நாம் இதுவரை பார்த்த அணிகளின் குடும்பத்தில் உள்ள கடைசி அணியான பிறிது மொழிதல் அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.
உவமானத்தை மட்டும் கூறிவிட்டு உவமேயத்தை கூறாமல் விட்டுவிடுவது (கூற வந்த விஷயத்தை நேரே கூறாமல், வேறொரு பொருளை வைத்து உவமானப்படுத்துவது) பிறிது மொழிதல் அணி என்பது பெரியோர் வாக்கு.
எடுத்துக்காட்டு
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் - திருக்குறள்
உவமானம் - அளவுக்கு மீறி ஒரு வண்டியில் பாரத்தை ஏற்றினால், அந்த பாரம் மயிலிறகாகவே (அதாவது மிகவும் இலகுவான பொருள்) இருந்தால் கூட வண்டி சக்கரத்தின் அச்சு முறிந்துவிடும்.
சொல்ல வந்த உண்மையான பொருள் - நம்முடைய எதிரிகள் வலிமை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அவர்கள் நம்மை வென்று விடுவார்கள். இது வலியறிதல் (தன்னுடைய வலிமை மற்றும் எதிரியின் வலிமையை தெரிந்து கொள்ளுதல்) என்ற அதிகாரத்தில் வருவதால், இவ்வாறு பொருள் கொள்ள வேண்டும்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும்
யானை வெரூஉம் புலிதாக் குறின் - திருக்குறள்
உவமானம் - நல்ல பருத்த கனமான உடம்பினையும், நீளமான பலமான தந்தங்களையும் உடைய யானையாக இருந்தாலும், புலி அதனை தாக்கும் பொழுது, அந்த யானையானது பயந்து ஓடும்.
சொல்ல வந்த உண்மையான பொருள் - பேரரசன் எவ்வளவு தான் படை பலமும் ஆயுத பலமும் கொண்டிருந்தாலும், அவனுக்கு தன்னம்பிக்கை என்கிற மனோ பலம் ஆகிய ஊக்கம் இல்லை என்றால், அவனைவிட சிற்றரசன் கூட அவனை தோற்கடித்து விடுவான். இந்த குறட்பா, ஊக்கமுடைமை என்கிற அதிகாரத்தில் வருவதால், இதன் பொருளை இவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து - திருக்குறள்
உவமானம் - முள் மரமானது, இளமையான செடியாக இருக்கும் பொழுதே அதனை நாம் களைய (வெட்ட) வேண்டும். அது பெரிதாகி மரமான பிறகு வெட்ட முயன்றால், அது வெட்ட முயன்றவரின் கைகளை தன்னுடைய முட்களால் தாக்கி விடும்.
சொல்ல வந்த உண்மையான பொருள் - எதிரிகள் சிறியதாக வலிமை இல்லாமல் இருக்கும் பொழுதே அவற்றை நாம் களைய வேண்டும். அவர்களின் வலிமை முற்றிய பிறகு களைய நினைத்தால் அது நமக்கே தீமையாக முடிந்து விடும்.
இதே போல வடமொழியிலும் ஒரு சுபாஷிதம் உள்ளது. அதை கீழே கொடுத்துள்ளேன் :
அக்நி𑌃 ஶேஷம் ருண𑌃 ஶேஷம் ஶத்ரு𑌃 ஶேஷம் ததைவ ச |
புந𑌃 புந𑌃 ப்ரவர்தேத தஸ்மாத் ஶேஷம் ந காரயேத் ||
மேலே உள்ள சுலோகத்தில் பொருள் என்னவென்றால், நெருப்பையோ, கடனையோ, எதிரியையோ மிச்சம் வைக்க கூடாது. அப்படி நாம் வைத்தோம் என்றால் (அந்த மிச்சத்தை அழிக்கவில்லை என்றால்), மீண்டும் மீண்டும் அது வளர்ந்து கொண்டே போகும்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது - திருக்குறள்
உவமானம் - காட்டு முயலை குறி தவறாமல் வீழ்த்தி கொல்ல பயன்படுத்திய அம்பை விட, யானையை வீழ்த்த நினைத்து குறி தவறிய வேலை வைத்திருப்பது ஒரு வீரனுக்கு மிகவும் இனியதாகும்.
சொல்ல வந்த உண்மையான பொருள் - வலிமையான ஒரு படையிடம் போரிட்டு தோற்பது என்பது, வலிமையற்ற ஒரு படையிடம் வெற்றிக் கொள்வதை விடவும் இனிமையானது மற்றும் போற்றத்தக்கதாகும்.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து - திருக்குறள்
உவமானம் - நல்ல வலிமையான கால்களாகிய சக்கரங்களை உடைய, நெடு நெடு என்று வளர்ந்துள்ள உயரமான தேர், கடலில் ஓடாது. அதாவது மூழ்கிவிடும். அதேபோல கடலில் ஓடக்கூடிய நாவாய் ( படகு மற்றும் கப்பல்), நிலத்தில் ஓட முடியாது.
சொல்ல வந்த உண்மையான பொருள் - ஒரு அரசனையோ அல்லது எதிரியையும் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் - இடம், பொருள், ஏவல் என்கிற இந்த மூன்று விஷயங்களையும் நன்றாக தெரிந்து கொண்டு, அதன் பிறகு நாம் நம்முடைய முடிவுகளை எடுக்க வேண்டும். அதாவது நாம் இருக்கும் இடம் நமது கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது எதிரியின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல அப்போதைய சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நம்முடைய நுட்பங்களை கையாள வேண்டும். பல போர்களில் அரசர்கள், இயற்கை சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல போர்களை நடத்தினார்கள் என்று நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். மூன்றாவதாக ஏவல் என்று கூறக்கூடிய அதிகார நிலை. படை எவரின் கீழ் உள்ளது, யார் யார் படையினை தலைமை ஏற்று வழி நடத்துகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இவற்றை புரிந்து கொண்டு நடந்தால், போரிலோ அல்லது எந்த போட்டியிடுமோ நம்மால் வெற்றி கொள்ள முடியும். இப்பொழுது நான் சொன்ன இந்த அனைத்து விஷயங்களும் மகாபாரத போரில் மிகுதியாக கையாளப்பட்டுள்ளது. மகாபாரத போரை பற்றி படித்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும்.
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும் - திருக்குறள்
உவமானம் - எலிகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து கடலை போல ஆரவாரம் செய்து நின்றாலும், நாகத்தின் மூச்சுக்காற்று பட்ட உடனே அவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
சொல்ல வந்த உண்மையான பொருள் - வலிமையற்ற பகைவர்கள் என்னதான் கூட்டமாக நின்று ஆரவாரம் செய்தாலும், வலிமையான ஒரு வீரன் போர்க்களம் போகும்பொழுது அவர்கள் தெறித்து ஓடுவார்கள்.
இதைத்தான் சிவாஜி படத்தில் ரஜினி, “பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும்” என்று கூறுவார்.
பிறிது மொழிதல் அணி திருக்குறளில் நிறைய கையாளப்பட்டுள்ளது. அதற்கு காரணம், ஒரு அரசனுக்கு நேரடியாக ஒரு விஷயத்தை கூறும் பொழுது அது சற்று சுருக்கென்று இருக்கும். அதனால் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மென்மையாக, அதே நேரத்தில் உடனே புரிந்து கொள்வதற்கு ஏற்றார் போல திருக்குறள்களை திருவள்ளுவர் பிரான் உருவாக்கியுள்ளார்.
அகப்பொருள் இலக்கியத்திலும் பிறிது மொழிதல் அணி மிகுதியாக உள்ளது. அவற்றை உள்ளுறை உவமம் என்ற பதத்தால் அறிந்து கொள்ளலாம். அவற்றை இடக்கரடக்கல் காரணமாக இங்கே நாம் கூறுவதற்கு இல்லை. அவற்றை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், கூகுளில் தேடி தெரிந்து கொள்ளலாம்.
இத்தோடு பிறிது மொழிதல் அணி முடிந்து விட்டது.
அடுத்த வாரம் வேறொரு அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.
Leave a comment
Upload