ரோஹித் ஷர்மாவின் அம்மாவும் ருக்மணி அம்மாவும்
அண்மையில் மும்பையில் ஒரு சதாபிஷேக விழாவிற்கு மனைவியுடன் சென்றிருந்தேன். வீடு திரும்ப காரில் ஏறுமுன், அங்கு வந்த பெண்மணியுடன் என் மனைவியும் மைத்துனியும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என் மனைவி பக்கத்து சொந்தம். எனக்கும் அறிமுகம் செய்வித்தனர்.
மையமாக தலையாட்டி சிரித்து வைத்தேன்.. கிளம்பினோம்.
கார் நகரத் தொடங்கியவுடன் என் மனைவி கேட்டாள்.
"அவங்க யார் தெரியுமா?”
“தெரியல்லையே!”
“அவங்க ரோஹித் ஷர்மாவோட அம்மா.."
அடடா! என்னாது ரோஹித்தோட அம்மாவா?தெரிந்திருந்தால் 'அசோகர் உங்கள் மகரா?' பாணியில் அந்த மாதரசியிடம், “நல்ல பிள்ளையைப் பெத்திருக்கீங்க!” என்று ஏதோ பேசியிருக்கலாமே எனத் தோன்றியது.
வீடு திரும்பியதும். ‘ரோஹித் ஷர்மாவோட மம்மியைப் பார்த்தேன் ஆர்யா!’ என்று பேரனிடம் சொன்னேன்.
“தோனியோட மம்மியைப் பார்த்திருந்தா பேசு. இதுல்லாம் வேணாம்” என்றான் அந்த CSK சாம்பிராணி!
அந்த காலத்துல நானெல்லாம் இவனை மாதிரியா தீர்மானமா இருந்தேன் என்று எண்ணியபடியே படுக்கப் போனேன்.
ஏதோ உடம்பு வலி.. ஜுரம் போல் இருந்தது.
இல்லாத வழக்கமாய் போர்த்திக் கொண்டேன். போட்டுக் கொண்ட பாரஸிடமால் மாத்திரையின் சிறுகசப்பு வாயில் இன்னும்....
ராத்திரி என் சொப்பனத்துல ரோஹித்தின் அம்மாவிடம் என் அம்மா மல்லுகட்டிக் கொண்டிருந்தாள்.
'எங்க மோகி கூட லெஃப்ட் ஹேண்டர் தான்... கடலூர் வடக்குக் கவரைத் தெரு கிட்டிப்புள் சாம்பியன். கேரம்போர்டு கூட லொட்டாங்கையால நாசூக்கா ஆடுவான்.
ஹை ஜம்ப் கூட மீன் புரண்டு குதிக்கறமாதிரி ஸ்டைலா குதிப்பான் தெரியுமா?''
"ருக்மணி மாமி! உங்க பிள்ளை கிரிக்கெட் ஆடுவானோ?" இது ரோஹித் அம்மா.
"அவன் ஶ்ரீராம்கூட எங்கியோ கிரிக்கெட்டுன்னு தான் ஆடப்போவான்.
ஆனா அவனுக்கு கிரிக்கெட்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட் இல்லேன்னு நினைக்கிறேன். ஆனா, மைக்கைப் பிடிச்சான்னா வள்ளுவர் கிட்ட ஆரம்பிச்சு வள்ளலார் வரைக்கும் சரடு இழுத்துப் பேசுவான். எங்க மோகனோட அசல் பேருகூட சுவாமிநாத சர்மா தான் தெரியுமா?"
"அப்படியா மாமி? தேவலையே!"
"ஆமாம்.. எட்டு வயசிலயே மஹாபெரியவா முன்னாடி ஸ்பஷ்டமா ஸஹஸ்ரநாமம் சொல்லி வெள்ளிக் காசு வாங்கினான். உங்களுக்குத் தெரியுமோ? எங்க மோஹி நிமிஷமா கவிதைன்னு எழுதுவான். சின்ன வயசுலேயே நிறைய கூட்டத்துக்கு நடுவே அழுத்தம் திருத்தமா 'வெள்ளை நிறத்தொரு பூனை...'ன்னு குரல்லயே ஜாலம் பண்ணுவான். உங்க பிள்ளை கவிதைல்லாம் சொல்வனோ?"
"இல்ல மாமி! ரோஹித் கிரிக்கெட் மட்டுந்தான்னு இருந்துட்டான்" என்று ஸ்ருதி குறைந்து அந்தத் தாய் தாம்பூலம் வாங்கிக் கொண்டு சென்றாள்.
"என்னம்மா இது? நூறு பேருக்கு முன்னே நான் கவிதை சொல்றதைப் பெரிசா அவங்ககிட்டே பேசுறியே? எவ்ளோ பெரிய ஸ்டேடியத்துலே ரோஹித் ஆடறான்? உலகமே டிவியில அவன் ஆட்டத்தை பார்க்குது! இப்படி அடாவடியா அடிச்சி வுடறியேம்மா?"
"போடா மக்கு! அவங்க ரோஹித்துக்கு அம்மான்னா நான் மோகனுக்கு அம்மா.
சந்தி பண்ணிட்டு வா... அடைமாவு இருக்கு....குணுக்கு போட்டுத் தரேன்"
சடுதியில் அம்மா விலகிப் போனாள். திடீர் குளிரின் நடுக்கலில் கனவு கலைந்து எழுந்தேன். அம்மா, குணுக்கு... சொப்பன மாயை... அம்மா இப்போது இல்லயா?
ஜுரத்துக்கு சுறுசுறுவென அவள் தரும் மிளகு சீரகம் தட்டிப்போட்ட புனப்பாகமான கஞ்சியும், காய்ந்த நாரத்தை விள்ளலும்.. அதைவிட .. அவளின் அண்மையும்...
இந்த நினைவுகள் மட்டும் தான் சாஸ்வதம்.. அவ்வப்போது கனவில் வரும் அம்மா, சுகவீனத்தின் போதுமட்டும் கண்டிப்பாக வந்துவிடுவாள்.
அவள் வந்தபின்னே, சுகவீனமென என்ன தான் இருக்கும்?
ரோஹித் சர்மாவை சந்திக்கும் சந்தர்ப்பத்தை அவங்க அம்மாவிடம் சொல்லி ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
சந்திக்கையில் ரோஹித்துக்கு ரெண்டே கேள்விகள்…..
1. பேட்டிங் பண்றப்போ ஏன் சிடுசிடுன்னு இருக்கே?
2. சந்தியெல்லாம் ஒழுங்கா பண்ற தானே?
Leave a comment
Upload