ஒருநாள் மாலை வேளையில் கலெக்டர் பங்களாவை ஒட்டியிருந்த விருந்தினர் இல்லத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தங்கியிருந்தார். அவர் அடுத்த சில நிமிடங்களில் சென்னைக்கு புறப்பட வேண்டும், எல்லா நிருபர்களும் பேட்டிக்காக காத்திருந்தார்கள், ஆனால் அவனுக்கு தெரியும் சட்டசபை நடக்கும் போது மந்திரிகள் பேட்டி தரமாட்டார்கள் என்பது. இருந்தாலும் மற்ற நிருபர்களுடன் அங்கேயே இருந்தான்.
அப்போது கலெக்டரும், போலீஸ் கண்காணிப்பாளரும், மந்திரியின் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பினார்கள். இருவரும் ஒரே காரில் ஏறி எங்கோ சென்றார்கள். சம்பிரதாயப்படி மந்திரிக்கு அவர்கள் இருவரும் விடைகொடுக்கவில்லை.
எங்கே ஏதோ நடந்திருக்கிறது என்று அவனது மோப்ப உணர்வு சொன்னது. ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அந்தக் காரை பின்தொடர்ந்தான். திசை மாறிவிடக்கூடாது என்பதற்காக பண்ருட்டி, வடலூர், விருத்தாசலம் என்று ஊர், ஊராக விசாரித்துக் கொண்டு பின்தொடர்ந்தான். கார் பெண்ணாடம், அருணா சர்க்கரை ஆலைக்கு சென்றதை அறிந்துகொண்டு, அங்கே செல்வதற்குள் கார் திரும்பிவிட்டது. கலெக்டர், எஸ்.பி. கண்ணில் படாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தான். அந்த இருவரும் பெண்ணாடம் காவல் நிலையத்திற்குள் சென்றதை அறிந்தான். சந்தித்தால் சரியான தகவல் தரமாட்டார்கள் என்பதை அறிந்து, ஸ்கூட்டரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு டீக்கடையில் பிற வாடிக்கையாளருடன் சேர்ந்து நின்று கொண்டிருந்தான். அப்போது, டீ குடிப்பதற்காக கலெக்டரின் டிரைவர் அங்கு வந்தார்.
அவரிடம் தகவல் கேட்டபோது அவர், ‘‘யாரிடமும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அருணா சர்க்கரை ஆலையில் கரும்புக் கழிவு (மொலாசஸ்) தொட்டிகளை சீல் வைத்து விட்டார்கள். ஏதோ பிரச்சனை, நான் சொன்னதாகத் தெரிய வேண்டாம்’’ என்றார். இவன் டிரைவரைப் பார்த்து, நான் இங்கு வந்ததை கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள கொத்தட்டை என்ற கிராமத்திற்குச் சென்றான்.
அந்த கிராமத்து பெரியவர் மு.ஆறுமுகம், சர்க்கரை ஆலையின் டைரக்டராக இருந்தவர். அவரிடம் கரும்புக் கழிவிற்கும், கலெக்டருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான். அவர் சொன்னார், ‘‘கலெக்டருக்கும் சர்க்கரை ஆலைக்கும் பிரச்சனை வந்தால், கரும்புக்கழிவில் கைவைப்பார்கள். அதனால் மத்திய கலால் துறைக்கும், மாநில வருவாய்த் துறைக்கும் சில சமயங்களில் மோதல் வரும், இது வழக்கம் தான்’’ என்றார். தகவல்களைத் தெரிந்துகொண்ட அவன், நண்பர் வீட்டு தொலைபேசியைப் பயன்படுத்தி அலுவலகத்திற்கு ஒரு சிறிய செய்தியை டிக்டேட் செய்தான். மறுநாள் எல்லா பதிப்புகளிலும் அந்தச் செய்தி வெளிவந்தது.
கலெக்டரும் எஸ்.பி.யும் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கடலூர் நிருபருக்கு இது எப்படித் தெரிந்தது? என்பதை யோசித்து யோசித்து குழம்பிப் போனார்கள். ஸ்கூட்டரில் அவன் பின்தொடர்ந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்க முடியாது.
மறுநாள் காலை அவன் மறுபடியும் கொத்தட்டை கிராமத்திற்கு சென்று தன் நண்பரைப் பார்த்துவிட்டு, சர்க்கரை ஆலைக்குச் சென்றான். அங்கே கலால் துறை இன்ஸ்பெக்டருக்கு வளாகத்திலேயே வீடு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவரை, அவரது சிறிய அலுவலகத்தில் சந்தித்தான். அதற்குள் கலெக்டர், கலால் துறை அதிகாரியிடம் என்ன சொல்லியிருப்பாரோ தெரியாது, விபரங்களை தரத் தயங்கினார். உடனே அவரைக் குத்தும்படியாக ஒரு கேள்வியை வீசினான், ‘‘உங்களுக்கு சர்க்கரை ஆலை இங்கே வீடு தந்திருக்கிறது என்பதனால், நீங்கள் ஆலை சார்பாகவே நடந்து கொள்வீர்களா?’’
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத அவர், கொஞ்சம் கொஞ்சமாக கலால்துறை, மற்றும் ஆலை பற்றிய தகவல்களைத் தந்தார். ஒருகட்டத்தில் அவன் அவரை, மேலும் குத்தியபடி, ‘‘நீங்கள் ஒரு மத்திய அரசு அதிகாரி தானே? மாநில அரசின் சார்பாகவோ, சர்க்கரை ஆலை சார்பாகவோ, ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டை ஏன் எடுக்க வேண்டும்?’’ இந்த கேள்வியினால் நிலைகுலைந்து போன அந்த அதிகாரி, ஒரு கோப்பை எடுத்துக் காண்பித்தார். அதில் அவர் கலெக்டருக்கு எழுதிய கடிதத்தின் நகல் இருந்தது. படித்துப் பாருங்கள் என்றார் அவர். அப்படியே அந்தக் கடிதத்தை மனதில் பதித்துக் கொண்டான். பிறகு மேலும் சில கேள்விகளைக் கேட்டான். அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. அப்படி பதில் சொல்லாமல் இருந்தால், பிரச்சினையின் நுணுக்கங்கள் பற்றி நிருபர் எதுவும் எழுத மாட்டார் என்று நினைத்தார்.
ஆனால் அவனோ தன் செய்திக் கட்டுரையில், கலால் துறையின் அதிகாரியின் தரப்பை எடுத்துச் சொல்லி அவரது நிலைப்பாட்டையும் உணர்த்தினான். அந்த கட்டுரையின் நிறைவில் எட்டு கேள்விகளை வரிசையாக அடுக்கி, இந்தக் கேள்விகளுக்கு அதிகாரி பதில் எதுவும் சொல்லவில்லை என்றும் எழுதினான். செய்திக் கட்டுரை அப்படியே பிரசுரம் ஆயிற்று.
அதைப் படித்துப் பார்த்த கலால்துறை உயர் அதிகாரிகள், அந்த அதிகாரியை கடிந்து கொண்டார்கள். கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அவர் சொன்னார், ‘‘பதில் சொல்லாவிட்டால் நிருபர் எதுவும் எழுதமாட்டார் என்று நினைத்தேன்’’ என்றார். ‘‘மழுப்பலான பதிலை சொல்லியிருக்கலாம், கேள்விகள் பொதுவெளியில் வந்துவிட்டன. இதற்கு நம் துறை பதில் சொல்லியாக வேண்டும்’’ என்று அந்த மேல் அதிகாரி கடிந்து கொண்டிருக்கிறார்.
கலெக்டரும் நிருபர் மேல் இருந்த கோபத்தினால், நிருபர் செய்திகளை திரித்து எழுதியிருக்கிறார் என்று ஹிண்டு ஆசிரியருக்கு புகார் கடிதம் எழுதினார். வழக்கம் போல் கடிதத்தின் நகல் அவனுக்கு அனுப்பப்பட்டது. அவன் ஹிண்டு ஆசிரியருக்கு இப்படி எழுதினான்: ‘‘ஒவ்வொரு கட்டத்திலும் நான் நேரடியாக சென்று சேகரித்த தகவல்கள் இவை. இந்த வருடம் மே 2ஆம் தேதி கலால் அதிகாரி, கலெக்டருக்கு எழுதிய கடிதத்தை படித்தேன். கலெக்டர் பெண் அதிகாரி என்றாலும், அந்தக் கடிதம், ‘‘டியர் சார்’’ என்று தான் தொடங்கி இருந்தார். கடிதத்தின் நகலைப் பெற்றுப் பார்த்தால் உண்மை புரியும் என்று ஆசிரியருக்கு பதில் எழுதிவிட்டான்.
பின்னர் சர்க்கரை ஆலை, கலெக்டர் மீதும், கலால் துறை மீதும் ஒரு வழக்குத் தொடர்ந்த போது, இவனது செய்திக் கட்டுரை, ஆலையின் தரப்பில் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டது.
வேறு யாரும் எழுதாத செய்தியை இவன் விரிவாகவும், விரைவாகவும் கொடுக்க முடிந்ததிற்கு காரணம் உரிய நேரத்தில் சரியான ஊகம், செய்தி சேகரிக்க சென்றதின் வேகம், தகவல்களை சரிபார்த்துக் கொள்வதற்கான, நம்பகமான ஒரு நபரை நாடிய விவேகம், மூன்று தரப்புகளில் எதன் மீதும் சார்புநிலை எடுக்காத தன்மை.
முதல் நாள் மாலை மந்திரி பேட்டி கொடுக்க மாட்டார் என்று தெரிந்திருந்தும், அங்கு சென்றான், எதற்கும் இருக்கட்டுமே என்று. துப்பறிபவன் போல கலெக்டரின் காரை, ஸ்கூட்டரில் பின்தொடர்ந்தான். அதனால் தான் ஒரு முக்கிய தகவல் சிக்கியது.
கழுகின் கண்கள், பாம்பின் காதுகள், நாயின் மூக்கு, முயலின் கால்கள் & ஒரு நிருபருக்குத் தேவை. ஆனால் பிராணிகளின் குணங்கள் எல்லாம் செய்திகளை திரட்டுவதற்கே. ஆனால் எழுதும் போது ஒரு நிருபர், பாரபட்சமற்ற மனிதனாக இருக்க வேண்டும். அவன் அப்படித்தான் இருந்தான்.
Leave a comment
Upload