"உமன்ஸ் பிராவா...?" என்று கேட்டார் சுப்புசாமி.
"விமன்ஸ் இரா...!" என்றாள் கோமுப்பாட்டி தலையில் அடித்துக்கொண்டு. தொடர்ந்து, "ஐ டோன்ட் வாண்ட் வேஸ்ட் மை ப்ரிசியஸ் டைம் வித் ஜீரோ பர்சன்ட் மூளை முட்டாள் மனிதரோடு...!" - என்றபடி பாட்டி மேசையின்மேல் வைத்த கடிதத்தைப் பரபரப்பாகத் தேடினாள்.
காணவில்லை.
'எங்கே வைத்தேன்?'
"இதுவா பார்...!" என்றார் தாத்தா.
மகாமகக் கும்பலில், அதோகதி எண்ணெய் வாணலியில் அவசரகதி வாழைக்காய் பஜ்ஜி மடித்துக் கொடுக்க வைத்திருக்கும் கிழிந்த காகிதத் துண்டுகளாய் அந்தக் கடிதம்!
"டோன்ட் யூ ஹாவ் மினிமம் சென்ஸ்? இப்படியா பெருச்சாளி கடித்து வைத்தமாதிரி கிழித்து வைப்பது? இந்தக் கடிதத்தின் வேல்யூ உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? இல்லஸ்ரேடட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங் என்னைப் பாராட்டி எழுதிய கடிதம்! அதனை விமன்ஸ் இரா பத்திரிகை அதிபருக்கு ஒரு காப்பி அனுப்ப நினைத்திருந்தது, ஒரு அடிமுட்டாள் மனிதரின் கையில் கிடைத்து சின்னா பின்னம் ஆகிவிட்டது...!"
"இன்னாடி ரொம்பத்தான் கூவுறே...?" என்ற சுப்புசாமி உள்ளுக்குள் 'விஷயம் பெரும் சங்கடத்தைதான் கிழவிக்கு ஏற்படுத்தி இருக்கிறது...' என்று நினைத்தார்.
'ஒரு சாதாரண...பழுத்துப்போன காகிதத்துக்கு இத்தனை கோபமா? அந்த குண்டு தாடிகார குஷ்வந்த் சிங் மிச்ச சொச்ச சொத்துக்களை இவளுக்கு எழுதி வைத்துவிட்டுப் போனதுபோல குதிக்கிறாளே?'
டெலிபோனின் சிணுங்கல்!
கோமு மடிசார் சரசரக்க, ஸ்டைலாய் நடந்து சென்று இலாவகமாய் ரிசீவரைக் காதில் பொருத்தியது அவருக்கு கிளுகிளுப்பாய் இருந்தது.
'என்ன கத்தினாலும் இந்தத் திமிரும் ஸ்டைலும் மனதை கொள்ளை கொள்ள வைக்கிறது. அப்படியே ஓடிப்போய் கட்டிக் கொள்ளலாமா...?'
என்று தாத்தா நினைத்தபோது,
வேலைக்காரி எர்சம்மா, அவளது அடையாளச் சின்னமான துடைப்பத்தோடு வந்து விட்டாள்!
"நோ நோ ஜஸ்ட் பார் தி இன்பர்மேஷன். விளம்பரங்கள் எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்கே தெரியும். மற்றவர்களுக்கான ஓர் ஆர்வத்தைத் தூண்டும் தாட்ஸ்... அதான் நோட்டீஸ் போர்டில் எனது அச்சீவ்மேண்ட் போஸ்டரை வைத்தேன். தட்ஸ் ஆல் மிசஸ் பொன்னம்மா டேவிட்! பட் ஐ ரியலி கைன்ட் ஆப் யூ... அண்டு தேங்க்ஸ் ஃபார் யுவர் அப்ரிசியேஷன்...!"
வைத்தாள் ரிசீவரை. மறுபடியும் அழைப்பு.
".....…................"
"ஓ யூ ஆர் வெல்கம் கௌசல்யா... எனக்கா பெருமை? நம்ம பா.மு.க.வுக்குதான் கிரெடிட்ஸ் ஆர் கோயிங்...!"
மறுபடியும்... அழைப்பு...வாழ்த்துகள்...!
"எர்சம்மா இன்னா மாய்மாளம் நடக்குது இங்கே? உன் எஜமானியம்மா பல்லக்குலே பவனி போகப் போறாளா...?"
வேலைக்காரி, நேற்றிரவு தூக்கிப் போட்டு தன்னை மிதித்த புருஷனின்மேல் மீத கடுப்பில் இருந்தாள்.
"உன்னை மாதிரி ஆம்பிளைகளுக்கு இன்னா சார் கவலை? நல்லா ஊர் சுத்தறீங்கோ...வரீங்கோ... வேலா வேலைக்கு நாஷ்டா... துன்றீங்கோ. பொம்பிளைங்க நாங்க நொந்து நூலாகுறோம்...!"
"சரியா சொன்னே எர்சம்மா...!
தண்டச்சோறு என்று சொல்லாமல் சொல்லிட்டே, சூப்பர்ப்...!" - பாட்டி படபடவென கைகளைத் தட்டினாள்.
"நானா தண்டம்? அதுவும் எர்சம்மா முன்னாலே...?"
'யூ ஹவ் ஸ்டாடர்ட் வித் எர்ஸ். நான் முடிச்சேன்...!"
"நான் தண்டச்சோறுன்னா, நீ என்ன லார்டா...?"
"உங்ககிட்டே பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம்னு பாக்கிறேன். லிஸன் மிஸ்டர், நான் ஒரு பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவி. இப்போ விமன்ஸ் இரா என்ற இங்கிலீஷ் மேகசினோட நியூலி அபாய்டன்ட் அசோசியேட் எடிட்டர்... இணையாசிரியர்...இது போதாதா?"
"ஆசிரியரா? எந்த எலிமெண்டரி ஸ்கூலுக்கு?" - வேண்டுமென்றே தெரியாததுபோல் கடுப்பேத்தினார்.
"இது என்ன பேப்பருங்க அம்மா? பெருக்கி போட்டுடவா...?"
"பாரு படிக்காத இல்லிட்டரேட் நீ. இருந்தும் பொறுப்பா நாலு பேப்பரைப் பார்த்ததும் கேக்கணும்னு தோணுது. ஆனா, இங்க ஒன்னு இருக்கு எர்சம்மா...அதுக்கு திமிர் அதிகம் ஆயிடுச்சு...!"
"யாருங்கம்மா...?"
"யாரோ...!" என்றாள் பாட்டி.
*******
"இதுக்குப்போயி அலட்டிக்கலாமா...?" என்று பாடினான் குண்டுராஜா.
"பிரச்சினை என்னன்னு சொல்லுங்க, தாத்தா. அது பிரச்சினையா இல்லையான்னு நான் சொல்றேன்...!"
அவனது கையில் பளபளவென்று கத்தை வழு வழு தாள்கள்...!
"என்னடா குண்டு அதுக்குள்ளே தேர்தல் பிரச்சார வண்ணத் தாள்களாடா? தளபதி விஜய் கட்சியா? உன் காட்டுலே எப்பொழுதும் பண மழைதான்...!"
"நீங்க வேற தாத்தா. என்னோட ஃப்ரெண்டு வடபழனியில் ஒரு புத்தகம் நடத்துறாரு. அதுக்கு வந்த அட்டைப் படங்கள். கொஞ்சம் கரெக்ஷன் போடணும்னு நண்பர் டிசைனர்கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னார்...!"
"வீட்டிலயும் புத்தகம். ரோட்டிலேயும் புத்தகமா...? எங்கே கொஞ்சம் காட்டு...?"
"முடியாது தாத்தா...வேணாம்...!" என்று நெளிந்து அவற்றை பின்னால் மறைத்துக் கொண்டான்.
அவன் கையில் தொங்கிய அட்டைப் படம் ஒன்றில் ஓர் அழகி, முந்தானை சரிய சகல மேனிகளையும் காட்டிக்கொண்டு வெட்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்...!
(குறும்பு தொடரும்...)
Leave a comment
Upload