"கற்றிலனாயினும் கேட்க" என்பது அதி ஆழமான பொருள் உள்ள மொழி.
நிறைய நூல்களைப் படித்து, நல்ல கருத்துக்களை அறிந்து சமூகத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பிடிப்பது நம்மால் முடியாத போது வள்ளுவரின் இந்த அறிவுரை உதவிக்கு வருகிறது,
நல்ல அறிஞர்களின் பேச்சுக்கள், கேட்பவர் மனதில் ஆழமான கருத்துக்களை விதைத்து சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வல்ல 'கதை சொல்லி' பூங்கொடி பாலமுருகன்அவர்களை விகடகவி இதழுக்காக நேர்காணல் செய்தோம்.
சென்ற வாரம் விடுபட்ட வினாக்களை இப்போது தொடுத்தோம்.
இதோ அவர் தரும் பதில்கள்
பள்ளி, கல்லூரி மாணவரிடையே உங்கள் கதை,பேச்சு வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு கதை சொல்லும் பொழுது, உடல் ,மொழி, மனம் சிந்தனை அனைத்திலும் ஒரு குழந்தையை நமக்குள் கொண்டு வர வேண்டும். அந்த சின்னஞ்சிறு மனிதர்களின் உயரத்திற்கு ஏற்றார் போல , நம் உயரத்தைச் சுருக்கிக் கொண்டு கதைகளைச் சொல்லும் போது மிகவும் ரசிக்கிறார்கள். அதுவும் பெரும்பாலான இடங்களில் நான் வேடமிட்டு கதை சொல்லும் பொழுது, அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
தொடர்ந்து கதைகளைக் கேட்கும் குழந்தை, ஒரு கட்டத்தில் வாசிப்பு என்னும் அடுத்த கட்டத்திற்கு நகரும். அதுபோல கதைகள் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை உணர்கிறேன். நான் சொல்ல வேண்டிய விஷயங்களை கதைகளாக அவர்களுக்கு கடத்தும் பொழுது அவர்களுள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
கல்லூரிகளில் பேசுவது அது ஒரு விதமான அனுபவம். அவர்களுடன் பேசும் பொழுது, அவர்கள் வயதிற்கு ஏற்ற மொழியில் ஒரு சக நண்பனைப் போல, அவர்களுக்கு கடத்த வேண்டிய விஷயத்தை ஆழமாகவும் உறுதியாகவும் நம் பேச்சில் வெளிப்படுத்த வேண்டும். அவர்களுடைய உடல் சார்ந்து , உணர்வு சார்ந்து மற்றும் எதிர்காலம் சார்ந்த கருத்துக்களை தரும் போது மிக ஆர்வமாக கவனித்துக் கலந்துரையாடல் செய்கிறார்கள். ஆண் பெண் உடல் சார்ந்த பிரச்சனைகளை நாம் பேசுகையில் அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது.
உங்கள் எழுத்துப் பணி பற்றி சொல்லுங்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு எழுத்தாளராக மாறுவேன் என்று நானே நினைத்து பார்த்ததில்லை. வாசித்த நூல்களைப் பற்றி பதிவிடுவதும், எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்களை 'கண்ணம்மாவின் கலாட்டாக்கள்' என்ற பெயரில் முகநூலில் பதிவிட்டு கொண்டு இருந்தேன்
நண்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் "கண்மணிகளின் கலாட்டாக்கள்" என்ற குழந்தைகளுடன் நான் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு முதல் நூலாக வந்தது. அதன்பின் குழந்தைகள் சார்ந்த உலகளாவிய திரைப்படங்களைப் பற்றி எழுதும் ஆவல் எனக்குள் தோன்றியது. அதன் வெளிப்பாடாக 'மந்திர கோட்' என்ற நூல் வெளிவந்தது. தொடர்ந்து 'இருவாச்சி சாமி, கால் முளைத்த மீன்' என்ற இரு சிறார் கதை நூல்களும், பெண்களின் முக்கிய பிரச்சினைக்களான மாதவிடாய் மற்றும் மார்பக புற்று பற்றிய சாவ்பாடி என்ற நூலை நானும் தோழி சரிதாவும் இணைந்து எழுதினோம்.பதின் பருவ குழந்தைகளைப் பற்றியான ஒரு தொடரை எழுதி ஈரோடு வாசல் மின்னிதழ் சார்பாக வெளி வந்துள்ளது .
பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய ' என்னைத் தொடாதே ' என்ற நாவல் தற்போது வெளிவந்திருக்கிறது. பதின் பருவக் குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பணியை காலம் எனக்கு கொடுத்திருக்கிறது. நிச்சயம் அதை நிறைவேற்றுவேன்.
உங்கள் சமூகப்பணி பெற்று தந்த அங்கீகாரம், விருதுகள் என்ன? உங்களுக்கு இப்பணி நிறைவைத் தருகிறதா ?
மேடை அமைப்பின் 'தஞ்சை பிரகாஷ் நினைவு விருது', 'அழ வள்ளியப்பா சிறப்பு குழந்தை இலக்கிய விருது', கலை இலக்கிய பெருமன்றத்தின் 'கதை சொல்லி விருது,' தமிழால் இணைவோம் அமைப்பின் 'தங்க மங்கை' விருது, திருப்பூர் சக்தி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்.
இவையெல்லாம் தாண்டி, கதை கேட்கும் நிறைய குழந்தைகளிடமிருந்து வரும் ' பூங்கொடி அத்தை நீங்க கதை சொல்றது ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ அத்தை' போன்ற பின்னூட்டங்களை விட மிகப்பெரிய அங்கீகாரமும் விருதும் வேறென்ன வேண்டும்?
உங்களைப் போல பலரும் இப்பணியில் ஈடுபட விரும்புகிறீர்களா?
காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம்.ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த கதைகளை கேட்டார்கள். வாழ்வியல் நெறிகள் அனைத்துமே அந்த கதைகளுக்குள் இருந்தன . பள்ளிகளிலும் கதைகளுக்கு என்று பாட வேளைகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருவது, நகர்புற வாழ்வு , பொருளாதார தேடல்கள், மதிப்பெண்கள் நோக்கி நகரும் கல்வி, தெலைக்காட்சி, அலைபேசி என்று பற்பல காரணிகளால் இன்று குடும்பங்களில் கதை சொல்லல் குறைந்து கொண்டு வருவது வருத்ததுக்குரியது.
இப்பொழுது வாசிப்பு அதிகரித்து வரும் சூழலில், சற்றே இதன் நிலை மாறி இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறந்த கதை சொல்லிகளாக மாற முடியும். அதிலும் குறிப்பாக பெண்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
கதைகள் குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து பயணிக்க ஒரு அற்புதமான பாலம். அந்தப் பாலத்தில் செய்யும் பயணம் கண்டிப்பாக நம் குழந்தைகளின் வாழ்வை மேம்பட்டதாக, நிறைவானதொரு மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை."
தன்னைப் போலவே பலரும் கதை சொல்லிகளாக மாறி , இளைஞர் சமுதாயத்துக்கு புது எழுச்சியைத் தர வேண்டும் என்று பூங்கொடி பாலமுருகன் விரும்புகிறார் . She is a real Game Changer ...
Leave a comment
Upload