மொழிபெயரப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார் பேராசிரியர் விமலா.
மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய "என்டே ஆணுகள் " என்ற சுயசரிதை புத்தகத்தை தமிழில் "எனது ஆண்கள் " என்ற தலைப்பில் மொழி பெயர்த்தமைக்கு விமலாவுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய விருது கிடைத்துள்ளது.
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் விமலா இந்த சாதனையை நிகழ்த்தி பெருமை பெற்றுள்ளார்.
நெகிழ வைக்கும் இப்பெருமைக்கு உரிமையானவரின் கதை இது. ஒரு எளிய பின்னணி யில் பிறந்து வளர்ந்தவர் விமலா. எட்டாக்கனியாக கல்வியைத் தொடர் போராட்டத்தால் எட்டிப் பறித்தவர். சுயமுன்னேற்ற ஏணியில் ஏறிக் கொண்டிருப்பவர் கரங்களில் இன்று சாகித்ய அகாடெமி விருது தவழ்கிறது.
கன்னியாகுமரி மாவத்தில்,குலசேகரத்தைச் சேர்ந்தவர் விமலா . இவரது அம்மா தனியாக இவரையும் , இவரது அக்காக்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கி உள்ளார். குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக அக்காக்கள் பத்தாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டு , வேலைக்கு அனுப்பப்பட விமலா ப்ளஸ் 2 வரை பள்ளி முடித்தார்.
கல்லூரிக்கு செல்ல முடியாமல் , வேலை செய்துக்கொண்டே தொலைதூரக் கல்வியாக , அண்ணாமலை பல்கலைக்கழக்த்தில் இளங்கலை , முதுகலை பட்டங்களை பெற்றார். தொலைதூர கல்வி என்பதால் , இவருக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன,தாமதிக்கப்பட்டன .
இறுதியில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக்த்தில் (JNU ) சேர்ந்து எம்.பில் முடித்து பின்னர் முனைவர் பட்டம் பெற்றார்.
ஜே என் யூ வில் அவர் படித்த போது இரண்டு மொழிகள் கட்டாயமாக படிக்க வேண்டிய போது, தமிழ் ,மலையாளம் என இரண்டையும் தேர்ந்தெடுத்து படித்து முனைவர் பட்டத்துடன் வெளியில் வந்தார். படிக்கும் போதே மலையாள மொழியின் சிறப்பில் ஈர்க்கப்பட்டு ஊன்றி படித்தார். தவிர அவருக்கு அப்போதே மொழிபெயர்ப்பில் ஆர்வம் பிறந்தது .
முதலில் கேரள எழுத்தாளர் சுஜாதனின் 'விவேகானந்தம் ' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர், பின்னர் நளினி ஜமீலாவின்,"என்டே ஆணுகள்" நூலை மொழி பெயர்த்து வெளியிட்டார் . இந்நூல் நளினியின் சுய சரிதை.ஒரு பாலியல் தொழிலாளியின் வலிகளை பதிவு செய்யும் இந்நூல். கேரளாவில் பெரும் எதிர்ப்பினை சந்தித்த நூல்.
"இந்த நூலில் உள்ள நேர்மை என்னை ஈர்த்தது " என்கிறார் விமலா.
இப்போது சாகித்ய விருது விமலாவைத் தேடி வந்துள்ளது விமலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னமும் வறுமை நிலையில் உள்ள தன் குடும்பத்தை உயர்த்த முனைப்புடன் இருக்கும் அவருக்கு இது பெரிய உந்து சக்தியாக அமைந்துள்ளது
தொடர்ந்து மொழிபெயர்ப்புத் துறையில் இயங்குகிறார் விமலா. தொல்காப்பியம் , குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களை மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
Leave a comment
Upload