தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 12. நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய் - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

2025021501350298.jpeg

(ஹிந்து ஆசிரியர் மறைந்த கஸ்தூரி)

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பொற்காலம் என்பது பஞ்சாப்காரரான குன்ஷன்லால் டண்டன் என்பவர் சேர்மனாக இருந்த ஐந்து வருடங்கள். மாவட்ட ஹிண்டு நிருபராக நெய்வேலியில் வசித்த காலம் அவனுக்கும் பொற்காலமே. ஏனென்றால் நன்றாகப் பழகும் குன்ஷன்லால் டண்டனிடமிருந்து அவன் நிறையவே கற்றுக் கொண்டான்.

அவரது சாதனைகள் அவரை பேசப்படும் நிர்வாகியாக மாற்றின. தன் நெய்வேலி பதவிக்கால சாதனைக்காக ‘பத்மபூஷன்’ விருது பெற்றார் அவர்.

பணியில் சேர்ந்த புதிதில் அவர் ஊழியர்களின் பதினோரு நாள் வேலை நிறுத்தத்தை சந்தித்தார். ஆனால் பேச்சு வார்த்தை மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைத்தார். இதையெல்லாம் அவன் கூர்ந்து கவனித்து வந்தான்.

வேலை நிறுத்த காலத்தின் அவன் நிர்வாகத்தின் நிலைப்பாட்டையும், தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளையும் நடுநிலையில் இருந்தே எழுதினான். இருதரப்பினரும் அவனை மதித்தார்கள்.

சமரச பேச்சு வார்த்தையின் போது நிறுவனம் லாபம் சம்பாதித்தால், கோரிக்கைகள் ஒவ்வொன்றாக ஏற்கப்படும் என்று சொல்லி தொழிற் சங்கங்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் சேர்மன் டண்டன். வாக்கு கொடுத்தபடியே லாபம் சம்பாதிக்கும் முனைவுகளில் இறங்கினார்.

டண்டன் பதவியேற்ற போது நிறுவனத்தின் கடன் சுமை ரூ.58 கோடி, ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் பதவி விலகிச் சென்றபோது, கடனை ஈடுகட்டிவிட்டு சேர்த்து வைத்த தொகை ரூ.150 கோடி. பணம் மட்டுமல்ல, அவர் வளாகத்தில் புதிய ஆடிட்டோரியம், ஸ்டேடியம், புதிய விருந்தினர் இல்லம், புதிய குடியிருப்புகள் என்று பல வசதிகளைச் செய்து தந்தார். நெய்வேலியின் பெருமை வெளியே தெரியவந்தது. மின்சார உற்பத்தி, சுற்றுப்புற சூழல், இயந்திரங்களில் இந்தியமயம் மற்றும் பொதுநிர்வாகம் ஆகிய நான்கு துறைகளில் அவர் காலத்தில் NLC தேசிய விருதுகள் பெற்றது. அப்போது புதுச்சேரியில் இருந்த ஆல் இண்டியா ரேடியோ டைரக்டர் B.R.குமார், NLC சேர்மன் டண்டனை ஹிண்டு நிருபர் தான் பேட்டி காணவேண்டும் என்று விரும்பினார். அவனை அணுகி அதுபற்றிக் கேட்டார். அவன் தன் எடிட்டர் அனுமதித்தால் தான் செய்ய முடியும் என்று கூறினான். மறுநாள் நிர்வாக ஆசிரியர் G.கஸ்தூரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘ஆல் இண்டியா ரேடியோவில் தன்னை பேட்டி காணச் சொல்கிறார்கள்’ என்று சொன்னபோது அவர், ‘கூடாது, வேறு யாருக்கும் நீ பணி செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார். இதை அவன் B.R.குமாரிடம் தெரிவித்தான்.

அவர், சென்னை சென்று நிர்வாக ஆசிரியர் G.கஸ்தூரியை சந்தித்து, ‘நான்கு துறைகளில் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது NLC அதற்கு முக்கிய காரணம் சேர்மன் G.L.டண்டன். அவரைப் பேட்டி கண்டு, அந்த பேட்டியை தேசத்தின் எல்லா வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்ப வேண்டும். சேர்மனை ஆங்கிலத்தில் பேட்டி காண விஷயம் தெரிந்தவர் உங்கள் நிருபர் தான். நெய்வேலியிலேயே அவர் வசிப்பதாலும், சேர்மனுக்கு நெருக்கம் என்பதாலும், அவருக்கு என்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்பது தெரியும். அவரும் சேர்மனும் நல்ல நண்பர்கள் என்பதால் பேட்டி சிறப்பாக அமையும். மேலும், அந்த வட்டாரத்தில் ஆங்கிலமும் தெரிந்து தொழில் நுட்ப விஷங்களையும் அறிந்தவர் உங்கள் நிருபர் தான். அவர் ஆல் இண்டியா ரேடியோவிற்காக பேட்டி காண நீங்கள் அனுமதிக்க வேண்டுமென்று’ கேட்டார்.

தன் பத்திரிகையின் நிருபர் தான் பேட்டி எடுக்க சரியான நபர் என்று கருதிய ஆல் இண்டியா ரேடியோவின் புதுச்சேரி டைரக்டர், சென்னைக்கே வந்து நேரில் கேட்டதால் நிர்வாக ஆசிரியர் கஸ்தூரி அதற்கு ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த நிருபரை தொலைபேசியில் அழைத்து, ‘நீ பேட்டி காணலாம். ஆனால் இந்த ஒரே ஒருமுறை தான்.’ என்று சொல்லிவிட்டார். அவன் தன் பத்திரிகை அல்லாத துறைக்கு பேட்டி கண்டது அதுவே முதல்முறை. அந்த பேட்டி சிறப்பாக அமைந்தது. ஆல்இண்டியா ரேடியோவின் பல நிலையங்கள் மறுஒலிபரப்பும் செய்தன.

G.L.டண்டன் அவன் மீது தனி பிரியம் காட்டினார். பிற மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், மத்திய செயலாளர்கள், வந்த போதெல்லாம் அவனையும் விருந்துக்கு அழைத்தவர். பேட்டிகளுக்கு ஏற்பாடு செய்தவர். அவருக்கு முந்திய காலகட்டம் வரை சுதந்திர தின விழாவும், குடியரசு தின விழாவும் சுரங்கத்தின் அருகே சிலர் மட்டும் கூடி நின்றபடி ஒரு சடங்காக இருந்தது.

டண்டன் அந்த இரண்டு நாட்களையும் ஒரு விழாவாக மாற்றினார். நகரத்தின் மையத்தில் இருந்த விளையாட்டு மைதானத்தில் விழாவை நடத்தினார். தானே சொற்பொழிவாற்றினார். அடுத்தடுத்த வருடங்களில் அவனை அழைத்து குறிப்புகள் கொடுத்து தன் பேச்சை தயாரிக்கும்படிச் சொன்னார். Speech Writing என்பதில் அதுவே அவனது முதல் அனுபவம். கருத்தரங்குகளில் அவரது உரையை தயாரிக்கும் பொறுப்பையும் கொடுத்தார். அவர் நன்றாகவே ஆங்கிலம் பேசுவார் என்றாலும் கூட.

நிறுவனத்தின் செய்திப் பத்திரிகை அதுவரை ஏனோ தானோவென்று ரயில்வே டைம் டேபிள் போல் NLC அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டு தனித்தனி பத்திரிகைகள் வர வேண்டும் என்று விரும்பினார். சென்னையில் அச்சடிக்கக் கொடுத்தார். அப்போது அவனும் சென்னையில் இருந்தான். அவனை அழைத்து Brown Coal, மின்மலர் என்ற இரண்டு பத்திரிகைகளையும் எடிட் செய்யச் சொன்னார். அதுவும் நிறுவன செய்தி பத்திரிகைகளைப் பொறுத்தவரை அவனது முதல் அனுபவம்.

அவர் அவனுக்கு தான் புதிதாக வாங்கிய பொருளாதாரம், நிர்வாகம் பற்றிய ஆங்கில நூல்களை பரிசளித்தார். அவற்றையெல்லாம் ரசித்து படித்தான். புதிய துறைகளில் தகவல் ஞானம் பெற்றான். அது அவன் பெற்ற ஞானத்தின் புதிய பரிமாணம். அதற்கு வாய்ப்பு கொடுத்த G.L.டண்டனை அவன் ஒரு ஆசானாகவே மதித்தான்.

அவர் கோல் இண்டியா நிறுவனத்தின் சேர்மனாக பதவி உயர்வு பெற்றுச் சென்ற காலத்தில் அவன் தனியாக சில நிறுவன பத்திரிகைகளுக்கு எடிட்டராக இருந்தான். டண்டன் அப்போது கோல் இண்டியாவின் செய்தி பத்திரிகையை ஆங்கிலத்திலும் இந்தியிலும் புதிய வடிவில் புதிய உள்ளடக்கத்துடன் வெளிவர ஆலோசகராக அமர்த்தினார். அப்போது அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா பேருரை ஆற்ற அழைக்கப்பட்டார். அவனை கல்கத்தாவிற்கு அழைத்து குறிப்புகள் கொடுத்து, தன் பட்டமளிப்பு விழா சொற்பொழிவை தயாரிக்கச் சொன்னார்.

விழாவில் அவர் சொற்பொழிவாற்றிய பிறகு அப்போதைய கவர்னர் S.L.குரானா, ‘உங்கள் சொற்பொழிவு அருமையாக இருந்தது’ என்றார். அப்போது டண்டன் அவனைச் சுட்டிக்காட்டி, “He is my speech writer; credit should go to him” என்றார். எவ்வளவு பேர் எழுதிக் கொடுப்பவனை இப்படி வெளிப்படையாகப் பாராட்டுவார்கள்? அப்போது அருகில் இருந்த அண்ணாமலைப் பல்கலைகழக இணைவேந்தர், ‘அவர் எங்கள் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்’ என்றார்.

தனக்கு ஞானமும் கொடுத்து, பெருமையையும் தேடித்தந்த டண்டனை அவன் ஆசானாகவே கருதினான். அவர் காலமாகும் வரை அவருடன் தொடர்பில் இருந்தான். அவரது வாழ்க்கை வரலாற்றையும் எழுதினான்.