தொடர்கள்
பொது
மனசே! டேக் டைவர்ஷன் 8 – மோகன் ஜி

“இனியெல்லாம்…. சுகமே!! “
20250212224725597.jpg

மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது? அது எங்கிருந்து வருகிறது? அது கிடைக்க ஏதும் செலவாகுமா? அதற்கென்று தனியே நேரமொதுக்க வேண்டுமா? அதை அனுபவிக்கத் தனியாக ஏதும் இடமொன்று இருக்கிறதா?

பல நேரம், காலம் நம்மை தனிமைப்படுத்தி விடும் தான். பிறர்க்கு ஒரு பொருட்டாகவோ, தேவையானவர்களாகவோ இல்லாமல் நாம் ஆகவும் கூடும். பொருளாதாரச் சிக்கல்களும், உடல்நிலையும், பிரிவுகளும் நம்மை நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும். ஆனாலும் நம்மை மீட்டெடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை அடையும் யத்தனிப்பே தக்க செயல்!

மகிழ்ச்சி என்பதற்கு ஓய்வான சூழல் தேவையில்லை. பிறர் தரும் பரிசுப்பொருள்களோ, சம்பள உயர்வோ அவசியம் இல்லை. பிறரின் புகழ்ச்சிகளும், அங்கீகாரமும், அன்பும் கூட மகிழ்வுடன் நாமிருக்க முக்கியமில்லை.

வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளும் செல்வமும் புகழும் மகிழ்ச்சியை தந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. சொகுசுக் கட்டிலில் தூக்கம் வராமல் புரள்பவனின் நிலையையும்; பாதையோரம் கட்டாந்தரையில் மெய்மறந்து தூங்குபவனையும் பார்க்கையில் இதை நாம் உணரலாம்.

20250212224800306.jpg

[சித்திரம் - தேவா]

நிம்மதியும் ஊக்கமும் நிறைவும் தான் நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை அளிப்பது என்பதைப் புரிந்து கொள்வோம்.

மகிழ்ச்சியையும் நிறைவையும் நோக்கிய பயணம்தான் வாழ்க்கை என்று பெரும்பாலானோர் உழன்று கொண்டிருக்கிறோம். பயணத்தின் இலக்கு மகிழ்ச்சி என்பது அல்ல.... அந்தப் பயணமே மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள வேண்டியது என்பதை மறந்து விடலாகாது..

மகிழ்வுடன் இருக்கும் தருணங்களைப் பற்றிய குற்ற உணர்வை ஏனோ சிலர் அடைகிறோம். வாழ்க்கைப் பயணத்தின் வழியெங்கும் மகிழ்ச்சி சிறுசிறு பொட்டலங்களாக நாம் அனுபவிக்கக் காத்திருக்கின்றன.

நேற்றைய தோல்விகளுக்கு இன்று நாம் வெதும்புவதும் நாளை ஏதாகுமோ என்று கலங்கி விதிர்விதிர்த்துப் போவதும் நமது ‘இன்றை’ குலைத்து விடும். இவ்விதம் கலக்கத்தில் கழிந்த நம் ‘இன்று’ நாளைய பாரமாக உருமாறும்.

பனியிதழ் விரிக்கும் புது மலர்களுடனே தான் ஒவ்வொரு நாளும் விடிகின்றது.

இன்று நாம் ஜீவித்திருக்கிறோம் என்பதே மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்லவா?

20250212224923579.jpg

[சித்திரம் - தேவா]

நமக்காக உதித்த சூரியன், காலையின் இதமான காற்று, ஆனந்தமாக சிறகடிக்கும் பறவைகள், தூரத்து மணி ஓசை, கிளுகிளுவென எங்கோ ஒலிக்கும் குழந்தையின் சிரிப்பு, தெருவோடு செல்லும் கீரைக்காரியின் நீட்டி முழக்கும் குரலின் லயம் …… வேறெந்த யோசனையுமின்றி இவற்றைக் கவனித்தாலே போதும். சிறுகச் சிறுக மகிழ்ச்சி மனதோரம் நுரை கட்டும்.

இப்படி நிகழ்ந்தால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

பல் துலக்கியதும் பளிரிடும் நம் பல்வரிசையையும், வாயின் புத்துணர்ச்சியையும் அந்தக் கணத்தில் ரசிக்க தெரிந்தால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

காலை நேரத்து காபியையோ அல்லது தேநீரையோ கடகடவென விழுங்காமல் மெதுவாக ரசித்துக் குடிக்கிறீர்களா? அதன் வாசத்தை முகர்ந்து மெய் மறக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

20250212225013152.jpg

குளிக்கப் போனீர்கள்…. தண்ணென நம் சரீரத்தில் விழுந்தோடும் நீரும் நாம் தேய்த்துக்கொள்ளும் நமக்கு விருப்பமான சோப்பின் மணமும் புத்துணர்வூட்டுகிறதா? அந்த கணம், இறைவன் படைப்பித்த நமது அங்கங்களின் நேர்த்தியையும் கவனம் கொண்டு ரசிக்கிறீர்களா? எனில் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

குளிக்கும் நேரம் எதையாவது பாடுகிறீர்களா? ? கர்ண கடூரமாக விசில் அடிக்கிறீர்களா?? நேற்று குளித்தபோது என்ன பாட்டு பாடினோம் என்று நினைவுகூர முடிகிறதா? அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

குளித்துமுடித்து உடைமாற்றி உங்கள் பூஜை அறையில் பத்து நிமிடமேனும் இருப்பீர்கள் என்று தெரியும். பூஜை அறையில் தூபத்தின் மணம்; நீங்கள் நீங்கள் முணுமுணுக்கும் ஸ்லோகத்தில் அதைக் கற்றுத் தந்த அம்மாவின் குரல்; உள்ளத்தில் மெல்ல அமரும் இஷ்ட தெய்வத்தின் மங்கள சொரூபம் என உணர முடிந்தால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

காலை உணவுக்கு அமர்கிறீர்கள். உங்கள் தாயோ மனைவியோ உங்களுக்காக தயாரித்த அந்தச் சிற்றுண்டியை அள்ளி விழுங்காமல் அமைதியாக ரசித்து உண்கிறீர்கள். அறுசுவைகளில் சில சுவைகள் உங்கள் நாவில் யாகம் செய்யும் நேரம் அது. ரசித்தே உண்டீர்களா? சமைத்தவருக்காக ஒரு சபாஷ் சொன்னீர்களா?

‘நீ சாப்பிட்டாயா’ என்று கேட்டீர்களா? ஆமெனில் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

நேர்த்தியாக உடை உடுத்து அலுவலகம் செல்கிறீர்கள்…. எதிர்பட்டவர்களைப் பார்த்து புன்னகைக்கிறீர்களா? சிலரிடம் நலம் விசாரிக்கிறீர்களா?? காலை வணக்கத்தை சொல்பவர்களுக்கு மனதார பதில் வணக்கம் சொல்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர் தான்!

நாம் செய்கின்ற அலுவல்தான் நம் குடும்பத்திற்கு சோறு போடுகிறது. வேலை என்பது உற்சாகம். மகிழ்வான மனநிலை தரும் ஊக்கம் நம் வேலையை சிறப்பானதாக ஆக்குகிறது.

பிறர் கடமைகளில் உதவுவதும் கூட மகிழ்ச்சியைக் கூட்டுவது.

செய்யும் பணியினின்று பணி ஓய்வுபெற்ற பின்னர், இதே அலுவலகத்தில் நுழைந்து, இன்று செய்யும் வேலையை மேற்கொள்ள நீங்கள் விரும்பினாலும் முடியாது என்பதை அறிவீர்கள் தானே? இந்த விதம் நீங்கள் மனமொப்பி பணிபுரிந்தால் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலை உகந்தவர் தான்!

மேற்சொன்னவற்றிலிருந்து ஒன்று புலப்படும். சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் உற்சாகமும் நிகழ்காலத்தில் தான் பொதிந்திருக்கிறது. நடப்பின் போக்கில்தான் மகிழ்ச்சி மலர்கள் மணம் வீசுகின்றன. நம் கவனமும் இருப்பும் மேற்கண்டவற்றில் இருந்தாலே போதும். நம் மனம் லேசாகி அந்தந்தக் கணங்களை உயிர்ப்புடன் வாழ்வோம். சந்தேகமே வேண்டாம்!

வீட்டிலிருக்கும் நேரம் இல்லத்தாரோடு இயல்பாக பேசுங்கள். எப்போதோ பாதியில் நின்றுபோன சச்சரவை மீண்டும் இழுத்துவைத்து சண்டையைத் துவங்காதீர்கள்.

குரல் உயர்த்திப் பேசுதல் பேச்சின் நியாயத்தை பின்னுக்குத் தள்ளி விடும். உங்கள் எண்ணங்களையும் தரப்பையும் பொறுமையுடன் எடுத்துரையுங்கள்.

முரண்படும் மனைவியிடமோ அல்லது கணவனிடமோ, பேசுகையில் அவர்களுடைய பேச்சின் சாரத்தில் மட்டுமே கவனம் வையுங்கள். உங்கள் பக்கம் தவறென்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். ஒரு மென்தொடுகையோ சிறு அணைப்போ கூட பிரச்சனையின் தீவிரத்தை வெகுவாகக் குறைத்து விடும்.

அவ்வப்போது தரப்படும் சிறு பரிசுகளும், புகழ்ச்சிகளும் வசிய ரகசியங்கள். அதேநேரம் உங்களுக்கு தரப்பட்டது எதுவாயினும் பிரமிப்புடன் ஏற்கும் மனநிலையைக் கொள்ளுங்கள்.

உங்கள் அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உங்கள் வாழ்க்கைத்துணையின் முகம் விகசித்திருப்பதைப் பாருங்கள்.

உங்கள் மகிழ்ச்சியை அயலார் வீட்டில் தேட முடியாதல்லவா? குடும்பமே உங்கள் ஆனந்த களன். அசராமல் அடித்து ஆடுங்கள்!

நமக்கு நிகழ்பவை சிலநேரம் நம்மை குப்புறத் தள்ளி நோகடிக்கலாம். ஆனாலும் விழுந்த சுருக்கில் எழுந்துவிட முயலுங்கள். நிகழ்வின் அனுபவம் யாவுமே நமக்கு பாடம் தான். அங்கேயே குமுறிக்கொண்டும் குறுகி நின்றும் வருந்தத் தேவையில்லை. அடுத்து மேற்கொள்ள வேண்டியதைப் பற்றி சிந்தித்து தாண்டிச் செல்லுங்கள்.

உங்கள் இல்லத்தில் நடக்கும் சின்ன விஷயங்களிலும் உங்கள் கைத்தடம் படர்ந்திருக்கட்டும்.

உங்கள் துணையின் தலைவலிக்கு அமிர்தாஞ்சனம் மருந்து தான். அதை உங்கள் கைவிரல்களால் மெல்லத் தேய்த்துவிட்டுப் பாருங்கள். தலைவலி விலகிய நெற்றியின் மேல் உங்கள் அன்பு மகிழ்ச்சியெனும் கிரீடமாக அமர்ந்திருக்கும்.

குழந்தைகளுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்களின் உலகில் நுழைய கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுடனான உங்கள் நேரம், உங்கள்வரையில் பாசத்தின் வெளிப்பாடுதான். ஆனால் குழந்தைகளுக்கோ அந்நேரம் வாழ்நாள் நினைவுகள்!

எந்நேரமும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தும்பியைத் துரத்தும் அம்பியாக இருக்கத் தேவையில்லை. எல்லாப்போதுகளும் மகிழ்ச்சி தரவல்லவையாக இருப்பதில்லை தான். ஆனாலும்கூட மனதாலும் செயலாலும் அந்த நேரச் சோர்வை எதிர்கொண்டு அடுத்த வேலையை பார்ப்பதும் மகிழ்வை நோக்கிய பயணம்தான்.

அவ்வப்போது குடும்பத்துடன் புதிய இடங்களுக்குச் சென்று வரலாம். அல்லது அருகில் உள்ள பூங்காவோ, கடற்கரையோ, கோயிலோ எதுவானாலும் சரி. சேர்ந்திருப்பதே முக்கியம். குடும்பத்தினரின் சிறு சிறு வெற்றிகளையும் கொண்டாடுங்கள். தோல்விகள் நேருங்கால், அவர்கள் துவண்டு விடாமல் ஆதரவு காட்டுங்கள்.

கோபம், பொறாமை, தன்னிரக்கம், தயக்கம், குற்ற உணர்வு போன்றவை சாத்தானின் பாசறை ஈட்டிகள். மகிழ்ச்சிக்கு முற்றும் ஒவ்வாத குண நலன்கள். அவை உங்களிடம் இருக்குமானால் முதலில் அவற்றைத் துடைத்தெறியும் வழியைப் பாருங்கள். அவற்றையொழித்த வெற்றிடத்தில், சந்தோஷமும் உற்சாகமும் நிரப்பிக்கொள்ளும் தன்மையன.

மகிழ்ச்சிக்கு பழகிவிட்ட உள்ளம் தோல்விகளால் துவளுவதில்லை. அவை கவனச்சிதறல் கொள்ளுவதும் இல்லை.

தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவை எங்கும்போல மகிழ்ச்சிக்கும் உதவும் பழக்கங்கள்.

நம் இலக்குகளை அடைவதில் ஈடற்ற மகிழ்ச்சி பெருகக் காண்பீர்கள். மேற்கொண்ட பணியை, தக்க நேரத்தில் சிறந்த முறையில் முடித்தபின் எழும் ஆனந்தமும் நிறைவும் சொல்லில் அடங்காதவை.

நமக்கு வாய்த்தவற்றை உளமாற ஏற்று, அவற்றை உவகை தரும் களன்களாக மாற்றிக்கொள்வதில் தான் நமது வெற்றி, சௌக்கியம், சந்தோஷம் எல்லாம் அடங்கியிருக்கின்றன.

செயலே மகிழ்ச்சி! நேயமே மகிழ்ச்சி! மன்னித்தல் மகிழ்ச்சி! விட்டுக் கொடுத்தலும் விட்டுவிடாமல் தாங்குதலும் பெரும் மகிழ்ச்சியே! ஆரோக்கியமும் அறிவும் என்றென்றும் மகிழ்ச்சிக்குரியவை.

இனியெல்லாம் சுகமே!