தொடர்கள்
ஆன்மீகம்
காப்பர் கம்பி முனி சிலைகள் - மாலா ஶ்ரீ

20250227075825221.jpeg

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை சேர்ந்த சுதை சிற்பக் கலைஞர் ஸ்ரீதரன் ஸ்தபதி. இவர், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் தனியார் கோயில்களில் அதிகளவு இரும்பு கம்பிகளாலான சுதை சிற்பங்களை ஸ்ரீதரன் ஸ்தபதி வடிவமைத்து தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார். இதன் அடுத்தகட்டமாக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதை வடிவ சிலைகளை வடிவமைக்கத் திட்டமிட்டார். அதன்படி, சுதை வடிவ சிலைகளை வடிவமைக்க இரும்பு கம்பிகளுக்குப் பதிலாக காப்பர் கம்பிகளை பயன்படுத்த ஸ்ரீதரன் ஸ்தபதி முடிவு செய்துள்ளார்.

20250227075929605.jpeg

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமத்தில் உள்ள மன்னாதீஸ்வரர் சமேத ஸ்ரீ பச்சையம்மன் கோயில் திருப்பணிகளில் ஸ்ரீதரன் ஸ்தபதி மேற்கொண்டார். அக்கோயில் வளாகத்தில் தலா 100 கிலோ எடையிலான காப்பர் கம்பிகள் மூலமாக 12 அடி உயரத்தில் வால்முனி, 18 அடி உயரத்தில் செம்முனி மற்றும் 10 அடி உயரத்தில் சங்கிலி முனி என மொத்தம் 3 பிரமாண்ட முனி சிலைகளை ஸ்ரீதரன் ஸ்தபதி வடிவமைத்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட அளவில், முதன்முறையாக நூற்றாண்டுகளுக்கும் மேலாக உறுதியுடன் நீடிக்கும் வகையில் காப்பர் கம்பிகளாலான 3 பிரமாண்ட முனி சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

20250227075846537.jpeg

இதுகுறித்து மல்லை சுதை சிற்பக் கலைஞர் ஸ்ரீதரன் ஸ்தபதி கூறுகையில், ‘‘காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் ஸ்ரீ பச்சையம்மன் கோயில் திருப்பணிகள் அனைத்தும் பழமை மாறாமல், அக்கால சுண்ணாம்பு கலவை சிற்பங்களைப் போல் தத்ரூபமாக, அதே பாணியில் சிமென்ட் கலவையால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இச்சிலைகள் புயல், இடி மின்னலுடன், சூறாவளி காற்று போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களைத் தாங்கி நிற்கும் வகையில் அமைந்துள்ளது. இவை அனைத்தும் நூற்றாண்டுகள் பல கடந்து நிலைத்து நிற்கும். இந்த 3 சுதை வடிவ சிலைகளை வடிவமைக்க, தலா 100 கிலோ காப்பர் கம்பிகள், 300 மூட்டை சிமென்ட் கலவை போன்றவற்றால் உருவாக்கப்பட்டு உள்ளது.

இக்கோயிலில் கடந்த 16-ம் தேதி மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற காப்பர் கம்பிகளை பயன்படுத்தி சுதை வடிவ சிற்பங்கள் மற்றும் சிலைகளை வடிவமைக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன்!’’ என்று சுதை சிற்பக் கலைஞர் ஸ்ரீதரன் ஸ்தபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.