தமிழ் மாதங்களில் நிறைவான பன்னிரண்டாவது மாதம் பங்குனி. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. இம்மாதத்தில் தாவரங்களில் புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது.
சிவபெருமான் பார்வதியைக் கைத்தலம் பற்றிய மாதம் என்பதால் திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெற்றது. அதனால் பல திருவிழாக்களும் கோயில்களில் நடைபெறும். இம்மாதத்தின் தெய்வீகச் சிறப்புகள் தன்னிகரற்றவை.
புராணங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து மங்கல விசேஷங்களும் பங்குனி மாதத்தில் தான் நடந்திருக்கின்றன இந்த மாதத்தில் நாம் செய்கிற சிறிய தானங்கள் கூட ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருவதாக ஞானிகள் புகழ்கின்றனர்.
பங்குனி மாதத்தில் குல தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்.
பங்குனி மாத முக்கிய விசேஷங்கள்:
காரடையான் நோன்பு, ஶ்ரீராம நவமி, பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.
காரடையான் நோன்பு:
பங்குனி மாத தொடக்கத்தில், வரும் முதல் விரத வழிபாடு.
இந்நோன்பு மாசி மாதம் கடைசியில் பங்குனி மாத முதல் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.( மாசியும், பங்குனியும் கூடும் வேளை என்று சொல்லுவார்கள்) கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.
மகத்தான கற்புக் கரசியான சாவித்திரி, இவ்வழிபாட்டினை மேற்கொண்டு யமனிடமிருந்து தனது கணவராகிய சத்தியவானின் உயிரினை மீட்டதால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் இடம் பெறும் நோன்பு சரடானது வழிபாடு முடிந்ததும் பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது. திருமணமான பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினையும் வழங்குவார்.
பங்குனி உத்திரம்:
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் தான் சிவன் பார்வதி, முருகன் தெய்வயானை, இராமர் சீதை, ஆண்டாள் ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் அவதரித்துள்ளனர்.
மஹாலட்சுமி பார்க்கவ மகரிஷியின் மகளாகப் பூமியில் பார்கவி என்னும் பெயரிலும், சுவாமி ஐயப்பனாக அவதாரம் எடுத்ததும், அர்ஜுனன் பிறந்ததும், ஶ்ரீ வள்ளி அவதரித்ததும் இந்த திருநாளில் தான்.
முருகப் பெருமான் சுவாமிமலையில் பிரணவ மந்திரத்தை உபதேசித்ததும், ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனைச் சிவன் உயிர்பிழைக்க வைத்ததும், மார்க்கண்டேயனுக்காகச் சிவன் காலனை தன் காலால் உதைத்ததும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான். இந்த நாளில் புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியில் உள்ள ஏழு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது.
அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதித்ததும், ஸ்ரீராமாநுஜர் திருமாலிடமிருந்து “உடையவர்” என்ற பதவியை பெற்றதும் இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.
முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது.
இன்றைய பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகும்.
ஸ்ரீராம நவமி:
மகா விஷ்ணு இராம அவதாரம் எடுத்த நாள் ஶ்ரீராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது. மனிதனாகவே வாழ்ந்து தர்மம், நீதி, நேர்மைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமர்.
ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டியதை உணர்த்துவதற்காகவே எடுக்கப்பட்ட அவதாரமே இராம அவதாரம். ஸ்ரீராம நவமி கோவில்களில் மட்டுமில்லாமல், அவரவர் வீடுகளிலும் முறையாகப் பூஜை செய்து கொண்டாடுவது வழக்கம்.
வசந்த நவராத்திரி:
அன்னை பராசக்திக்கு முறையான விரதத்தினை மேற்கொண்டு வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.அவை, சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என ஆண்டில் நான்கு நவராத்திரி விழாக்கள் அன்னையை வழிபட மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் முக்கியமானவை.
வசந்த நவராத்திரி என்பது பங்குனி அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமை திதி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். இந்த நவராத்திரி விழாவின் போது கோயில்களில் உற்சவங்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வட மாநிலங்களில் வசந்த நவராத்திரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடுவர். இதனை ‘சைத்ர நவராத்திரி’ என்றும் இதனை அழைப்பர்.
விஜயா ஏகாதசி:
பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா என்றால் வெற்றி என்பது பொருளாகும். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.
பொருளாதார முன்னேற்றம் அபாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஶ்ரீஇராமர் இவ்விரத்தை மேற்கொண்டே இராவணனை வெற்றி கொண்டு, சீதா தேவியை மீட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஆமலகீ ஏகாதசி:
பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர். ஆலமகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடப் புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், கோ (பசு) தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.
யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு):
தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் 'யுகாதி பண்டிகை". பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆன்மிக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு யுகம் துவங்கும் நாளையே நாம் யுகாதி எனக் குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் கலியுகம் துவங்கியதாகவும், பிரம்ம தேவர் தனது படைத்தல் தொழிலை ஆரம்பித்ததாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது.
இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் வீடு கட்டவும், புதிய தொழில்களை இந்த நாளில் பூஜை செய்து துவங்குவது வழக்கம். யுகாதி நாளில் நல்ல நேரம் பார்க்க வேண்டியதே கிடையாது என்பதால் இந்த நாளில் திருமணங்கள் கூட நடத்தப்படுவது வழக்கம்.
இத்தனை பெருமை மிகுந்த பங்குனியில் நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகள் நீங்கி, வாழ்வில் வெற்றி நம்மைத் தேடி வரும்!!
Leave a comment
Upload