தொடர்கள்
கவிதை
தியாகம்...!! தந்தையா தாயா...?? - கோவை பாலா

20250215010451778.jpeg

குடும்பம் எனும் சுமைகள் தாங்க,
கடும்தவம் ஏற்று இமைகள் தூங்கா,
வாழும் வாழ்வே தியானம் என்றாக,
யாரதில் அதிகம் தியாகம் செய்வார்..?
தந்தையா தாயா? தலைப்பு என்றாகி..
பட்டிமன்றத்தில் நின்றது கேள்வி...?

கட்டிப் போட்டது தலைப்பு என்னை..!
பெட்டி வழி வந்த தொலைக்காட்சி,
எட்டி நின்று பார்த்திருந்த அன்னை..!
வெட்டிப் பொழுதிது என்ற தந்தை...!
விட்டுச் சென்ற அந்த வினாவோ,
விடை தேடு பெற்றோரிடம் என்றது..!

இத்தனை பிள்ளைகள் வளர்ப்பதற்கு
எத்தனை கஷ்டங்கள் கண்டீர்கள்...?
தியாகம் அதிகம் செய்தது யாரென்று
தாயிடம் வைத்தேன் கேள்வி ஒன்று..!
தன்னிடம் கேட்டிருக்க கூடாதென்றும்,
தாயாகத் தந்தாள் பதிலொன்றும்...!

பிள்ளைகள் வளர்ப்பது கஷ்டமென்று,
பெற்றோர்கள் நினைப்பது இல்லை..!
மணமுடித்து வந்த நாள் முதலாய்,
தந்தையோ இருந்தார் தன்னலமாய்..!
பிள்ளையாய் நீயும் உடன்பிறப்போடு
குடும்பமாய் பிணைந்த உறவுகளால்,
தன்னலம் மறைந்தது விந்தையாய்...!

விருப்பும் வெறுப்பும் மாறிவிடவும்,
உழைப்பும் வியர்வையும் ‌உள்ளமும்,
உணவு உடை கல்வி நலன்களும்,
தாய்க்கும் பிள்ளைக்கும் தடையின்றி,
தந்தை தந்ததால் ஆனதே குடும்பம்...!
வியந்து விட்டேன் தாயின் பதிலில்...!

தந்தையிடம் வைத்தேன் கேள்வி..‌.!
தந்தையின் பதிலோ ஒரு வேள்வி...!
எவ்வளவு தியாகம் தாய் செய்தாள்...!
எவ்வளவு கஷ்டம் தாய் பட்டாள்...!
அளவு சொல்லத் தெரியவில்லை..!
தந்தை சொன்னது புரியவில்லை...!

வருகின்ற வருமானம் அறிந்ததனால்
வருகின்ற செலவுகள் எதிர்கொள்ள,

வகுத்த வியூகங்கள் தாயின் திறன்...!
தாயாய் எத்தனை சண்டை இட்டாள்..
தனக்கென இல்லை உங்களுக்காக..!
தாரமாய் எத்தனை தாங்கி பிடித்தாள்,
தாழும் மனநிலை தள்ளிய போது...!

தாயின் பொறுமை முயற்சி அன்று...
தலை தூக்கியது குடும்பம் இன்று...!
தாய் செய்த தியாகத்தை விட, தான்
செய்தது ஒன்றும் பெரிதில்லை..!
இறையெனத் தந்தையை வணங்கி,
நிறையெனக் கண்டேன் இணங்கி..!

உடன் பிறந்தோரிடம் சொன்னேன்...
அதிர்ஷ்டசாலிகள் நாமெல்லாம்...!
தந்தையின் தியாகத்தை தாயும்,
தாயின் தியாகத்தை தந்தையும்,
புரிந்து கொண்டதன் மார்க்கம்,
குடும்பம் ஆகியது சொர்க்கம்...!!

20250215010514922.jpeg