எதை செல்வம் என்று சொல்வீர்கள் ?
பொன்னும் , பொருளுமா ? மாளிகையா? ,
உண்மை செல்வம் எதுவென்று நீங்கள் சொல்வீர்கள் ?
இவற்றில் எது வேண்டுமானாலும் நீங்கள் சொல்லக்கூடும்
நற்றிணை சொல்லும் செல்வம் எது தெரியுமா ?
"நம்மைச் சார்ந்திருப்பவரை துன்பத்தில் ஆழ்த்தாமல் காத்தல்" இதுவே பெருஞ்செல்வம் .
அந்தக் கணவன் பரத்தையை நாடி சென்று விட்டான். மனைவி பெருந்துன்பத்தில் தவித்தாள்.
ஒருநாள் கணவன் மீண்டு வந்தான்.
மனைவிக்கு அவனிடம் பேசவும் ,மீண்டும் உறவு கொள்ளவும் விருப்பமில்லை.
அவனிடம் கோபம் கொண்டு வெறுத்தாள்.
அவளது சினம் அவனை நிலைகுலைய செய்தது.
செய்வதறியாது கலங்கியவனுக்கு ஆறுதலாய் நின்றது தோழி.
தோழி , "நீ பெற்ற அனைத்தும் செல்வம் ஆகாது. உன்னை அடைந்தவரை பாதுகாப்பதுதான் உண்மையான செல்வம். இது உனக்குத் தெரியவில்லையே" என்றாள்.
அவள் கூறுகிறாள் :
"நீ எல்லா செல்வங்களையும் பெற்றவன் . அகன்ற , அழகிய வயலைக் கொண்டவன் நீ. நெல் அறுத்து அறுவடை செய்த பின் , உழுது ஈரமான அவ்வயலில் விதைக்கும் பொருட்டு , கடகப் பெட்டி (ஓலைப் பெட்டி)யில் விதைகளை எடுத்துச் செல்வர்.
வயலில் நெல்விதைகளை விதைத்து விட்டு , வயல் சேற்றில் இருக்கும் மீன்களைப் பிடித்து அதே பெட்டியில் வீட்டுக்கு கொண்டு வருவார்கள்.
அத்தகைய வயல்கள் நிறைந்த ஊரில் வாழ்பவன் நீ.வலிமையை வெளிப்படுத்தும் வீர உரைகளோ, விரைந்துச் செல்லும் தேர்களோ செல்வம் அல்ல. அவை எல்லாம் நம் முன்வினைப் பயனால் அமைந்தவை.
சான்றோர் செல்வமென போற்றுவது எது தெரியுமா?
நம்மை அடைக்கலமாக கொண்டு சேர்ந்தவருக்கு ஏற்படும் துன்பத்துக்கு அஞ்சுவதும், துன்பம் நேர்ந்தால் அதை நீக்கி, அவர்கள் நீங்காமல் பாதுகாப்பதே பெரும் செல்வம் ஆகும்"
தோழி கூறும் கருத்து எக்காலத்திலும், எவருக்கும் பொருந்தும் அல்லவா?
'மிளைகிழான் நல்வேட்டனார் 'என்னும் சங்கப்புலவர் எழுதிய கவிதைப்பாடல் இது
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே. ( நற்றிணை 210)
மேலும் ஒரு அழகான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload