சென்னை நோக்கி பயணப்பட சோழன் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை சந்திப்பிற்கு வருகின்ற நேரம்,அவசர அவசரமாக பயணிகள் ஏறுவதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். " நன்னா பார்த்தியாடா ரகு, S2 கோச்தானே என திரும்பத்திரும்ப கேட்ட அப்பாவை ஒருவித எரிச்சலோட பார்த்த ரகு "ஏம்பா, எனக்குத் தெரியாதா நான் என்ன குழந்தையா வாங்கோ என சலித்துக் கொண்டு விறுவிறுவென நடந்தான்.
வயசாயிட்டு, அதான் எது மேலும் ஒரு சந்தேகம்,பயம் என அப்பா விளக்கியதும், "அப்பா, சும்மா இருங்கோ அவர் பார்த்துப்பார் என மருமகள் சொல்ல அமைதியானார்.
அதோ,அந்த மரம் நான் வச்சது தெரியுமோ ? என தான் மாயவரத்தில் பணியில் இருந்த காலத்தில் பிளாட்பாஃர்மில் நடைப் பயிற்சி செய்ததாகவும் அப்போது நட்ட மரமிது எப்படி வளர்ந்து மக்களுக்கு பயனளிக்கிறது என விளக்கினார் தனது ஏழுவயது பெயரன் விகாஷிடம்.
கோச் வந்து நிற்குமிடம் அறிந்து நடைமேடையில் நின்றபோது, "வணக்கம் சார். என்ன சென்னை பயணமா எந்த கோச் ? என்ற பெருமாள் கோவில் பட்டர் ராமானுஜத்திடம், ஆமாம் என் பையனோட போகிறேன் அப்படியே நாலு கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு என தகவல் சொல்லிக் கொண்டியிருந்தார் அப்பா.
நடைபாதை அமரும் இருக்கையில் கால்களை நீட்டி ஏகாந்தமாய் படுத்துக்கொண்டியிருந்தார் ஒருவர்,தோற்றத்தில் யாசிப்பவர் போலிருக்க அவரை எழுப்பினாலும் அமர முடியாத இடமாகியிருந்தது அது என தோன்றியது ரகுவிற்கு.
என்ன ரகு சென்னையா ? என தன் தோள் தட்டிவரை “ ஏய் நீ எப்போது ஊருக்கு வந்தே ? சொல்லவேயில்லை என தன் பால்யக்கால நண்பனைப்பார்த்த ரகு, மனைவி உஷாவிடம் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தான், பரஸ்பரம் கோச் விபரங்கள் பேசி முடிக்க சுறுசுறுவென வந்த சோழன் விரைவு வண்டி நிலையத்திற்குள் வந்து நின்றது.
நிற்கின்ற அந்த மூன்று நிமிடத்திற்கும்,ஏறி அமர்வதற்கும் மிகச் சரியாகவேயிருந்தது. லக்கேஜ்களை எடுத்து வைத்து அப்பாடா என சீட் பார்த்து அமர்ந்த ரகுவிற்கு ஆச்சரியமாய் இருந்தது.
"வாட் ஏ ஆன்லைன் சிஸ்டம்" அப்பாவிற்கு வயசு எண்பத்தைந்து என குறித்தும் அப்பாவிற்கு அப்பர் பெர்த் ஒதுக்கிய ரயில்வேதுறையை நினைத்து நொத்துக்கொண்டான். கீழ்தள இருக்கை இரண்டும் காலியாக இருந்தது.
இன்னமும் அந்த யாசிப்பவர் எந்த சலனமுமின்றி நடைமேடை இருக்கையில் இவர்களைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்த ரகுவிற்கு மனசு என்னமோ செய்தது. மகன் விகாசும் அவர் யாருப்பா ஏன் அவர் சென்னை வரலையா ? என மழலையாய் கேட்க.
யாராக இருக்கும் ஏன் இங்கே இருக்கிறார்? இத்தனை நபர்கள் கண்டும் காணாமல் அவரை கடந்துச் செல்கிறோமே, நமக்குத்தான் அவரைத் தெரியலை ஒரு வேளை அவருக்கு நம்மைத் தெரியுமோ என்னவோ குழப்பத்துடன் மயிலாடுதுறையிலிருந்து விடுப்பட்டது வண்டியும், ரகுவின் மனதும்.
சிதம்பரம் ரயில் நிலையம் தாண்டியதும் சாப்பிடலாம் என மகன் விகாசோடு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து தனது ரயில் நினைவுகளையெல்லாம் கதைபோல சொல்லிக்கொண்டே வந்தான் ரகு.
வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் வந்தபோது,ஹிஜாப் அணிந்த பெண்ணுடன், விகாஷ் வயதினையொத்த பெண் குழந்தையும், ரகுவின் அப்பா வயதினையொத்த ஒருவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தமர்ந்தவருக்கு ரகுவின் வயதிருக்கும்.
வண்டி சிதம்பரம் நெருங்கியதும் “ சாப்பிடலாமா என பெரியவர் கேட்டதும், ஹிஜாப் அணிந்த பெண் பதில் சொல்லாமல் கணவனைப் பார்த்தாள். புரிந்துக்கொண்ட அவளின் கணவனோ ரகுவிடம் நீங்கள் சாப்பிட்டுடீங்களா ? என கேட்க இல்லை இனிதான் என்ற ரகுவிடம்
"நீங்கள் சாப்பிடுங்கள் பிறகு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார் ரகுமான்.
“ஏன் பெரியவருக்கு பசிக்கிறது அவருக்கு கொடுங்கள், நாங்கள் பிறகு சாப்பிட்டுக்கொள்கிறோம் என்ற ரகுவிடம்,
“இல்லை அவருக்கு நான்வெஜ்! நீங்கள் சாப்பிடுங்கள் உங்களுக்கு சங்கடமாக இருக்கும் என ரகுமான் தயங்கியதற்கு..
நோ பிராப்ளம்! நாங்கள் அடுத்த இருக்கையில் அமர்ந்து சாப்பிடுகிறோம் நீங்கள் சாப்பிடுங்கள் என்று எழுந்துக் கொண்டே
ரகுவின் அப்பா சொல்ல சாரி சார்.. என்ற ரகுமானிடம், இதிலென்ன இருக்கு என்றனர். சாப்பிட்டு முடித்தபின்பு, எங்கே சென்னையா ? என்ற ரகுவிடம்
ஆமாம், வாப்பா ஹஜ் யாத்திரை போறாங்க அவர்களை வழியனுப்பிடப் போகிறோம் என்றார் ரகுமான்.வைத்திஸ்வரன் கோவிலில் பிரபல ஜவுளிக்கடை நம்முடையது என்ற பெரியவர் தற்போது மூப்பின் காரணமாக பையன் ரகுமான்தான் பார்த்துக் கொள்கிறான் என அவர் சொன்னதும்,
அப்படியா! எங்களுக்கு ஊர் கதிராமங்கலம்தான்! முன்னெல்லாம் உங்க கடையிலேதான் தீபாவளி ஜவுளி வாங்குவோம். அதுவும் எங்கள் குல சாமிக்குத் தேவையான வஸ்த்திரங்களும் உங்களிடம்தானே வாங்குவோம் என்ற ரகுவின் அப்பா, தான் IOB வைத்தீஸ்வரன் கோவில் பிரிவில் வேலைப் பார்த்து ஓய்வுப்பெற்றது, தனது மனைவியை இழந்த பிறகான வாழ்க்கை எனப் பேசிட ரகுமானின் அப்பாவுடன் தோஸ்த்தானர்.
ரகு படித்ததெல்லாம் மயிலாடுதுறையில் வேலை சென்னையிலும், குலதெய்வ அபிஷேகத்திற்கு வந்துவிட்டு திரும்புவதையும் சொல்லிக் கொள்ள அறிமுகமாகி சகஜமானார்கள்.
இரண்டு பெண்களுக்கும் பேசிக்கொள்ள ஏதும் விஷயமில்லாமல், குழந்தைகள் விகாஷ் மற்றும் ஆயிஷா அவர்களின் பள்ளி,வீட்டில் சாப்பிட அடம் பிடிப்பது என குழந்தைகளுக்கான பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டே வந்ததும் வண்டி கடலூர் வந்திருந்தது.
அப்பாவிற்கு கீழிருக்கையை கேட்காமலேயே விட்டுக்கொடுத்த ரகுமானிற்கு நன்றி கூறினான் ரகு.இதென்ன சார்...அவருக்கும் என் அப்பா வயசுதானே, வலி பொதுவானதுதானே நிம்மதியாக உறங்கட்டும் என்று வாப்பாவின் காலடியில் அமர்ந்து அல் குரான் புத்தகத்தை எடுத்து படிக்கலானார்.
7:46. நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய இவர்களுக்கிடையே ஒரு திரை (யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்
7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக் கவில்லையே!” என வாப்பாவிற்காக சத்தமாக படித்த ரகுமான் முகத்தினை துடைத்துக்கொண்டு ஓய்வெடுப்பதாகச் சொல்லி படுக்கச்சென்றார்.
இந்த வாசகத்தினை கேட்ட பிறகு ரகுவிற்கு ஏனோ மயிலாடுதுறை நிலையத்தில் கண்ட அந்த யாசகர் நினைவில் வந்துப்போனார்...அடையாளத்தை கை விட்டதால் அவரால் அப்படி இருக்கமுடிகிறதோ ?
எத்தனை தேவையில்லாத அடையாளங்களை வாழ்க்கையில் சுமந்துத் திரிகிறோம். சாதி,மதம் , நான் யார் தெரியுமா ? என் செல்வாக்கு என்ன ? இப்படி எத்தனச் சுமைகளை வாழ்க்கைப் பயணத்தில் சுமந்து பயணத்தை கடினமாக்கி கொள்கிறோம், பயணம் ஒன்று மட்டுமே அடையாளத்தை அழித்து நாம் அனைவரும் சகப்பயணி என உணர வைத்துவிடுகிறது. பக்கவாட்ட இருக்கையில் அமர்ந்திருந்த விகாஷூம், ஆயிஷாவும் பரஸ்பரம் தோள் மீது கையைப் போட்டபடி வெளியே நகரும் காட்சிகளை மகிழ்வோடு ரசித்துப் பார்த்துக்கொண்டு வந்தனர். எந்த அடையாளமும் இதுவரை இல்லை அவர்களிடம்...குழந்தைகள் என்ற ஒற்றை அடையாளம் தவிர. அப்படியே இருக்கட்டும் என வாழ்த்த தோன்றியது ரகுவிற்கு.
உண்மையான புனிதயாத்திரை ஒன்று நிகழ்ந்துக் கொண்டிருந்தது எனத் தோன்றியது ரகுமானுக்கு.
Leave a comment
Upload