தொடர்கள்
தொடர்கள்
மூவர்ணக் காதல் - முதல் வாரம். சித்ரூபன்

மூர்க் காதல்

20250215011545933.jpeg

‘காந்தி ஒயின் ஷாப்’ ‘அட்வகேட் ஹரிச்சந்திரன்’ ‘மகாவீர் மட்டன் ஸ்டால்’ என்று சென்னையில் ஆங்காங்கே தென்படும் விளம்பரப் பலகைகளின் கீழ் மூலையில் தூரிகையின் படம் வரைந்து ‘கவிதா ஆர்ட்ஸ்’ என்று எழுதியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

கல்லூரி மதில்களில் இயற்கைக் காட்சிகளும், நெடுஞ்சாலை நடுத்தூண்களில் தமிழ் மன்னர்களின் உருவப்படங்களும் இவர்கள் கைவண்ணமே. கோவில் பிராகார உத்தரங்களில் புராண நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டு வந்ததும், தேவாலயங்களின் வெளிப்புறச் சுவர்கள் தோறும் வேதாகம வசனங்களை எழுதி வைத்திருப்பதும் இவர்களது பங்களிப்புதான்.

கவிதா ஆர்ட்ஸ் என்பது ஓவியக்கலையில் பட்டம் பெற்ற மூன்று இளைஞர்களின் கூட்டு முயற்சி. கலியன், வினோத்குமார், தாருகேஷ் ராய் என்ற பிரம்மச்சாரிகள் தங்களது பெயரின் முதலெழுத்தையும், கைக்காசையும் மூலதனமாகப் போட்டு ஆரம்பித்த குறுந்தொழில். தமிழ், தெலுங்கு, பெங்காலி என வெவ்வேறு மொழி பேசும் மூவரையும் ஓவியம் ஒரே புள்ளியில் இணைத்தது. நட்பில் நெருக்கம் கூடியது.

மெட்ராஸ் லலித் கலா அகாதமியின் ‘மாடர்ன் ஆர்ட்’ கண்காட்சியில் பல வருடங்களுக்கு முன்னர்யதேர்ச்சையாகச் சந்தித்துக் கொண்ட அவர்கள் ‘ஸைன் போர்ட்’ எழுதிச் சம்பாதிக்கலாம் என்று தீர்மானித்தனர். எம்ஜிஆர் நகரில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து, சாயங்கள், பிரஷ் போன்றவற்றை வாங்கி சிறியளவில் தொடங்கினர். அவ்வப்போது சில ஆட்களையும் உதவிக்கு அமர்த்திக் கொண்டனர். துவக்கத்தில் விளம்பரப் பலகைகளும், துணிப்பதாகைகளும் எழுத வாய்ப்புகள் கிடைத்தன. நாடகக் குழுக்கள் மேடையில் பின்னணித் திரைகள் வரைய அழைத்தனர்.

கால மாற்றத்தால் வணிக நிறுவனங்கள் ஃப்ளெக்ஸ் போர்டுகளை நாடிச் செல்லத் தொடங்கின. தங்களது தொழிலில் ஏற்பட்ட தொய்வினால் வருமான இழப்பைச் சமாளிக்க மூவரும் மாற்று வழிகளைத் தேடஆரம்பித்தனர்.

தாருகேஷ் சொந்த ஊரான ஹௌராவுக்குச் சென்று கணிப்பொறியில் ஓவியங்கள் தீட்டி டிஜிட்டல் போர்ட்ரைட் வரைவதில் தேர்ச்சி பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கினான். வினோத், ஹைதராபாத் ராமோஜி திரைப்பட நகரில் கலை இயக்குநருக்கு உதவியாளனாக இருந்து கொண்டே, போஸ்டர் இல்லஸ்ட்ரேஷன் போன்றவற்றை முயற்சி செய்தான். கலியன் தமிழ்ப் பத்திரிகைகளுக்குச் சித்திரங்கள் வரைந்து கொடுப்பதோடு, டைட்டில் கிரியேஷன் ஆகியவற்றில் கவனம் செலுத்தினான்.

ஆயினும், கவிதா ஆர்ட்ஸை நிரந்தரமாக மூடி விடவில்லை. நட்பிற்கு அடையாளமாக அதை எப்போதாவது தொடர்ந்தனர். பெரியளவில் ஓவிய வாய்ப்புகள் வரும் போது மூவரும் இணைந்து உதவியாளர்களுடன் பணிகளை முடிப்பதென ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

சமீப காலமாக குடிசை மாற்றுக் குடியிருப்புகள், சுரங்கப்பாதைச் சுவர்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள்என்று பல்வேறு இடங்களில் வித்தியாசமான ஓவியங்கள் வரைய அழைப்புகள் வரத்தொடங்கின.

“என்னோட சொந்த ஊர் தர்மபுரி ஜில்லா. பாப்பிரெட்டிபாளையம் தாலுகாவுல ஒரு பின்தங்கிய கிராமம்.எங்கப்பா ஆஜானுபாகுவா இருப்பாரு. என்னை பேர் சொல்லி கூப்பிடவே மாட்டாரு. எப்பவும் பாசமா ‘வாடா போடா’ தான். அடிக்கடி தெருக்கூத்துக்கு கூட்டிட்டு போவார். ‘இரணிய வதம்’ பார்த்துட்டு வந்து நரசிம்மர் மாதிரி ஆவேசமா நடிச்சு காமிப்பாரு. எனக்கும் அந்த வேஷம் கட்டணும்னு ஆசை..”

பாக்கியபுரி என்றழைக்கப்படும் ஹைதராபாத் சலார் ஜங் அருங்காட்சி வளாகத்தில் இந்திய நவீன ஓவியங்களை ரசித்துக் கொண்டிருந்தாள் ஒரு யுவதி. அனார்கலி சுடிதாரில் இருந்த அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்குமார். சற்று முன்னர் அதே மியூஸியத்தில் அவன் கண்டு களித்த ‘முக்காடு அணிந்த ரெபெக்கா’ பெண்ணின் சிற்பம் உயிர்பெற்று வந்து விட்டதோ என்று சந்தேகப்பட்டான். ஒரே வித்தியாசம். அந்தப் பளிங்குச் சிலை வெண்மையாய் இருக்க, இவளோ அவனுக்குப் பிடித்தமான கருப்பு நிறத்தில் காந்தம் போல சுண்டி இழுத்தாள்.

அங்கிருந்த இயற்கைக் காட்சி ஓவியத்தைப் பார்த்தவள் தன்னை மறந்து உரத்த குரலில் “ஈ சித்ரம் சால அந்தம்கா உந்தி..” என்று தெலுங்கில் வியந்தாள்.

“இது வாட்டர் கலர் பெயின்டிங்..” என்று வலியச் சென்று விளக்கினான் வினோத். “அதெல்லாம்கேன்வாஸ்ல வரைஞ்ச அக்ரிலிக் ஓவியங்கள்..”

“உங்களுக்கு அவ்வளவு நுணுக்கமா தெரியுமா..” அந்த ஊர் மொழியிலேயே கேட்டாள் அவள்.

“நானும் இதே துறையைச் சேர்ந்தவன் தான்.. ‘காலிகிராஃபி’யில் விற்பன்னன்..”

“அப்படின்னா..”

“எழுத்துக்களை அழகழான வடிவங்கள்ல வரையறது..”

“புரியலை..”

“இப்ப.. உங்க பேர் என்ன சொல்லுங்களேன்..”

ஓவியங்களில் கவனம் செலுத்தியபடியே அவள் “தாரா ரெட்டி..” என்றாள்.

வினோத் சட்டைப் பையைத் துழாவினான். ஆரிய வைசிய சங்கத்திற்கு உறுப்பினர் சந்தா செலுத்தின ரசீது அகப்பட்டது. அதன் பின்புறம் பேனாவினால் ஓவிய எழுத்துக்களில் ‘தா-ரா-ரெ-ட்-டி’யை வரைந்துகாண்பித்தான்.

“வாவ்.. சூப்பர்..”

“இதே மாதிரி எண்களையும் எழுத முடியும்.. உங்களோட மொபைல் நம்பர் என்ன..” என்று அடுத்தத் தூண்டிலைப் போட்டான்.

அவள் சற்றுத் தயங்கிப் பதிலளிக்க, பத்து இலக்கங்களையும் விதவிதமாக வரைந்து காட்டினான்.

“உங்க பேர் என்ன..” என்றாள் தாரா.

“வினோத்குமார்.. ராமோஜி ஃபிலிம் சிட்டியில அஸிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டரா இருக்கேன்..” என்றான். “நீங்க என்ன பண்றீங்க..”

“ஒரு ‘கலாச்சார பரிவர்த்தனை நிகழ்ச்சி’க்காக வந்திருக்கேன்..” அவளது கைபேசி ஒலிக்கவே “ஒக்க நிமிஷம்..” என்று வெளியேறினாள்.

வினோத்துக்கு தாரா ரெட்டி மீது இனம் புரியாத பிரேமை ஏற்படக் காரணம் அந்தக் கருமை நிறமாக இருக்கலாம். பார்த்த பத்தே நிமிடங்களில் அவளது பெயரையும், கைபேசி எண்ணையும் தெரிந்து கொண்டு விட்ட தனது சமயோசித அறிவை நினைத்துப் பெருமிதம் கொண்டான்.

வெளியே சென்றவள் திரும்ப அரங்கிற்குள் வரவேயில்லை. முக்கால் மணி நேரமாகக் காத்திருந்த வினோத் பொறுமையிழந்தான். தொலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற உந்துதலில் தாராவுடைய எண்ணுக்குமிஸ்ட் கால் கொடுத்தான். ‘இந்த வாடிக்கையாளர் வேறொரு நபருடன் தொடர்பில் இருக்கிறார்’ என்றபதிவுக்குரல் ஒலித்தது. அவன் ஏமாற்றமடைந்தான்.

“எங்கம்மா களையா இருப்பாங்க.. நெறம் கம்மிதான். எங்க சாதிசனத்துலயே அவ்ளோ அழகான பொம்பளை யாருமேயில்லை.. சின்ன வயசுல அவங்களை படிக்க வெக்கல.. காட்டுல சுள்ளி பொறுக்கி, அதை வித்து வர்ற காசுல கஷ்டப்பட்டு என்னை ஸ்கூலுக்கு அனுப்பினாங்க.. வெறித்தனமா படிச்சேன். பள்ளிக்கூட டிராமாவுல கலந்துப்பேன்.. எல்லாரையும் மாதிரி பேசி மிமிக்ரி பண்ண பிடிக்கும்.”

கொல்கொத்தா ராஷ்பெஹாரி அவென்யூ ‘பிரேம விலாஸ்’ ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் தாருகேஷ் ராய். தினசரி மீன் உண்ணும் வங்காளியான அவனை சென்னை விஜயம் தமிழகச் சிற்றுண்டிகளுக்கு அடிமையாக்கி விட்டது. ஃபில்டர் காபிக்காக மெட்ரோ ரயிலில் பயணித்து காளிகாட் ஸ்டேஷன் அருகிலுள்ள அந்த உணவகத்திற்கு வந்திருந்தான்.

‘NO REFUSAL’ வாசகத்துடன் வெள்ளை டாக்ஸி வந்து நிற்பதும், ஜீன்ஸ்-டாப்ஸ் மங்கை அதிலிருந்துஇறங்கி ட்ராலியுடன் உள்ளே வருவதும் சாளரத்தின் வழியாகத் தெரிந்தது. விபரீத அழகுடன் இருந்தவளைப் பார்த்ததுமே மெய்மறந்தான்.

அவள் ஹோட்டலுக்குள் நுழைந்து தாருகேஷுக்கு எதிர்ப்புற மூலையை ஆக்ரமித்தாள். மெனு கார்டை புறக்கணித்து, வெயிட்டரிடம் “துயி இத்லி, யேக் படா.. த்ருது ஆநா..” என்றாள் பெங்காலியில். அதற்கேற்பஜோடி இட்லியும், வடையும் வேகமாக வந்தது.

மடிக்கணினியில் அந்த அப்சரஸை டிஜிட்டலாக வரைய வேண்டுமென தாருகேஷின் கைகள் பரபரத்தன.

அவள் கைபேசியில் “நான் கல்கட்டா வரும்போதே டார்ஜிலிங்கையும் பார்க்கணும்னு நினைச்சேன்.. ‘மே மாசம் சீஸனா இருந்தாலும் ரூம் ஏற்பாடு பண்ணிடறேன்’னு சொன்னீங்க.. இப்ப கிடைக்கலேன்னா எப்படி..நாளன்னிக்கி அங்க தங்கியே ஆகணும்.. ஏதாவது வழி பண்ணுங்க..” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தாருகேஷ் மலைப்பிரதேசத்திலுள்ள தங்களுடைய விடுதியில் அவளுக்கு ஓர் அறையை ஒதுக்கி, அந்தத் தேவதையிடம் நட்பை வளர்த்துக் கொள்ளத் தீர்மானித்தான்.

“எக்ஸ்கியூஸ் மி.. ஐ’ம் தாருகேஷ் ராய்.. நீங்க பேசினது காதுல விழுந்தது.. டார்ஜிலிங்ல எங்களோட ‘பேலஸ்’ இருக்கு.. அதுல தங்கறீங்களா..”

அறிமுகமற்ற ஒருவன் வலிய உதவுவது அவளுக்கு வியப்பூட்டியது. “வேண்டாம்.. அரண்மனைன்னா சொன்னீங்க.. நீங்க என்ன.. ராஜ வம்சமா.. “

“ஆமா.. ‘உக்ர க்ஷத்ரிய’ குலம்.. என்னோட முன்னோர்கள் அந்தக் காலத்துல போர் புரிஞ்சவங்க..”என்றான். “வெஸ்ட் பெங்கால்ல மூதாதையர்களோட மாளிகைகள் நிறைய இருந்தது.. டார்ஜிலிங்ல அதைஹோட்டலா மாத்திட்டோம்..”

“அப்படியா.. என் ட்ராவல் ஏஜென்ட் எப்படியாவது ஏற்பாடு பண்ணிடுவாரு..”

“எதுக்கும் மேனேஜர்கிட்ட சொல்லி வெக்கறேன்.. தேவைப்பட்டா நீங்க எடுத்துக்கலாம்..” என்ற தாருகேஷ்மேலாளரைத் தொலைபேசியில் அழைத்தான். உரையாடலின் இடையே “அப்நார் நாம் கீ” என்று அவளதுபெயரைக் கேட்டான்.

கைபேசியில் மும்மரமாக இருந்தவள் “கனிகா மஜும்தார்” என்றாள்.

மேனேஜரிடம் அதைத் தெரிவித்துவிட்டு, “உங்க பேர்ல ரூம் ‘பிளாக்’ பண்ணச் சொல்லிட்டேன்..” என்று விடுதியின் விசிட்டிங் கார்டை நீட்டினான்.

“கொல்கொத்தாவுக்கு இப்பதான் முதல் தடவை வரீங்களா..”

“ஆமா.. விஸ்வபாரதி யூனிவர்சிட்டியில ஒரு செமினார்..” என்றாள் கனிகா. “நீங்க..?”

“ஹௌரால இருக்கேன்.. டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட்..” தாருகேஷின் கண்கள் அவளை ரசித்துக் கொண்டேயிருக்க, வாய் அனிச்சையாகப் பேசியது. “போர்ட்ரைட் வரையறது என்னோட தொழில்.”

சாப்பிட்டு கை கழுவச் சென்ற கனிகா மஜும்தார் வெகு நேரமாகியும் வரவில்லை. வேறு வழியாக அவள் வெளியேறி விட்டதை அறிந்து மிகவும் ஏக்கமடைந்தான்.

“நாங்க ஊருக்கு வெளியில ஒதுக்குப்புறமா ஒரு காலனியில குடியிருந்தோம். ஓலைக்குடிசை.. அது பக்கத்துலயே செங்கல் சுவர் எழுப்பி சின்னதா ஒரு ரூம் கட்டி எனக்கு படிக்க வசதி பண்ணிக் கொடுத்தாரு எங்கப்பா.. அவருக்கு மரம் ஏறறது தான் தொழில்.. அதுல வருமானம் அவ்வளவா கிடையாது.. நிறைய நாள் மண் பானையில கூழ் தான் குடிப்போம்.. எப்பவாவது அபூர்வமா சோறு திங்கறதுண்டு..”

கடல் மட்டத்திலிருந்து ஆறாயிரத்து எழுநூறு அடி உயர டார்ஜிலிங்கில் ‘புத்த பூர்ணிமா’ கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. சாலையில் பௌத்த பிட்சுக்கள் ‘தம்மபதம்’ புனித நூலை சுமந்து செல்ல, பலர்சங்கு, மணி, சீனப்புல்லாங்குழல் போன்றவற்றை இசைத்தவாறே பின்தொடர்ந்தனர். ‘புத்தம் சரணம் கச்சாமி’ கோஷம் மென்மையாக ஒலித்தது.

தாருகேஷ் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக ‘டைகர் ஹில்’ நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இரு தினங்களுக்கு முன்னர் கொல்கொத்தாவில் சந்தித்த அழகியை அவனால் மறக்க முடியவில்லை. கனிகா மஜும்தாரை மீண்டும் பார்ப்பதற்காக ரயிலில் எப்படியோ பயணித்து சிலிகுரியில் இறங்கி, அங்கிருந்து நண்பனின் வாகனத்தை எடுத்துக் கொண்டு மலையேறி விட்டான். டார்ஜிலிங் நட்சத்திர விடுதியில் அவன் கனிகாவுக்கு ஒதுக்கிய அறை காலியாகவே இருப்பது தெரிய வந்தது.

அந்த மலைவாசஸ்தலத்திற்கு வரும் பெரும்பாலானோர் கஞ்சன்ஜங்கா சிகரத்தைப் பார்வையிடச் செல்வது வழக்கம். கனிகா எப்படியும் அங்கே போயிருப்பாள் என்ற நம்பிக்கையில் அவன் மலையுச்சிக்கு செல்லும் வழியில் புத்தர் ஊர்வலம் குறுக்கிட்டது.

ஒரு வழியாக டைகர் ஹில் பகுதியை அடைந்து வண்டியை நிறுத்தி விட்டு நடந்து சென்றான் தாருகேஷ். சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த இடத்தில் கனிகா நிச்சயம் இருக்க வேண்டும் என்று கல்கட்டா காளியை வேண்டிக் கொண்டான்.

அதீதக் குளிரைத் தாங்கிக் கொள்ள பலரும் கம்பளி ஆடைகளை அணிந்திருக்க, மூச்சு விட சிரமப்பட்டவர்கள் கையடக்க ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்தினர். ஒரு மேடான பகுதியில் நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடையே டெனிம் பேன்ட்டும் டி-ஷர்ட்டும் அணிந்த பெண்தனித்துவமாகத் தெரிந்தாள். ‘கண்டேன் சீதையை’ என்ற ரீதியில் தாருகேஷும் குதூகலமானான். அதுகனிகாவே தான். மூச்சிரைக்க மேலே ஏறி அவளை நெருங்கி, “ஹலோ..” என்றான்.

அவள் மெதுவாகத் திரும்பி “நீங்க.. யாரு..” என்றாள். முகம் இறுகியிருந்தது. கொல்கொத்தாவில் பார்த்த ரம்மியமான பார்வை இல்லை.

“தாருகேஷ் ராய்.. முந்தா நாள் ரெஸ்டாரெண்ட்ல மீட் பண்ணோமே..”

“ஆமா.. இங்க எதுக்கு வந்தீங்க..”

“உங்களைப் பார்க்கறதுக்குதான்.. அன்னிக்கி திடீர்னு காணாம போயிட்டீங்களே”

“சாப்ட்டு முடிச்சேன்.. போயிட்டேன்..“ அவள் பற்களைக் கடித்துக் கொள்வது தாடையில் தெரிந்தது.

“இங்க ஸ்டார் ஹோட்டல்ல உங்களுக்கு ரூம் ஒதுக்கியிருந்தேன்..”

“அடிமட்டத்துல இருக்கற எனக்கெதுக்கு அரண்மனை.. அது உங்களை மாதிரி அரச குலத்தைச் சேர்ந்தவங்களுக்கு தான்..“ என்றாள் விரக்தியான குரலில்.

“கஞ்சன்ஜங்கா பீக் எவ்வளவு அழகா தெரியுது பாருங்க.. இந்த பேக்கிரவுண்ட்ல என்னை போட்டோ எடுக்கறீங்களா..” என்று மொபைலை அவளிடம் நீட்டினான் தாருகேஷ். சிமென்ட் பெஞ்ச்சின் மேல் ஏறி நின்றான். கனிகா விருப்பமில்லாமல் ஃபோகஸ் செய்தவாறே “கொஞ்சம் பின்னாடி போங்க” என்றாள்.

அவன் பின்னோக்கிச் சென்று விளிம்பைத் தொட்டவுடன் கால் இடறி 2600 மீட்டர் உயரத்திலிருந்து கீழே சாய்ந்தான். செங்குத்தான பாறைகளும், மரங்களும் சூழ்ந்த அதல பாதாளத்தில் தலை குப்புற விழுந்தான். தன்னைக் காப்பாற்றுமாறு ‘அமாகி பசாவ்’ என்று பெங்காலியில் தாருகேஷ் அலறிய குரல் பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.

கனிகா செல்போனை பெஞ்சில் வைத்துவிட்டு இறங்கிச் சென்றாள்.

ஒரு நாள் எங்கம்மா காட்டுல சுள்ளி பொறுக்கிட்டு தலையில சுமையோட வந்திட்டிருந்தாங்க. சித்திரை மாசம். அக்னி நட்சத்திரம். சூடு தாங்காம செருப்பு போட்டிருந்தாங்க.. வழக்கமான பாதையில சாவு ஊர்வலம் வருதேன்னு சொல்லி ஊருக்குள்ளாற போகற ஒரு தெருவுல தெரியாம நுழைஞ்சுட்டாங்க.. அது மேல்மட்டத்துக்காரங்க இருக்கற வீதி. கோவில் பூசாரி அம்மாவைப் பார்த்துட்டாரு..

(தொடரும்)