அலமேலு அப்போதுதான் இன்னொரு தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டிற்குள்ளே ஏற்கெனவே வைத்திருந்த தண்ணீர் குடம் கவிழ்ந்து, அதிலிருந்து தண்ணீர் கீழே கொட்டிக் கொண்டிருந்தது. பக்கத்தில் அவளுடைய மூன்று வயது குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள்.அவள் பக்கத்தில் இருந்த டேபிள் ஃபேன் கிட்ட தண்ணி போயிடக் கூடாது என்பதற்காக ஃபேன் ஸ்விட்ச உடனே ஆஃப் பண்ணாள்.
அப்பத்தான் பார்த்தா அவளுடைய கணவன் குமார் கீழே விழுந்து கிடந்ததை.அவன் கிட்ட போயிட்டு, ’என்னங்க, உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?’ என்று ஏக்கத்துடன் கேட்டாள் அவள். அவனுடைய கால் தடுக்கித்தான் குடம் சாய்ந்து தண்ணீர் கீழே கொட்டிக் கொண்டிருந்தது. அலமேலு ஒரு மூன்று மாத குழந்தையை வயிற்றிலும் மூன்று வயது குழந்தையை இடுப்பிலும் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவள்.
அவளுடைய கணவன் குமார் அவளைப் பார்த்து, ’வழியில்தான் தண்ணீர் குடத்தை வைப்பியா? அது தடுக்கித்தான் நான் கீழ விழுந்தேன்’ என்று கோபத்துடன் கேட்டான். அவனுடைய பேச்சிலேயே அவன் குடித்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல.தினமும் நடப்பதுதான்.
அலமேலு ’அடுத்த குடத்த எடுத்து வர அவசரத்துல வச்சுட்டு போயிட்டேன்’ என்றாள்.இருக்கின்ற தண்ணீர் கஷ்டத்தில வாசலில் உள்ள தெருக்குழாயில் வரிசையில் நின்று ஒரு குடம் தண்ணீரை அடித்துக் கொண்டு வருவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.
அவள் தண்ணீர் வீணாகி விட்டது என்று வருந்துவாளா? ’இவன் குடித்துவிட்டு இன்று வந்து விட்டானே, இன்று அவன் செய்யும் பெயிண்டர் வேலையும் போய், கூலியும் போய்விட்டது’ என்று வருந்துவாளா.என்ன செய்வது?’ என்று அந்த கிராமத்து பெண்ணுக்கு புரியவில்லை.
மெதுவாக குமாரின் முகத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து தெளித்தாள். அவள் மீது அவன் ’வள்’என்று விழுந்தான். அவனுக்கு, ’தன் குடிபோதை இறங்கி விடுமோ?’ என்ற கவலை.
கைத்தாங்கலாக அவனைத் தூக்கி நிறுத்தி, மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தாள் அலமேலு. அவனுக்கு பக்கத்தில் ஒரு ஸ்டூலை போட்டு (சத்தியவான்-சாவித்திரி கணக்கா) அதில் டேபிள் ஃபேனை எடுத்து வைத்தாள்.ஆழ்ந்து தூங்கத் தொடங்கினார் குடும்பத் தலைவர் குமார்.
வெயிலின் புழுக்கத்தில் குழந்தை எழுந்து கொண்டது.குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு காலை உணவை தயாரிக்க முற்பட்டாள் அலமேலு.
அதற்குள் விழித்துக் கொண்ட குமார், ’என்னடி டிபஃன் ரெடியா? ’ என்று ஒரு கத்து கத்தினான்.
சமையல் அறைக்குள் நுழைந்த அவனிடம்,’ஒரு பத்து நிமிஷம் பொறுங்க’ என்றாள் அலமேலு. காலையிலிருந்து.’என்னடி பண்ணிட்டு இருந்த?’ என சொல்லியபடி அவளது கன்னத்தில் ’பளார்’னு ஓர் அடி கொடுத்தான். அவளுக்கு இதுவரை மனது மட்டும்தான் வலித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது உடம்பும் வலிக்கத் தொடங்கியது.
ஒரு வழியாக உணவை சமைத்து அவனுக்கு கொண்டு வந்து கொடுத்தாள். அவனால் அதை எடுத்து சாப்பிடக் கூட முடியவில்லை. அலமேலுதான் அக்கறையாய் எடுத்து ஊட்டி விட்டாள். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு திரும்பத் தூங்க தொடங்கி விட்டான் குமார்.
அலமேலு வீட்டுக்கதவை மூடிக்கொண்டு,இடுப்பில் குழந்தையுடன் 100 நாள் வேலை திட்டத்திற்கு கிளம்பிவிட்டாள். வழியில் மகளிர் தின கொண்டாட்ட விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவளைக் கூப்பிட்டு ஒரு பொன்னாடை போட்டு மகளிர் தின வாழ்த்தினை சொன்னார் அந்தப் பகுதி பிரபலக் கட்சி ஒன்றின் மகளிர் அணி செயலாளர்.தன்னுடைய குழந்தை குளித்தவுடன் உடம்பைத் துடைக்க உதவும் என்று அவளும் அதை வாங்கிக் கொண்டாள்.
நம்புவோம் பாரதி மீண்டும் வருவானென்று.
Leave a comment
Upload