள். கதறி அழ தனிமையைக் கொடுங்கள். தம் திறமைகளைக் கொண்டு நம்மை மகிழ்வித்த அந்த நல்ல உள்ளங்கள் அமைதி அடைய , நாம் நேரில் ஆறுதல் சொல்ல முடியவில்லை என்றாலும் அவர்கள் தனிமையைக் குலைக்கும் செயலைச் செய்யாமல் இருப்பது நம் அன்பைக் காட்டும் வழி.அவர்கள் துயரத்தை நம்மால் குறைக்க இயலாது என்றாலும் ,இரட்டிப்பு ஆக்காமல் செய்ய முடியும்.

பிற நாடுகளில் இருப்பது போல நம் நாட்டிலும் பிரபலங்களின் "பிரைவசி'யை மதிக்கும் சட்டங்களை அமல் படுத்த வேண்டும் என்று பேசியும், எழுதியும் வருகிறோம். அது நடக்க வேண்டும் .

பிரபலங்கள் நிம்மதியாக அவர்கள் வாழ்வை வாழ விடுங்கள். வாழ்க்கை முடியும் போது அமைதியாக போகவும் விடுங்கள்