பண்ணைபுரம் டு லண்டன் சிம்பொனி
இளையராஜா என்றால் - இசை என்று கூறுமளவிற்கு, பட்டிதொட்டியிலிருந்து பங்களா வரை, பாமரன் முதல் பணக்காரன் வரை, பூமர் முதல் மில்லேனியல்ஸ் வரை இவரது இசை எங்கும், எல்லோர் மனதிலும் வியாபித்திருக்கிறது. இசைக் கடவுள் என்றும் பலராலும் பூஜிக்கப்படுபவர். முறையான இசை பயிற்சி இல்லையென்றாலும் தனது இசை ஞானம், கடின உழைப்பின் மூலம் இசையின் பல பரிணாமங்களின் உச்சியை தொட்டவர். தான் செய்யும் வேலையில் தீராக் காதலும், சாதிக்க துடிக்கும் மனமும் இருந்தால் எந்த உயர்த்தையும் தொட முடியும் என்பதற்கு சான்றாக விளங்குபவர். அவ்வாறு சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதையும் நிரூபித்தவர். இவ்வாறு இளையராஜா பற்றியும், அவரது சாதனைகள் பற்றியும் நாம் பட்டியலியிட்டுக்கொண்டே செல்லலாம். இளையராஜா கடந்த சனிக்கிழமை, லண்டன் ஹம்மர்ஸ்மித், ஈவண்டிம் தியேட்டரில் "Valiant" என்னும் சிம்பொனியை இயற்றி, சாதனையின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா, மைகேல் தலைமையில் இதனை அரங்கேற்றினார்கள்.
இளையராஜா அவர்கள் மேற்கத்திய செவ்வியல் இசையில் (Western Classical Music) மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவரது திரைப்பட பாடல்களிலும் இதன் தாக்கத்தை நம்மால் உணர முடியும். இந்த வகை பாடல்களை, கேட்போர் ரசிக்கும் வகையில் அமைத்தது ராஜாவின் கூடுதல் சிறப்பு. தளபதியின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் ஆகிய பாடல்கள் இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டுகள். இவரது தனி வெளியீடுகளான "How to Name It" , "Nothing But Wind" ஆகியன இந்திய மேற்கத்திய இசை வடிவங்களின் சாயலில் வந்தவையே. மேற்கத்திய இசையின் மீது அவருக்கிருந்த தீராத காதல் இதன் மூலம் தெள்ள தெளிவானது என்றே கூற வேண்டும். தனஞ்ஜெயன் மாஸ்டர் அவர்களிடம் மேற்கத்திய செவ்வியல் இசை கற்ற இசைஞானி இன்று சிம்பொனி படைத்ததன் மூலம் உலகப் புகழ்பெற்ற இசை மேதைகளான பீத்தோவன், மொசார்ட், ஷூபர்ட், செக்கோவ்ஸ்கி ஆகியோரின் வரிசையில் தன்னையும் இணைத்து கொண்டுள்ளார்.
நமது கர்நாடக இசை போன்றே, ஸ்யமபோனிக்கும் ஒரு கட்டமைப்பு உள்ளது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று கூறுவது போன்று, சிம்பொனியில் மூவ்மென்ட் என்று கூறுகிறார்கள், ஒரு சிம்பொனி மொத்தம் நான்கு மூவ்மென்ட்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. சொனாட்டா என்னும் ஒரு வேகமான மூவ்மென்டில் துவங்கி, பின்பு சற்றே கொஞ்சம் மெல்லிசை போன்று அமைந்து, அதனை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இசையை தழுவி இறுதியாக ஒரு பிரம்மாண்ட இசையுடன் நிறைவு பெரும். ராஜாவின் "Valiant" சிம்பொனியும் இதே போன்று நான்கு மூவ்மென்ட்ஸ் கொண்டு, ஒவ்வொரு மூவ்மென்ட்சும் பதினைந்து நிமிடங்கள் என்ற கணக்கில், மொத்தம் ஒரு மணிநேரம் நிகழ்த்தப்படுகிறது. பல வகையான வாத்தியக் கருவிகள் கொண்டு இசைக்கப்படுவதும் சிம்பொனியின் கூடுதல் சிறப்பு. தாள, சரம் கருவிகள் என மொத்தம் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் கொண்டு இசைக்கப்படும் இந்த சிம்பொனியை கேட்பது, பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம்.
அதிலும் மேஸ்ட்ரோவின் சிம்பொனி இசையை கேட்க வேண்டும் என்றால், பல ஜென்மங்களில் புண்ணியங்கள் நாம் செய்திருக்க வேண்டும்.ஆசியாவிலிருந்து ஒருவர் சிம்பொனியை இசைப்பது இதுவே முதல் முறையாகும். பண்டிட் ரவிசங்கர் இதனை முன்பே செய்திருதாலும், அது இந்திய மற்றும் மேற்கத்திய இசையின் கலவையாக அமைந்து, முழுமையான செவ்வியல் இசையாக அமையவில்லை. ராஜா அவர்கள் இதை பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. தனது சிம்பொனி இசை, தான் அறிந்த கற்ற சிம்பொனி இசை கலைஞர்களின் சாயல் இல்லாமலும், கர்நாடக இசை மற்றும் தனது இசையின் சாயல் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதாக கூறினார்.
ஒரு மணி நேர சிம்பொனி இசையை தொடர்ந்து ஒரு இடைவெளிக்கு பின்னர், நாம் அனைவரும் ரசித்த ராஜாவின் சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டன. அரங்கிலிருந்த அவரது ரசிகர்களின் மனநிலையை நம்மால் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பல இடங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தாலும், அமெரிக்காவிலிருந்து இதற்காக வந்திருந்தோரை காணும்பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு ரசிகரிடம் கேட்டேன். எப்படி இருந்தது அனுபவம்.
ஐயோ... அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஐம்புலன்களும் அடக்கி ஒரு தியானத்தில் ஒருமுகப்படுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்களே, அத்தனை தியானமும், இந்த இசை கேட்கையில் நம்மை கட்டிப் போட்டு நம் புலன்களையெல்லாம் அடக்கி ராஜா செய்தது ரசவாதம். இல்லையில்லை 'ராசா'வாதம்.
கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டியதை போல இனி ராஜாவிடமிருந்து தான் சிம்பொனியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது கேட்பதற்கு.
ஏறக்குறைய பரவசத்தில் கண்ணீர் வழிந்தோடியது அவருக்கு.
இளையராஜாவை பற்றிய விமர்சனங்கள் பலவாறு இருந்தாலும் சாதனையாளர் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த இவர், இன்று உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் வரிசையில் சேர்ந்திருப்பது நமது இந்திய நாட்டிற்கு பெருமை.
இவர் கடந்து வந்த பாதை எளிதாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தன்னுடைய இலக்கை மட்டுமே முன்னிறுத்தி, தனது எண்பத்திரெண்டாவது வயதில் ராஜா படைத்திருக்கும் சாதனை, சோர்ந்து போய் உட்காரத் தோன்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு கிரியா ஊக்கி.
நாடி நரம்பெல்லாம் ஊடுருவி மொத்த தமிழர்களையும் தன் இசையின் பிடியில் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு வைத்திருக்கட்டும் இந்த இசை பிரபஞ்சம்.
Leave a comment
Upload